எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 3 73

அறைந்துகொண்டே பற்களை கடித்து அலறினாள். அவளுடைய ஆவேசத்தில் அசோக் அப்படியே ஆடிப்போனான். அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான். அறை வாங்கியவன் அவளுடைய பிடியில் இருந்து தப்பிக்க.. தன் உடலை ஒரு சிலுப்பு சிலுப்பினான்..!! பிடியில் இருந்து விலகி பின்னால் சரிந்தான்.. பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறி.. யாரோ சாப்பிட்டுக்கொண்டிருந்த டேபிள் மீது சென்று விழுந்தான்..!! அமர்ந்திருந்தவர்கள் எழுந்து கொள்ள.. பிரியாணியோ பீஸ்புலாவோ கீழே விழுந்து சிதறியது..!!

அவள் இப்போது தனது வலது காலை உயர்த்தி, அணிந்திருந்த செருப்பை அவசரமாய் கழற்றினாள்..!!

“உன்னலாம் செருப்பால அடிக்கனுண்டா…!!”

கத்திக்கொண்டே கழற்றிய செருப்புடன் அவன் மீது பாய, அவன் டேபிளிலிருந்து தரையில் உருண்டு விழுந்தான். விருட்டென எழுந்து.. ‘விட்டால் போதும்..’ என்று விழுந்தடித்துக்கொண்டு ஓடினான். மொத்த ஃபுட் கோர்ட்டும் இப்போது அப்படியே அமைதியில் உறைந்து போயிருந்தது.. அனைவரும் திரும்பி இவளையே பார்த்தனர்..!! இவளோ ஆத்திரம் கொஞ்சமும் குறையாமல்.. அலறியடித்து ஓடுகிற அவனையே வெறித்துக் கொண்டிருந்தாள்..!! ‘புஸ்.. புஸ்…’ என்று அவள் கோப மூச்சு விட்டதில்.. அவளுடைய மார்புகள் ரெண்டும் ‘குபுக்.. குபுக்..’ என மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன..!! இன்னும் தணியாத சினத்துடன் முகமும் உதடுகளும் துடித்துக்கொண்டிருந்தன..!! ‘பொறுக்கி.. ராஸ்கல்..!!’ என்று அவளது வாய் முனுமுனுத்தது..!! அசோக் அகலமாய் திறந்த விழிகளுடன்.. ‘ஆ’வென்று பிளந்த வாயுடன்.. அவளையே பார்த்தவாறு.. சிலை மாதிரி நின்றிருந்தான்..!!

இப்போது அவள் சரக்கென்று தலையை சிலுப்பி அசோக்கை பார்த்தாள்..!! அவளுடைய கண்களில் அப்படி ஒரு கோபக்கனல்.. முகத்தில் அப்படி ஒரு ரௌத்திரம்.. உடம்பில் அப்படி ஒரு விறைப்பு..!! கையிலிருந்த செருப்பை படக்கென்று உயர்த்தினாள்.. அசோக்குடைய முகத்துக்கு அரை அடி நெருக்கமாக.. அந்த செருப்பை இப்படியும் அப்படியுமாய் ஆட்டியவாறு.. சூடாகவும், சீற்றமாகவும் கேட்டாள்..!!

“ஹலோ மிஸ்டர்..!!!! உங்களுக்கு என்ன வேணும்..???”

அவ்வளவுதான்…!! அசோக் அப்படியே வெலவெலத்துப் போனான்..!! முதுகுத்தண்டில் யாரோ ஐஸ் கத்தி செருகிய மாதிரி இருந்தது அவனுக்கு..!! ஜிவ்வென்று ஒரு பய சிலிர்ப்பு நாடி நரம்பெல்லாம் ஓட.. விரல்கள் எல்லாம் நடுநடுங்க ஆரம்பித்தன..!! அவனையும் அறியாமல் அவனுடைய கன்னங்கள் இரண்டையும் கைகளால் படக்கென்று பொத்திக் கொண்டான்..!!

“ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்லைங்க.. ந..நத்திங்..!!”

தொண்டையில் சிக்கிக்கொண்ட வார்த்தைகளை கஷ்டப்பட்டு வெளியே துப்பினான்..!! துப்பி முடித்ததும் அவசரமாய் திரும்பினான்..!! கீ கொடுத்த பொம்மை மாதிரி கிடுகிடுவென தன் நண்பர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தான்..!!

