கண்ணாமூச்சி 5 56

சிறிது நேரம்..!! தூக்கம் வராவிட்டாலும், கணவனின் அணைப்பில் கட்டுண்டு சொக்கிக்கிடந்த ஆதிரா.. சற்று தாமதமாகத்தான் சிபியிடம் அந்த மாற்றத்தை உணர்ந்தாள்.. உடனே முகத்தை சற்று நிமிர்த்தி பார்த்தவளுக்கு, ‘களுக்’ என்று சிரிப்பு வந்துவிட்டது.. அந்த சிரிப்பின் சப்தம் வெளியே வராமல் இருக்க, அவசரமாய் தன் வாயை பொத்திக் கொண்டாள்..!!

ஆதிராவுக்கு சிரிப்பு எழுந்ததன் காரணம்.. சிபி இப்போது அசந்து தூங்கிப் போயிருந்தான்..!! கண்கள் செருகிப்போய்.. வாயை ‘ஓ’வென்று திறந்து வைத்தவாறு.. மெலிதான குறட்டை ஒலியுடன்..!! ஆதிராவை தூங்க வைக்கிற முயற்சியில் அவனே அவ்வாறு அசந்து தூங்கிப் போயிருக்க.. அவளோ முகத்தில் ஒரு புன்னகையுடன்.. ‘ஹையோ, ஹையோ’ என தலையில் தட்டிக் கொண்டாள்..!!

அவனுடைய உறக்கத்தை கலைக்காமல் அவனது மார்பில் இருந்து விலகினாள்.. முன்வந்து புரண்டிருந்த கேசத்தை விலக்கி அவனது நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள்..!! என்ன செய்யலாம் என்று ஒருகணம் யோசித்தவள்.. பிறகு, கீழே செல்லலாம் என்ற முடிவுடன் கட்டிலில் இருந்து எழுந்தாள்..!!

படியிறங்கி ஹாலுக்கு வர.. சமையலறைக்குள் வனக்கொடி பாத்திரத்தை உருட்டுகிற சப்தம் கேட்டது.. !! நடந்து வந்து சோபாவில் அமர்ந்தாள்.. ஏதோ ஒரு சிந்தனையுடனே ரிமோட் எடுத்து டிவியை ஆன் செய்தாள்.. டிவி ஓட ஆரம்பித்த பிறகும் அந்த சிந்தனையிலே மூழ்கியிருந்தவள், சிறிது நேரம் கழித்துத்தான் டிவி திரையை பார்த்தாள்..!! விலங்குகளின் வாழ்க்கைமுறை பற்றிய ஆவணப்படங்களை ஒளிபரப்பு செய்கிற அலைவரிசை அது.. முதுகில் மூன்று கோடுகளோடு ஒரு அணில், மரக்கிளைகளில் அங்குமிங்கும் துள்ளியோடிக்கொண்டிருக்க, பின்னணியில் ஒரு ஆணின் குரல் ஆங்கிலத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது..!!

“ப்ச்..!!”

சலிப்பை உதிர்த்த ஆதிரா, கையிலிருந்த ரிமோட்டில் வேறு சேனல் மாற்றுகிற பட்டனை அழுத்தினாள்.. அகழி வந்த முதல்நாள் நடந்தது போலத்தான்.. சேனல் மாறவில்லை.. அதே சேனலே தடையில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது..!! ஆதிரா நான்கைந்துமுறை கட்டைவிரல் நோக அந்த பட்டனை அழுத்தமாக அமுக்கிப் பார்த்தாள்.. சேனல் மாறவில்லை..!! ரிமோட்டை பிடித்து உள்ளங்கையில் ‘பட்.. பட்.. பட்..’ என்று தட்டினாள்.. மீண்டும் டிவி முன்பு ரிமோட்டை நீட்டி முயன்று பார்த்தாள்.. அலைவரிசையில் எந்த மாற்றமும் இல்லை.. அணில் இப்போது கொட்டை கொறித்துக் கொண்டிருந்தது..!!

எரிச்சலான ஆதிரா சோபாவில் இருந்து விருட்டென எழுந்தாள்.. டிவியை நெருங்கி அதன் அடிபாகத்தில் இருந்த பட்டனை அழுத்தி வேறு சேனல் மாற்ற முயன்றாள்.. ம்ஹூம்.. பலன் இல்லை.. அதே சேனல்..!!

