எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 17 45

“அ..அந்த மாதிரி பண்ணுனா.. மீரா பத்தின விஷயம் ந்யூஸ்பேப்பர்ல-லாம் வரும்ல..??” அசோக் கேட்க, ஸ்ரீனிவாச பிரசாத் நெற்றியை சுருக்கினார்.

“ஆ..ஆமாம்..!!”

“எ..எல்லாம் என்னோட அஸம்ப்ஷன்தான்.. இருந்தாலும்.. ஒ..ஒருவேளை.. ஒருவேளை அது உண்மையா இருந்தா.. அவ வாழ்க்கைல நடந்த அந்த அசிங்கம்.. அப்புறம் ஊருக்கே தெரிஞ்சு போயிடும்.. இல்ல..??”

“ம்ம்..!!” அசோக் எங்கே வருகிறான் என்று ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு இப்போது தெளிவாக புரிந்தது.

“வேணாம் ஸார்.. எனக்கு அதுல விருப்பம் இல்ல..!!”

“இ..இல்லடா.. கொஞ்சம் யோசி.. அவளை கண்டுபிடிக்கிறதுக்கு இது ஒரு..”

“அவளை கண்டுபிடிக்கிறது எனக்கு முக்கியந்தான் ஸார்.. ஆனா அதை விட.. அவளுக்கு எந்த களங்கமும் வராம பாத்துக்குறது ரொம்ப ரொம்ப முக்கியம்..!! அவளை என் உயிரைவிட அதிகமா நேசிக்கிறேன்.. என்மூலமா அவளுக்கு ஒரு கெடுதல் நடந்துச்சுனா.. சத்தியமா அதை என்னால தாங்கிக்கவே முடியாது ஸார்..!! அவ எனக்கு கெடைக்காட்டா கூட பரவால.. இந்த மாதிரி ஊருக்கே அந்த விஷயம் தெரிஞ்சு, அவ அசிங்கப்பட கூடாது..!! ப்ளீஸ் ஸார்.. தயவு செஞ்சு மீரா பத்தி எந்த விஷயமும் இவங்கட்ட சொல்லிராதிங்க.. நான் சொன்னதெல்லாம் உங்க மனசோடவே இருக்கட்டும்.. ப்ளீஸ் ஸார்.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. ப்ளீஸ்..!!”

அழுதுவிடுகிற குரலில் படபடவென அசோக் கெஞ்சலாக சொல்ல, ஸ்ரீனிவாச பிரசாத் அவனையே திகைப்பாக பார்த்தார். அந்தப்பார்வையில் ‘ஏமாற்றி சென்றவள் மீதுதான் இவனுக்கு எத்தனை காதல்..?’ என்பது மாதிரியான பிரமிப்பும் கலந்திருந்தது. முழுதும் கரைந்துபோன சிகரெட் இப்போது அவருடைய விரலை சுட, கையை உதறி அதனை விசிறினார். தலையை மெலிதாக உலுக்கிக்கொண்டவர், வேறுபக்கமாக பார்வையை வீசினார். தூரத்தில் கேட்டுக்கருகே தெரிந்த மனித கும்பலை வெறித்தவாறே, எதையோ யோசிக்க ஆரம்பித்தார்.

அவ்வளவு நேரம் அவரிடம் அப்பாவியாக, பரிதாபமாக ஒரு முகத்தை காட்டிக்கொண்டிருந்த அசோக்.. இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அந்த முகத்தை மாற்றிக் கொண்டான்..!! அவனுடைய முகம் இப்போது பாறை போல இறுக ஆரம்பித்தது..!! அப்படியே தலையை மெல்ல திருப்பி.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான்..!! அவருடைய முகத்தில் தெரிந்த குழப்பத்தை பார்த்ததும்.. அசோக்கின் மனதுக்குள் ஒருவித நிம்மதியும், திருப்தியும் ஒருசேர பரவின.. அவனது உதட்டோரத்தில் ஒரு குறும்புன்னகை மெலிதாக கசிந்தது..!!

‘மீரா பற்றிய பேச்சினை இவரே ஆரம்பித்தது, மிக வசதியாக போயிற்று.. இவர் ஆரம்பித்ததை மீராவுக்கு சாதகமாக திருப்பியாயிற்று..!! குற்றத்தை புலனாய்வு செய்யப் போகிறவர்களிடம்.. மீரா பற்றிய விஷயங்களை இவர் சொன்னால்.. நிச்சயம் அது அவளுக்கு ஆபத்தாகவே முடியும்..!! அவர்களுடைய சந்தேகப்பார்வை மீரா இருக்கிற திசைக்கே திரும்பக்கூடாது.. அதற்கு.. மீரா பற்றி இவர் அவர்களிடம் வாயை திறக்கவே கூடாது..!! என் மீது இவருக்கு அன்பிருக்கிறது.. என் கெஞ்சலை இவர் நம்பிவிட்டார்.. இப்போது குழப்பத்தில் இருக்கிறார்.. சொல்வதா வேண்டாமா என்று..!! இவரை மேலும் குழப்ப வேண்டும்.. இவருக்கு என் மீதிருக்கும் அன்பினை, மீராவுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளவேண்டும்..!!’

மனதில் அந்த மாதிரி எண்ணம் ஓடவும்.. அசோக் இப்போது மீண்டும் தனது முகத்தை அப்பாவித்தனமாக மாற்றிக் கொண்டான்..!! மேலும் சில சென்டிமன்டான டயலாக்குகளை அவசரமாக யோசித்துக் கொண்டவன்.. அவற்றை ஸ்ரீனிவாச பிரசாத்திடம் சொல்வதற்காக வாயை திறந்தபோதுதான்..

“என்ன ஸார்.. இங்க வந்து தனியா நின்னுட்டிங்க..??”

அவர்களுக்கு பின்னால் இருந்து அந்த சப்தம் கேட்டது.. உடனே இருவரும் திரும்பி பார்த்தார்கள்..!! தடித்த மீசைமயிர்களுடனும்.. கனத்த கன்னக்கதுப்புகளுடனும்.. இரவு நேரத்திலும் அணிந்த குளிர்கண்ணாடியுமாக.. இன்ஸ்பெக்டர் மலரவன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்..!! இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் அவரிடம்,

“ஒன்னுல்ல ஸார்.. உங்க வேலையை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னுதான்..!!” என்றார் மெலிதான புன்னகையுடன்.