அந்த நாளும் அடுத்த நாளும் அசோக்கிற்கு ஒருவித பிரம்மையும் பிரச்னையுமாகவே கழிந்தன..!! ஆசைஆசையாக பேச சென்றவனின் மனதை.. அந்தப் பெண்ணுடைய அனல் கக்கும் பார்வையும்.. அவள் கழற்றி கையிலெடுத்த செருப்பும்.. அந்த செருப்பின் அகலமான அடிப்புறமும்.. அதில் ஓரமாய் ஒட்டியிருந்த பபிள்கமும்.. என எல்லாமும் சேர்ந்து.. ரொம்ப.. ரொம்பவே பாதித்துவிட்டன..!! அந்த பாரதிக்கு.. ‘பார்க்கும் மரங்கள் எல்லாம் பச்சை நிறம்’ தோன்றிய மாதிரி.. இந்த பாரதி மைந்தனுக்கு.. காணும் இடங்கள் எல்லாம் கலர் கலராய் செருப்புகள்தான் தோன்றின..!!

“என்னடா.. வெறும் சாதத்தையே சாப்பிட்டுட்டு இருக்குற.. இந்தா.. இதை கொஞ்சம் கடிச்சுக்கோ..!!” என்றவாறு, அசோக்கின் அம்மா அவனுடைய வாய்க்கருகே செருப்பை நீட்டினாள்.

“மம்மீஈஈ..!!!!” அலறியே விட்டான் அசோக். அவனுடைய முகம் பட்டென வியர்த்துப் போனது.

“அ..அசோக்கு… அசோக்கு… என்னப்பா ஆச்சு..??” பாரதி பதற்றமும் பயமும் தொற்றிக்கொண்டவளாய் கேட்டாள்.

“ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்ல மம்மி..!!”

அம்மாவின் கையில் இருப்பது அப்பளம்தான் என்று புரிந்ததும், சற்றே நிம்மதியடைந்த அசோக், சமாளிக்கும் விதமாய் சொன்னான். ஆனால் அப்புறமும் பாரதி சமாதானம் ஆகாமல்,

“எ..என்னடா நீ… இந்தா.. இந்த தண்ணியை கொஞ்சம் குடி..!!”

என்றவாறே, தண்ணீர் டம்ளரை எடுத்து அவளே தன் மகனுக்கு நீர் புகட்டினாள். அன்று மாலை அசோக் வீடு திரும்பியதில் இருந்தே, அவனிடம் ஒரு வித்தியாசத்தை உணர்ந்திருந்த பாரதி, ‘எம்புள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே..?? எதைப்பாத்து பயந்தான்னு புரியலையே..?? ஒத்தை ஆளா எத்தனை பேய்ப்படம் வேணா பார்ப்பானே..?? இன்னைக்கு அப்பளத்தை பாத்தாலே அனகோண்டாவை பாத்தவன் மாதிரி அலர்றானே..?? காளியாத்தா மாரியாத்தா.. காமாட்சி மீனாட்சி.. கருமாரி மகமாயி.. நீங்கதான் எம்புள்ளைக்கு தொணை இருக்கணும்டியம்மா..’ என்று மனதுக்குள்ளாகவே கவலையும் ரகசியமுமாய் வேண்டிக்கொண்டாள்.

அசோக்கிற்கு காணும் இடங்கள் மட்டும் அவ்வாறு அல்ல..

அந்தப்பெண் ஏற்படுத்திய டென்ஷன் தாங்காமல்.. சலம்புகிற மைன்ட் சனியனை சமாதானம் ஆக்கலாம் என்று.. ஆபீஸை விட்டு வெளியேறி.. அடுத்த தெருவில் இருக்கும் பெட்டிக்கடைக்கருகே.. ஆகாயத்தை வெறித்தபடி.. புகை இழுத்து விட்டுக்கொண்டிருந்தான்..!! புகையின் நடுவினிலும்.. அவளுடைய பூமுகமே மசமசப்பாய் தெரிந்துகொண்டிருந்த வேளையில்.. வந்து சேர்ந்தான் அவன்..!! முழங்காலுக்கு மேலே ஏற்றிக்கட்டப்பட்ட லுங்கியும்.. முழங்கைக்கு மேலே சுருட்டிவிடப்பட்ட சட்டையும்.. முகம் நிறைய தாடியும்.. வாயில் நீட்டிய பீடியுமாய்..!!

“ஸார்.. கொஞ்சம் செருப்பு குடுக்குறீங்களா..??”

“என்னது..????’ அசோக் அதிர்ந்து போய் அந்த ஆளைப் பார்த்தான்.

“செருப்பு ஸார்.. செருப்பு செருப்பு செருப்பு..!!!!”

1 Comment

  1. Story Nalla Irukku , Konjam Naarayaa Elluthunga Admin !

Comments are closed.