எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 17 45

வாசலில் வாட்ச்மேன் இல்லை.. கேட்டை திறந்த ஸ்ரீனிவாச பிரசாத் உள்ளே நுழைந்தார்.. அசோக் அவரை பின்தொடர்ந்தான்..!! கேட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் இருந்த வீட்டுக்கு.. இங்கிருந்தே சிமென்ட்டில் சாலை போடப்பட்டிருந்தது.. ஒரே ஒரு கார் மட்டுமே செல்லும் அகலத்திலான குறுகலான சாலைதான்..!! அந்த சிமெண்ட் சாலையின் இருபுறமும்.. பச்சை பச்சையாய் கொத்து கொத்தாய் வளர்ந்திருந்த செடிகள்.. அழகாகவும் கச்சிதமாகவும் முடிவெட்டிக் கொண்டிருந்தன அந்த செடிகள்..!! அசோக் அந்த செடிகளில் விரல்கள் நுழைத்து தடவியவாறே.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் பின்னால் சென்றான்..!!

வீட்டை அடைந்ததும்.. ஸ்ரீனிவாச பிரசாத் காலிங் பெல் அழுத்தினார்..!! உள்ளே குருவி கத்துகிற எஃபக்டில் காலிங் பெல் கதறுவது வெளியிலேயே கேட்டது..!! இருந்தாலும் சிறிது நேரத்திற்கு உள்ளிருந்து எந்த எதிர்ச்செயலும் இல்லை..!! மேலும் இரண்டு மூன்று முறை காலிங் பெல் அழுத்தி ஸ்ரீனிவாச பிரசாத் சோர்ந்து போன சமயத்தில்தான்.. அசோக் எதேச்சையாக கதவின் மீது கை வைக்க.. அது கொஞ்சமாய் திறந்து கொண்டது..!! உடனே இருவரது முகத்திலும் ஒரு ஆச்சரியம்.. கொஞ்சம் குழப்பம்..!!

“தெறந்தேதான் இருக்கு ஸார்..!!”

சொல்லிக்கொண்டே அசோக் கதவின் மீது கைவைத்து நன்றாக உள்ளே தள்ள.. அது முழுவதுமாய் திறந்து கொண்டது..!! இயல்பாக உள்ளே நுழைந்து வீட்டுக்குள் பார்வையை வீசிய இருவரையும்.. ஒரு உச்சபட்ச அதிர்ச்சி வந்து தாக்கியது.. இருவரது இருதயங்களும் படக்கென சொடுக்கிவிடப்பட்டு, தறிகெட்டு துடித்தன..!!

உள்ளே.. கருஞ்சிவப்பான ரத்தவெள்ளத்தில்.. இரண்டு மனித உடல்கள் மிதந்து கொண்டு கிடந்தன.. இரண்டுமே ஆணின் உடல்கள்..!! ஒருவன் சோபாவில் சரிந்திருந்தான்.. ஒருவன் தரையில் வீழ்ந்திருந்தான்..!! தலை, மூக்கு, மார்பு, தொடை என.. உடலின் எல்லா பாகங்களில் இருந்தும் சராமாரியாக குருதி வெளிப்பட்டு வெளியே வடிந்திருந்தது..!! ரத்தத்தில் நனைந்த கண்ணபிரானின் உலோக சிலை வேறு.. அவர்களுடன் சேர்ந்து தரைவிரிப்பில் வீழ்ந்து கிடந்தது..!! இருவரும் நூறு சதவீதம் இறந்துவிட்டார்கள் என்பது.. பார்க்கையிலேயே தெரிந்தது..!!

ஸ்ரீனிவாச பிரசாத்தாவது பரவாயில்லை.. அசோக் அந்த மாதிரி ஒரு அதிர்ச்சியை தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை.. கண்களில் கண்ட காட்சியில் அப்படியே வெலவெலத்துப்போய் நின்றிருந்தான்..!! ஸ்ரீனிவாச பிரசாத்-தான் முதலில் சுதாரித்துக் கொண்டார்.. எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல், படக்கென அவருடைய வலதுகையில் அந்த பிஸ்டல் முளைத்தது.. அதன் மேற்புறத்தை பிடித்து இழுத்து, சேஃப்டி கேட்சை விடுவித்துக் கொண்டவர்.. தடதடவென வீட்டுக்குள் ஓடினார்..!! அசோக் என்ன செய்வதென்றே தெரியாமல்.. இறந்து கிடந்த பிணங்களை பார்த்தவாறு அசையாமல் நின்றிருந்தான்..!!

உள்ளே ஓடிய ஸ்ரீனிவாச பிரசாத்.. கையில் விறைப்பாக பிடிக்கப்பட்ட துப்பாக்கியுடன்.. ஒவ்வொரு அறையாக சென்று அலசினார்.. ஒருவரும் அகப்படவில்லை..!! பின்பு வீட்டுக்கு பின்புறமாக ஓடினார்.. பின்புற வாசல் திறந்தே கிடந்தது..!! வீட்டுக்கு பின்புறம் காம்பவுண்ட் சுவர் இல்லை.. பெரிய பரப்பிலான காலியிடம்.. குட்டையும், நெட்டையுமாய் ஆங்காங்கே செடிகள்..!! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை.. ஆள்நடமாட்டம் ஏதும் இல்லை..!!

