கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 40 14

மோட்டர் பைக்கை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் நுழைந்த சீனு, தன் காதலியைப் பார்த்ததும், ஒரு நொடி ஆணியடித்தது போல் நின்றான். மெல்ல விசில் அடித்தவாறு, அவளை நெருங்கி,
“மீனு யூ ஆர் வெரி வெரி கூல் இன் திஸ் சாரி யார்…’ முனகியவாறு அவளை தன் புறம் இழுத்தான்.

சீனுவிடமிருந்து வந்த அதீதமான சிகரெட் ஸ்மெல், மீனாவின் முகத்தை தாக்க, அவள் முகம் சட்டென சுருங்கியது. சீனுவின் கண்களும், மனமும், ஒருங்கே அவள் அழகைப் அள்ளிப் பருகிக்கொண்டிருந்ததால், அவள் முகம் சுருங்கியதை கவனிக்கத் தவறின.

“சொன்னாக் கேளு.. இனிமே வீட்டுக்குள்ள என்னை தொடற வேலை வெச்சிக்காதே.. எங்கண்ணண் செல்வா ஹால்லேதான் இருக்கான்..” சீனுவுக்கு மட்டுமே கேட்கும் அடிக்குரலில் பேசிய மீனா, அவன் கையைத் தட்டிவிட்டாள்.

“ஓ.கே. ஓ.கே… அக்ரீட் டியர்… மீனாக் குட்டீ… நீ ஒண்ணு மட்டும் சொல்லிடு… இவ்வளவு அழகை எங்கடீ ஒளிச்சி வெச்சிருந்தே நீ?” சீனு அவள் வலது கையைப்பற்றி புறங்கையில் மென்மையாக முத்தமிட்டான்.

“ரொம்ப வழியாம சீக்கிரம் கிளம்புடா..!” மீண்டும் அடித்தொண்டையில் உறுமினாள், மீனா. உறுமியவள் சட்டென ஓட்டமாக ஓடி மாடிப்படிக்கட்டில் தாவி தாவி ஏறி மறைந்தாள்.

பைக்கின் சத்தம் கேட்டதும், ஹாலிலிருந்து வெளியில் வந்த செல்வா,
“மாப்ளே எப்படா வந்தே மதுரையிலேருந்து?” அவன் கண்கள் இயல்பாக மீனாவைத் தோட்டத்தில் தேடியது.

“காலையிலத்தான் வந்தேன்… மீனா எங்கடா மச்சான்…? வீட்டுல சத்தத்தையே காணோம்” எதுவுமே தெரியாதவன் போல் கொக்கிப் போட ஆரம்பித்தான், சீனு.

ம்ம்ம். எல்லாம் என் நேரம்… என் க்ளோஸ் ஃப்ரெண்டோட தங்கச்சியை காதலிக்க ஆரம்பிச்சதுலேருந்து, அவன் கிட்டவே எப்படி எல்லாம் பொய் பேச வேண்டியதா இருக்குது… தன் மனதுக்குள் சீனு ஒரு வினாடி வெட்கப்பட்டான். கொடுமைடா.. இது… ரொம்ப நாளைக்கு என்னால இப்படி வேஷம் போட முடியாது. சீக்கரமே இதுக்கு ஒரு முடிவு கட்டணும். அவன் மனம் அவனைப் பார்த்து எள்ளி நகையாடியது.

இது என் ஃப்ரெண்டு வீடுன்னு மட்டும் இல்லாம, அதுக்கு மேலேயும் எனக்கு உரிமை உள்ள வீடா, சீக்கிரமா இதை மாத்திக்கணும்… சீனுவின் மனம் வேகவேகமாக சிந்தித்தது.

“மாப்ளே… அம்மாவும் அப்பாவும் வேலூர் போயிருக்காங்கடா… மீனா இங்கேதான் நின்னுகிட்டு இருந்தா… எங்கப் போனான்னுத் தெரியலியே?” நிஜமாகவே செல்வாவின் கண்கள் அவளைத் தேடிக்கொண்டிருந்தன.

“ஹாய் சீனு, ஹவ் ஆர் யூ,” மீனா மாடியில் உலர்த்தியிருந்த துணிகளை எடுத்துக்கொண்டு, மாடிப்படியில் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தாள்.

“அயாம் பைன்… தேங்க்யூ… மீனா.. நல்லா சூடா ஒரு கஃப் காஃபி போட்டுக் குடுக்கறியா…?” சீனு செல்வாவின் பின் நின்று கொண்டு, அங்கிருந்து நகருமாறு, அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

***

“மச்சான்… ஒரு முக்கியமான விஷயம்டா…” நண்பர்கள் இருவரும் வீட்டுப் வாசல் படிக்கட்டிலேயே உட்கார்ந்து கொண்டார்கள்.

“சொல்லுடா… மாப்ளே”

“வீட்டுல எனக்கு தீவிரமா பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டாங்கடா… காலையில வீட்டுக்குள்ள நுழையக் கூட இல்லே… அத்தை ரொம்பவே பொலம்ப ஆரம்பிச்சிட்டாங்க… இந்த தரம் அப்பாவும் அவங்க கூட சேந்துக்கிட்டாரு…”

“வெரி குட்…யாருடா பொண்ணு…? அந்த ஜானகியோட சிஸ்டர், வெள்ளையா, பசுமாடு ஒருத்தி இருக்காளே அவளையா உனக்கு பாக்கறாங்க?”

“டேய்.. நிறுத்தடா உன் நக்கலை.. நானே வெறுத்துப் போய் வந்திருக்கேன்.. நீ வேற கேப்புல கடா வெட்டி உசுப்பேத்தற…”

“சரி… நவ் அயாம் சீரியஸ்… இதுக்கு நான் என்ன பண்ணணும் அதைச் சொல்லுடா..” செல்வா, சீனுவின் தோளில் நட்புடன் கையைப் போட்டுக்கொண்டான்.

“மீனாவைதான் நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேங்கற, என் முடிவை வீட்டுல அப்பா, அம்மாக்கிட்ட கிளியரா சொல்லிடலாம்னு பாக்கறேன்…”