எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 17 45

“கொஞ்ச நாள் முன்னாடி நான்கூட நெறைய கவிதைலாம் எழுதுவேன் அசோக்..!! என்னோட பாஸ்ட்லாம் உங்களுக்கு தெரியும்ல.. நான் அந்த மாதிரி ஒரு கொடுமையான பீரியட்ல இருந்தப்போ.. நெறைய எழுதுவேன்..!! எல்லாம் இந்த மாதிரி கவிதையாத்தான் இருக்கும்.. ஆம்பளைங்க மேல வெறுப்பு.. அப்படியே ஒரு ஆத்திரம்.. அடக்க முடியாம ஒரு பழியுணர்ச்சி..!! மனசுல இருக்குற கோவத்தை எல்லாம்.. இந்த மாதிரி கவிதையாத்தான் கொட்டுவேன்..!!”

மும்தாஜ் சொல்லிக்கொண்டே போக.. அசோக்கின் மூளை இப்போது சுறுசுறுப்பாகியிருந்தது.. மிக தீவிரமாக எதையோ யோசித்துக்கொண்டிருந்தது..!! அசோக்கிற்கு அந்த கவிதையின் அர்த்தம் ஓரளவுக்கு தெரியும்.. அகராதி புரட்டி அந்தக்கவிதையின் உள்ளர்த்தத்தை கொஞ்சம் உணர்ந்தே வைத்திருந்தான்..!! ‘ஒரு ஆணிடம் ஏமாந்த பெண்ணின் வேதனையை சொல்கிற கவிதை இது’ என்கிற அளவிலேதான் அவனது எண்ணம் இருந்ததே ஒழிய.. மீராவுக்கு நிஜத்திலே நடந்த கொடுமையின் பிரதிபலிப்பாக இருக்குமோ என்று.. அவனது மனம் எப்போதும் சந்தேகப்பட்டது இல்லை..!! இப்போது மும்தாஜ் சிந்திய வார்த்தைகளில்.. அவனுக்கு அந்த சந்தேகம் பிறந்திருந்தது..!!

“உன்னை பாக்குறதுக்கு முன்னாடி.. ஆம்பளைங்கன்னாலே ஒரு வெறுப்புல இருந்தேன் அசோக்.. எந்த ஆம்பளை மேலயுமே எனக்கு நல்ல அபிப்ராயம் இல்ல..!!”

“நான் பாவம் பண்ணிருக்கேன் அசோக்.. பெரிய பாவம் பண்ணிருக்கேன்..!!”

அவனை விட்டு பிரிந்து செல்கிற அன்று.. கண்களில் நீர் வழிய மீரா சொன்ன வார்த்தைகள்.. இப்போது அசோக்கின் நினைவுக்கு வர.. அவனது சந்தேகம் வலுப்பட ஆரம்பித்தது..!! அந்தப்பக்கம் மும்தாஜ் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.. இந்தப்பக்கம் அசோக், நடந்துமுடிந்த பலசம்பவங்களை பரபரவென நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..!! அவனுடைய உணர்வு நரம்புகளில் எல்லாம், சர்சர்ரென ஒரு அதிர்வு மின்சாரம் பாய.. அந்த சம்பவங்கள் அனைத்தும் அவன் மனதில் சரசரவென குழப்பப்படங்களாய் ஓடின..!!

“என் அக்கா சொன்னேன்ல……………………….. கொஞ்ச நாள் முன்னாடி அவ ஒரு பையனை லவ் பண்ணிட்டு இருந்தா…………………………… ஒருநாள் அந்தப்பையன் திடீர்னு காணாமப் போயிட்டான்………………. நான் யூ.எஸ்ல இருக்கேன்.. இங்கயே செட்டில் ஆகப் போறேன்.. இத்தனை நாளா நான் உன்னை லவ் பண்றதா சொன்னதுலாம் பொய்.. சும்மா நடிச்சேன்.. சும்மா ஜாலிக்காத்தான் உன் கூட பழகினேன்.. நான் இங்க வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. நீயும் நடந்ததை மறந்துட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.. அப்டின்னு…………..” – ஃபுட்கோர்ட்டில் அமர்ந்துகொண்டு, முகத்தை மிக இயல்பாக வைத்தவாறு, அக்காவின் காதல் என்கிற பெயரில் மீரா சொன்னவை.

“நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..??” – புன்னகையுடன் கேட்டாள் பவானி.

“மொளைக்கிறதுக்கு முன்னாடியே, ஆம்பளை புடிக்கிற வேலையை விட்டுட்டு.. ஒழுங்கா படிச்சு முன்னேர்ற வழியைப் பாரு.. போ..!!” – பூங்காவில் ஒரு பள்ளி மாணவியிடம் வெறுப்பை உமிழ்ந்தாள் மீரா.