“எ..என்னத்தான் இது..?? நான் கிஃப்ட் தந்தேன்றதுக்காக.. நீங்களும் ஏதாவது தரணும்னுலாம் அவசியம் இல்ல..!!”
“அப்படி இல்லடா.. உனக்கு எதாவது தரணும்னு எனக்கே தோணுச்சு.. அதான்..!!”
“அதுக்காக..?? கைல போட்ருந்ததை கழட்டி தரணுமா..??”
“ஹாஹா.. என்ன பண்றது.. கிஃப்ட் ஷாப் போறதுக்கு இப்போ எனக்கு டைம் இல்லையே..?? பட் ஒன்திங்..”
“என்ன..??”
“இந்த ரிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்..!! இப்போ இது உன்கிட்ட இருக்குறதுல.. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்..!!”
8
புன்னகையுடன் சொல்லிவிட்டு, சிபி ஆதிராவையே ஆசையாக பார்த்தான்.. அவளும் கணவனையே வைத்த கண் வாங்காமல் காதலாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அப்போதுதான் சிபிக்கு திடீரென அந்த ஆசை வந்தது.. படக்கென ஆதிராவை அருகே இழுத்து அவளுடைய உதடுகளுடன் தனது உதடுகளை பொருத்திக் கொண்டான்.. அழுத்தமாக ஒரு ஈரமுத்தம் பதித்தான்..!! அவளை அணைக்க நகர்ந்தபோது.. காரின் கூரையினின்று தொங்கிக்கொண்டிருந்த அந்த காதல் கிளிகளின் பொம்மையை.. அவனது கை தட்டிவிட.. அந்தக்கிளிகளும் இப்போது அருகே நகர்ந்து மூக்குரசி முத்தமிட்டுக் கொண்டன..!!
“ம்ம்.. கெளம்பலாம் ஆதிரா.. டைமாச்சு..!!” முத்த ஈரத்தை சுவைத்துக்கொண்டே சிபி சொன்னான்.
“ம்ம்.. சரித்தான்..!!”
ஆதிராவும் நாணம் விலகாமலே சொல்லிவிட்டு.. காரை ஸ்டார்ட் செய்தாள்.. கியர் மாற்றி ஆக்சிலரேட்டரை மிதிக்க, கார் வேகமெடுத்து சாலையில் ஓட ஆரம்பித்தது..!! மிதமான வேகத்திலேயே வண்டியை செலுத்தினாள் ஆதிரா..!! ஹன்சூர் ரோட்டை தாண்டி மைசூர் பேலஸை அடைந்ததும்.. வலது புறம் செல்கிற அந்த அகலமான சாலையில் வண்டியை திருப்பினாள்..!! உடனே ஆக்சிலரேட்டரை அழுத்தி வேகத்தை கூட்டினாள்..!!
அதே நேரத்தில்.. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்.. அதே சாலையின் குறுக்காக அமைந்திருந்த அந்த மேம்பாலத்தில்..
சர்ரென்று விரைந்து சென்ற அந்த பேருந்தில் இருந்து.. ஒரு உணவுப் பொட்டலம் வெளியே தூக்கி எறியப் பட்டது..!! எங்கிருந்து வந்தன என்று தெரியாமலே ஒரு பெரிய காகக்கூட்டம் பறந்து வந்து.. உடனடியாய் அந்த உணவுப் பொட்டலத்தை சூழ்ந்து கொண்டன..!! ‘கா.. கா.. கா..’ என்று கரைந்து சப்தமிட்டுக்கொண்டே.. அந்த பொட்டலத்தை கொத்தி கொத்தி குதற ஆரம்பித்தன..!! ஒரே ஒரு காகம் மட்டும்.. அந்த கூட்டத்துடன் சேராமல்.. தனித்து.. அந்த உணவைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாத மாதிரி.. மேம்பாலத்தின் கைப்பிடி சுவரில் அமர்ந்தவாறு.. சாலையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.. சட்டென இப்போது பறக்க ஆரம்பித்தது..!!
“பிடிச்சிருந்ததா..??” சிபி குறும்பாக கேட்டான்.
“எது..??”
“முத்தம்..!!”
“ம்ம்.. பிடிச்சிருந்தது..!!” ஆதிரா நாணத்துடன் சொன்னாள்.
“அப்போ.. இன்னொன்னு..??” கேட்டுக்கொண்டே சிபி ஆதிராவின் தோளில் கைபோட,
“ஐயோ விடுங்கத்தான்..!!”
சிணுங்கிய ஆதிரா ஒருகணம் சாலையில் இருந்து பார்வையை விலக்கி, மீண்டும் சாலையை பார்த்தாள்..!! அதே கணத்தில்.. காரை நோக்கி பறந்து வந்த காகம்.. தனது இறக்கைகள் இரண்டையும் அகலமாக விரித்தவாறு ‘படீர்ர்ர்ர்’ என கார்க்கண்ணாடியில் வந்து மோதி.. தனது கூரிய அலகால் அந்த கண்ணாடியை ‘ச்சிலீர்ர்ர்ர்’ என்று ஒரு கொத்து கொத்தியது..!!
அவ்வளவுதான்..!! ஆதிரா பக்கென அதிர்ந்து போனாள்.. ‘ஆஆஆவ்வ்’ என்று கத்தினாள்.. குபீர் என்று ஒரு பய சிலிர்ப்பு அவளுக்குள்.. குழம்பிப்போனவள் ஸ்டியரிங்கை சரக்கென வளைத்தாள்.. ப்ரேக்குக்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தமாக மிதித்தாள்..!! கார் சர்ரென உச்சபட்ச வேகத்துடன் சீறியது.. அதேவேகத்தில் சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறவும், ஜிவ்வென மேலே பறந்தது.. பத்து மீட்டர் தூரம் பாய்ந்து சென்று, ஒருபக்கமாக சாய்ந்தவாக்கில் தரையில் போய் விழுந்தது.. அப்படியே தரதரவென தார்ச்சாலையில் சறுக்கிக்கொண்டு போய்.. சாலையோரமாக நின்ற மரத்தின் மீது ‘டமார்ர்ர்ர்’ என்று மோதி நின்றது..!!