கமலி 736

“ஏன் அவ்வளவு நேரம் தூங்கல?”
“தூக்கமே வரலக்கா. என் புருஷனுக்கும் ஜாமீனே கெடைக்க மாட்டேங்குதுங்களா? பாதில நிக்கற வீடு நகை கடனு அது இதுனு ஏதேதோ யோசனை பண்ணி தூக்கமே போயிருச்சு”
“நைட்டுகூட மூணு மணிக்கு நாயெல்லாம் கொழைச்சிட்டுருந்துச்சுனு அண்ணா சொன்னாரு”
“நைட்டுங்களா? நம்ம நாயிங்களா?”
“ஆமா. ஏன்னு தெரியல. அடிக்கடி கொழைச்சுதுனு சொன்னாரு”
“ஆமாக்கா.. எனக்கு கூட கேட்டுச்சு ஆனா நான் பெருசா எடுத்துக்கல. அண்ணாவும் நைட் தூங்கலீங்களா?”
“அந்தண்ணா எங்க நைட்ல தூங்குது? அது ஒரு ஆந்தை. அது இப்பனு இல்ல. சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். மூணு மணி நாலு மணிக்குத்தான் தூங்கும்”
“அப்படி என்னக்கா பண்ணுவாரு தூங்காம?”
“போன நோண்டறதுதான். அதுல ஏதாவது படிச்சிட்டிருப்பாரு. என்கூட குடும்பம் நடத்துனத விட அந்த போனுகூட குடும்பம் நடத்துனதுதான் அதிகம். வெறும் படிக்கறது மட்டும்தான். வேற எதுவும் பாக்கறதும் கெடையாது. நமக்கெல்லாம் படிக்கவே புடிக்காது. நாலு எழுத்து படிச்சா தூக்கம் வந்துரும். ஆனா அவரை பாத்தேனா பக்கம் பக்கமாக படிச்சுட்டே இருப்பாரு.. கருமம் கண்ணே போயிரும்”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே நிருதி முன்னால் வந்தான். அவனைப் பார்த்தவுடன் சட்டென கமலிக்குள் ஒரு சிலிர்ப்பெழுந்தது. முகம் வெட்கி அவன் கண் பார்த்து “பாத்திங்களாணா. அக்கா உங்களை பத்தி எவ்வளவு பெருமையா பேசறாங்கனு” என்று சிரித்தாள்.
“ஆமா கமலி கேட்டேன். அவளும் படிப்பா இந்த சினிமா, நடிகர் சீரியல் நடிகர் நடிகைகள் யாரு எவர வெச்சிருக்கா. இப்ப யாருகூட லிங்க்ல இருக்கா இந்த மாதிரி விசயத்தை எழுத்து கூட்டியாவது படிச்சுருவா. அப்றம் யூ டியூப்ல பாக்கறதும் அவங்களை பத்திதான். உனக்கு நடிகர் நடிகைகள பத்தி எந்த டவுட் இருந்தாலும் இவகிட்ட கேட்டா போதும். எல்லா தகவலும் தெரிஞ்சிக்கலாம்” என்றான்.
அவன் மனைவி சிரித்தபடி “எங்க ரேஞ்சுக்கு அது போதும். ஒண்ண பாத்தமா ஜாலியா சிரிச்சமானு இருக்கணும். இது அத விட்டுட்டு சீரியஸா பேசிட்டு எப்ப பாரு கொரங்கு மாதிரி சிடுசிடுனு இருக்கறது” என்றாள்.
கமலி தயங்கி “ஒண்ணு கேக்கணும்ணா” என்றாள்.
“கேளு?”
“ரெண்டு எடத்துல ஒரு எடத்தை வித்துடலாம்னு சொல்றாருணா. ஏகப்பட்ட கடன். பயங்கர சிக்கல். வட்டி கட்டவே கண்ணாமுழி திருகுது. பேங்க் லோனும் சிக்கலாருக்கு. ஜாமீன் வேற இழுத்தடிச்சிட்டே இருக்கு.. அதான் என்ன பண்ணலாம்னு..”
“ஏற்கெனவே சொல்லிட்டேன் கமலி. உங்க வீட்டுக்காரருக்கு அட்டம சனி நடக்குது. இதுல கடக லக்கினத்துக்கு வரக்கூடாத சனி தசை செவ்வாய் புக்தி வேற. ரெண்டுமே மிதுனத்தோட தொடர்பு. இந்த புக்தி முடியறவரை சிறைவாசம் இருக்கும். அட்டம சனி இன்னும் ஒரு வருசம் பாக்கியிருக்கு”
“அப்ப ஒரு வருசம் வெளிய வர முடியாதாண்ணா?”
“இல்ல.. இப்ப செவ்வாய் புக்தி முடிஞ்சதும் வந்துருலாம். அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. ஜாமீன் ட்ரை பண்ணிட்டே இரு கெடைச்சிரும். ஆனா வீடு இப்ப முடிக்க முடியாது”
“ஆமாணா. நீங்க சொன்னப்பறம்தான் இத்தனை சிக்கல். அப்ப கைல காசும் இருந்துச்சு. வீடு கட்டிரலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம். அந்த காசெல்லாம் எப்படி கரைஞ்சுது எங்க போச்சுனே தெரியல. இப்ப வட்டி கட்ட முடியாத அளவுக்கு கடனு..”
“நீ வீட்டு வேலை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே ஜாதகம் பாத்துருக்கணும். அட்டமனி கைல இருக்கற சேமிப்பை எல்லாம் கரைச்சுரும். அதோட இப்ப உங்க வீட்டுக்காரருக்கு முடிஞ்சு அப்படியே பையனுக்கு ஆரம்பிக்குது. அதுவும் குடும்பத்தை கடுமையா பாதிக்கும். ஆக மொத்தம் இன்னும் மூணு நாலு வருஷம் கடன்லருந்து மீள முடியாது. அகலக்கால் வெக்காம இருக்கறது ரொம்ப ரொம்ப நல்லது”
“அந்த எடம் விக்கறதுணா?”