கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 12 11

“சுகன்யா … எல்லா வீட்டுலயும், கடைசியா ஆம்பிளை சொல்றதுதான் நடக்குது; அவன் அப்பாவுக்கு உன்னைப் பிடிக்கற பட்சத்துல, உன் கல்யாணம் எல்லோருடைய ஆசிர்வாதத்துடன் நடக்கும்ன்னு நம்புவோம். நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே; உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஜாதி பிரச்சனையை செல்வாவோட அம்மா கிளறலாம். உன் ஆளோட அப்பாவும் இந்த விஷயத்துல ஒரு முடிவுக்கு சட்டுன்னு வரல்லேன்னா, ஆபிசுல நாலு பேரு நாலு விதமா பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, செல்வா ஆஸ்பத்திரியிலேருந்து வந்தவுடனே, ரெண்டு பேருமா காதும் காதும் வெச்ச மாதிரி அம்பாள் சன்னதியில உன் கல்யாணத்தை முடிச்சுக்கற வழியைப் பாரு; கல்யாணத்தையும் சட்டப்படி ரெஜிஸ்டர் பண்ணிகிட்டீங்கன்னா அதுக்கப்புறம் சாவித்திரி மாதிரி எந்த நாயும் உன்னைப் பாத்து குலைக்க முடியாது. என் மனசுல பட்டதை நான் சொல்லிட்டேன்; நாளைத் தள்ளிப் போடாதே” வித்யா தன் வயிற்றைத் தடவிக்கொண்டே சொன்னாள். இரவு எத்தனை மணிக்குத் தூங்கப் போனாலும் விடியற்காலை சரியாக ஐந்து மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் குமாரசுவாமிக்கு இருந்தது. சென்னைக்கு வந்த பின்னரும், அதே வழக்கத்தின் படி காலையில் எழுந்த குமாரசுவாமி கடற்கரை ஓரமாக சீரான வேகத்தில் நடக்க ஆரம்பித்தார். அரை மணி நேரம் நடந்தவரின் உடலில் வியர்வை முத்துகள் தோன்ற, கடற்கரை மணலில் அமைதியாக அமர்ந்து, கரையில் பெரும் ஓசையுடன் வந்து மோதி, பின் மீண்டும் கடலுக்குள் சென்ற அலைகளை, கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். மனம் அன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தது. வழக்கமான அலுவலக வேலைகளை பனிரெண்டு மணிக்குள், லஞ்சுக்கு முன் முடித்தப்பின், சுந்தரியுடனும், சுகன்யாவிடமும் பேசவேண்டும். ரகு தன்னிடம் நேற்றிரவு சொன்னது போல், தன் தமக்கையிடம் எனக்கு முன் பேசிவிட்டால் என் வேலை கொஞ்சம் சுலபமாகிவிடும். யாரிடம் முதலில் நான் பேசுவது? என் பெண் சுகன்யாவிடமா இல்லை, என் மனைவி சுந்தரியிடமா? ரகுவைப் போல் சுந்தரி என்னிடம் சகஜமாக பேசுவாளா? அவளுக்கு என் மேலிருக்கும் கோபம் இத்தனை ஆண்டுகளில் கொஞ்சமாவது தணிந்திருக்காதா? ரெண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன், அவளை சந்திக்க விரும்பிய என் பெற்றோர்களை பார்க்க மறுத்தவள் தானே அவள்? என் சொந்த மனைவியிடம் பேசுவதற்கு நான் ஏன் இந்த அளவுக்கு தயங்குகிறேன்? நேற்றிரவு என் மனைவியிடம் பேசி, அவளைச் சந்தித்து பிளவு பட்டிருக்கும் உறவை மீண்டும் சுலபமாக புதுப்பிக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. இன்று அவளை உடனடியாகப் பார்க்க வேண்டும் என என் மனம் தவிக்கிற போதிலும், இந்த நிமிடத்தில் என் மனம் அவளுடன் பேசும் முயற்சியை ஏன் இத்தனை கடினமாக நினைக்கிறது? இதை கஷ்டம்ன்னு நினைச்சா, முதல்ல நான் சுகன்யாவிடம் பேசலாம். அவளுக்கு சுந்தரி அளவிற்கு என் மேல் கோபம் இருப்பதற்கு வழியில்லை. என்னுடைய இந்த அபிப்பிராயம் தப்பாகவும் இருக்கலாம். ஆனால் அவளுடன் பேசுவது மூலம், சுந்தரியின் இன்றைய மன நிலமை ஓரளவிற்குத் தெரியவரலாம். ம்ம்ம் … இது சரியான வழியாகத் தோன்றுகிறது. குமாரசுவாமி சுகன்யாவிடம் உடனடியாக பேச நினைத்து அவள் நம்பரை அழுத்தியவர், மனதில் திடீரென ஏதோ தோன்ற, சட்டென தொடர்பைத் துண்டித்தார்.