அசுரன் Part 3 46

மதிவதனி ஆற்றில் குளித்து விட்டு மேலே வந்து ஆடை மாற்றி கொண்டாள்.வில்லை எடுத்து கொண்டு தன் படையை நோக்கி செல்ல ஒரு பருத்த காட்டு பன்றி அவள் செல்லும் வழியில் மறித்து கொண்டு நின்று கொண்டு இருந்தது.

இவ்வளவு பெரிய காட்டு பன்றியை அவள் இதுவரை வாழ்நாளில் பார்த்ததே இல்லை.ஒரு யானையே குலுங்கி அவள் முன்னே நடந்து வருவது போல் இருந்தது.

அது வெளிவிட்ட மூச்சுக்காற்றினால் புழுதி பறந்தது.மூர்க்கமாக தந்தத்தினால் மண்ணை நோண்டி அவள் மேல் உள்ள கோபத்தை காண்பித்தது.
மதிவதனி சுதாரித்து உடனே வில்லில் நாண் ஏற்றி அதை நோக்கி அம்பை விட ,அம்பு பன்றியின் உடம்பில் பட்டு கீழே விழுந்தது.

மதிவதனிக்கு ஒரே ஆச்சரியம்.இந்த வில்லில் இருந்து ஒரு அம்பு விட்டால் அது ஏழு விலங்குகளை ஒரு சேர துளைக்கும்.என்ன ஆயிற்று என் வில்லுக்கு என யோசித்து வில்லை திருப்பி அம்பை ஒரு மரத்தை நோக்கி விட்டாள்.அது ஏழு மரத்தை வரிசையாக துளைத்து கொண்டே சென்றது.அதை பன்றி பார்த்து இன்னும் கோபம் கொண்டது.

மதிவதனிக்கு புரிந்து விட்டது.வில்லின் பலம் குறையவில்லை.ஆனால் பன்றியை துளைக்கும் அம்பு தன்னிடம் இல்லை என்று உணர்ந்தாள்.

உண்மையில் பன்றியாக உருமாறி வந்து இருப்பது காத்தவராயன் தான்.அவள் விட்ட அம்பு கண்டிப்பாக பன்றியை துளைத்து இருக்க வேண்டியது.ஆனால் இன்று துளைக்கவில்லை.காரணம் அவன் காளி தேவியிடம் பெற்று இருந்த வரம். இன்று ஒருநாள் மட்டும் அவன் என்ன உருவம் வேண்டுமானால் எடுக்க முடியும்.அதே நேரத்தில் எந்த ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் அவனுக்கு இருக்கும் வரம் இன்று ஒருநாள் மட்டும் கேடயமாக அவனை பாதுகாக்கும்.

பன்றி ஒரு அடி முன்னே எடுத்து வைத்தது.மதிவதனி மீண்டும் பன்றியை நோக்கி அம்பை விட்டாள்.அம்பு பன்றியின் நெற்றியில் பட்டு கீழே விழுந்தது.பன்றி அவளை நாலு கால் பாய்ச்சலில் முட்ட ஒடி வந்தது.வேறு வழியின்றி மதிவதனி தன்னை காப்பாற்றி கொள்ள ஓட தொடங்கினாள்.
பன்றியின் வடிவில் இருந்த காத்தவராயனுக்கு அவள் படை பிரிவில் இருந்து தனியாக பிரிப்பதே நோக்கமாக இருந்தது.அதற்கேற்றவாறே படைகள் இருந்த நேர் எதிர் திசையில் அவளை விரட்டியது. மாயமலையின் எல்லை அருகே வந்து ஒரு நிமிடம் தயங்கி நின்றாள்.பன்றி வேகமாக நெருங்கி வந்தது.யோசிக்க நேரம் இல்லாமல் மாயமலைக்குள் நுழைந்தாள்.பன்றி விடாமல் மூர்க்கத்தனமாக ஓடி வந்தது.மீண்டும் மூச்சிரைக்க மதிவதனி ஓட ஒரு அடர்ந்த காட்டு பகுதிக்குள் நுழைந்தாள்.அவளை அந்த காட்டுக்குள் விரட்டி விட்ட தெம்புடன் பன்றி ஓடி மறைந்தது.

அவள் நுழைந்த காடு மதிகெட்டான் காடு.அந்த காட்டில் நுழைந்த மனிதர்கள் யாரும் அவ்வளவு எளிதில் வெளியே வர முடியாது.அங்கு இருக்கும் மரங்கள் வெளிவிடும் ஒருவித வாயுவை சுவாசிப்பதால் மதிமயங்கி அங்கேயே சுற்றி சுற்றி வெளியே வர முடியாமல் மயங்கி விழுந்து நீர்,உணவு இல்லாமல் இறந்து விடுவர்.அந்த காட்டில் நுழைந்து வெளியே செல்ல இரண்டே பேருக்கு தான் தெரியும்.ஒருவர் காத்தவராயன்.இன்னொருவர்…?
ஏனெனில் அந்த மரங்கள் வெளியிடும் வாயுவை சுவாசிப்பதை தடுக்க அவர்கள் ஒரு குறிப்பிட்ட மூலிகையை மெல்லுவர்.அதனால் இந்த வாயுவின் பாதிப்பில் இருந்து தப்பிவிடுவர்.

மதிவதனிக்கு அந்த காற்றை சுவாசிக்க சுவாசிக்க மயக்கமாக வந்தது.சுற்றி சுற்றி பார்த்தாலும் வெளியே செல்ல வழி தெரியவில்லை.மயங்கி கீழே விழும் நேரம் பக்கத்தில் ஏதோ ஓடையில் தண்ணீர் ஒடும் சலசலவென சத்தம் கேட்டது.சக்தியை ஒன்று திரட்டி ஒரே மூச்சாக ஓடையை நோக்கி ஓடினாள். ஓடைக்குள் ஓடிய தண்ணீரை எடுத்து முகத்தில் பட் பட்டென்று அடிக்க சற்று தெம்பு வந்தது.அள்ளி அள்ளி நீரை குடித்தாள்.அப்பொழுது தூரத்தில் புகை கிளர்ந்து மேலே செல்வதை பார்த்தாள்.அங்கே சென்றால் கண்டிப்பாக மனிதர் யாராவது இருக்க கூடும்.அவர்கள் மூலம் இங்கே இருந்து தப்பிக்க வழி கிடைக்கலாம் என்று புகை வந்த திசையை நோக்கி நடந்தாள்.

1 Comment

  1. Fantastic story

Comments are closed.