“ப்ச்.. என்னாச்சு இந்த டிவி சனியனுக்கு..??”

வாய்விட்டே எரிச்சலை வெளிப்படுத்திய ஆதிரா.. சில வினாடிகள் டிவி திரையையே வெறுப்பாக பார்த்தாள்..!! பிறகு, அந்த வெறுப்பு சற்றும் குறையாமல்.. ‘ஆணியே புடுங்க வேணாம்’ என்று முனுமுனுத்தவாறே.. டிவியின் கேபிள் கனெக்ட் ஆகியிருக்கிற மெயின் ஸ்விட்சை பட்டென ஆஃப் செய்தாள்.. அடுத்த நொடியே அவளுடைய மனதுக்குள் மெலிதான ஒரு திகில் உணர்வு.. ஸ்விட்ச் ஆஃப் செய்தபிறகும், அணைந்துபோகாமல் டிவி ஓடிக்கொண்டிருந்தது.. தெளிவில்லாமல்.. அலை அலையாக.. ஒருமாதிரி வெடுக் வெடுக்கென வெட்டிக்கொண்டு..!!

“ஸ்ஸர்ர்ர்ரக்.. ஸ்ஸர்ர்ர்ரக்.. ஸ்ஸர்ர்ர்ரக்..!!” என்று வினோத சப்தம் வேறு.

அணைந்துபோகாத டிவியையே ஆதிரா விரிந்த விழிகளுடன் மிரட்சியாக பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான்.. படக்கென திரையில் அந்த பிம்பம் தோன்றியது.. சிவப்பு அங்கி போர்த்திய உருவம்.. முகத்தில் வழிகிற கூந்தல் கற்றைகள்.. அந்த கூந்தலின் வழியாக இவளையே உற்றுப்பார்க்கிற ஒற்றை விழி..!!

மிரண்டு போனாள் ஆதிரா.. பயத்தில் பதறித்துடித்த இருதயத்துடன்.. ‘ஆ’வென்று கத்துவதற்கு அவள் வாயெடுக்கும்போதே.. டிவி திரை படாரென அணைந்துபோய் ஒற்றைப் புள்ளியாக மறைந்தது..!! அதே நொடி..

“தட்ட்.. ட்ட்டடட்ட்டட்ட்ட… டமார்.. தட்ட்.. தட்.. தட்..!!!!!” என்று பக்கத்து அறைக்குள் இருந்து பலத்த சப்தம்.

மிரட்சி அப்பிய விழிகளுடனே ஆதிரா பக்கத்து அறையை திரும்பி பார்த்தாள்.. பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த வனக்கொடியும் பதறிப்போய் வெளியே ஓடிவந்தாள்..!!

“எ..என்னம்மா சத்தம்..??”

“எ..என்னன்னு தெரியலையே..!!”

ஆதிராவும் வனக்கொடியும் குழப்பமும் திகைப்புமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. பிறகு, சப்தம் வந்த அறையை நோக்கி மெல்ல நகர்ந்தார்கள்.. முன்பு ஆதிராவும் தாமிராவும் தங்கிக்கொள்கிற அறைதான் அது..!! அறைக்கதவை தள்ளி இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.. அறைக்குள் சில பொருட்கள் ஆங்காங்கே கலைந்து கிடந்தன.. பீங்கான் கோப்பை தரையில் உருண்டிருந்தது.. மேஜை விளக்கு தலைகுப்புற கிடந்தது.. கம்ப்யூட்டர் மவுஸ் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது..!!

இவர்கள் உள்ளே நுழைந்ததுமே.. திறந்திருந்த ஜன்னல் கம்பிகளின் வழியாக அணில் ஒன்று வெளியே ஓடுவது தெரிந்தது..!!

“ச்சே.. இந்த அணிலு பண்ற அட்டகாசம் தாங்க முடியல.. எப்பப்பாரு.. வீட்டுக்குள்ள பூந்து எதையாவது உருட்ட வேண்டியது.. எல்லாத்தையும் வெஷத்தை வச்சு கொல்லப்போறேன் ஒருநாளு..!! ஹ்ம்ம்.. இந்த ஜன்னலை யாரு இப்படி தெறந்து வச்சான்னு தெரியலையே.. மூடித்தான கெடந்துச்சு..??”

2 Comments

  1. Very very suspence

Comments are closed.