ஸ்ரீனிவாச பிரசாத் சிறிது நேரம் அங்கேயே நின்று சுற்று முற்றும் பார்த்தார்.. உபயோகமாக எதுவுமில்லை என்று அறிந்தபிறகு, ‘ச்சே’ என்ற சலிப்புடன் மீண்டும் வீட்டுக்குள் புகுந்தார்..!! அவர் வீட்டுக்குள் புகுந்த சில வினாடிகளில்.. வீட்டு சுவற்றை ஒட்டியிருந்த புதருக்குள் இருந்து.. மீரா வெளிப்பட்டாள்..!!!! அவளுடைய முகம் வியர்த்து வடிந்தது.. செடிகளுக்கு மத்தியில் நீளமாக சென்ற அந்த ஒத்தையடிப்பாதையில் நுழைந்து.. புயல்வேகத்துடன் ஓடினாள்..!!

ஹாலுக்குள் நுழைந்த ஸ்ரீனிவாச பிரசாத்.. பிஸ்டலின் சேஃப்டி கேட்சை போட்டு.. இடுப்பில் செருகிக்கொண்டார்..!! பிரம்மை பிடித்தவன் மாதிரி நின்றிருந்த அசோக்கிடம்..

“உள்ள யாரும் இல்ல அசோக்..!! உசுரு இருக்குதான்னு பாத்தியா..??” என்று கேட்டார்.

அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே.. அவரே ரத்தவெள்ளத்தில் மிதந்தவர்களிடம் பார்வையை திருப்பினார்.. அதில்.. சோபாவில் சரிந்திருந்தவனின் முகத்தை சற்றே உன்னிப்பாக கவனித்ததும்.. நெற்றியை சுருக்கினார்..!!

“இவன் நெற்குன்றம் காசில..?? இவன் எப்படி இங்க..??” என்று குழப்பமாக முணுமுணுத்தார்.

விழுந்து கிடந்தவர்களிடம் குனிந்து.. அவர்களது மூச்சையும், நாடித்துடிப்பையும் சோதனை செய்து பார்த்தார்..!! ஒருசிலவினாடிகள்.. பிறகு எழுந்துகொண்டவாறே.. அசோக்கிடம் சொன்னார்.!!

“உசுரு இருக்குற மாதிரி தெரியல அசோக்.. எதுக்கும் நான் ஆம்புலன்ஸ்க்கு கால் பண்றேன்..!! நீ அப்படியே அசையாம நில்லு.. இங்க இருக்குற எதையும் தொட்டுறாத.. சரியா..??”

பதட்டமான குரலிலேயே சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத்.. பாக்கெட்டில் இருந்து செல்ஃபோன் எடுத்தார்.. ‘பட் பட்’டென அந்த செல்ஃபோனை அழுத்தியவர்.. பிறகு..

“ஆங்.. கனகு..” என்றவாறே வாசலை நோக்கி நடந்து வெளியே சென்றார்.

அசோக் வீட்டுக்குள்ளேயே அசையாமல் நின்றிருந்தான்.. இதயத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னுமே அவனால் மீளமுடியவில்லை.. உண்டான படபடப்பு அடங்க சிறிது நேரம் பிடித்தது அவனுக்கு..!! கொஞ்சம் கொஞ்சமாய் அவன் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போதுதான்.. அவனுடைய கவனத்தை அந்தப்பொருள் ஈர்த்தது..!! உடனே அவனுடைய முகத்தில் ஒரு சீரியஸ்னஸ்.. கண்களில் ஒரு கூர்மை..!! நின்ற இடத்தில் இருந்து மெல்ல அடியெடுத்து வைத்தான்.. தரையில் விழுந்து கிடந்தவனை அடைந்ததும்.. சற்றே குனிந்து.. கீழே கிடந்தவனின் காலுக்கடியில் கிடந்த அதை கையில் எடுத்தான்..!!

கோல்ட் கலரினால் ஆன.. ஹார்ட் ஷேப்பினால் ஆன.. பளபளப்பான அந்த குட்டி பென்டன்ட்..!! மீராவின் ப்ரேஸ்லட்டில் மினுமினுப்புடன் தொங்குமே.. அதே பென்டன்ட்..!!

அதைப் பார்த்ததுமே அசோக்கிற்கு சுரீர் என்றது.. அவனுடைய புத்தி சரமாரியாய் எதை எதையோ யோசிக்க ஆரம்பித்தது..!! ‘அப்படியானால்.. அப்படியானால்.. மீராதான் இதையெல்லாம் செய்ததா..?? காதலித்து ஏமாற்றியவனை கத்தியெடுத்து பழி தீர்த்துக் கொண்டாளா..??’ ஆமாம் என்றது அவனது மூளை.. நம்ப மறுத்தது அவனது மனம்..!!

கருப்பொருள் ஒன்றிருக்குதடா..