எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 37

காரை ஓட்டிக்கொண்டிருந்த வேணு தோளைப் பற்றிக் குலுக்கவும், அசோக் கனவு கலைந்து விழித்தான். கண்களை சுருக்கி வைத்தவாறே, இமைகளை சிமிட்டி சிமிட்டி சுற்றும் முற்றும் பார்த்தான். கார் ஏதோ கும்மிருட்டுக்குள் நின்றிருந்தது.

“எங்கடா.. வீட்டை காணோம்..??” அசோக் குழப்பமாக கேட்டான்.

“அந்தா… அங்ங்ங்க தெரியுது பாரு..!!”

வேணு எங்கோ தூரமாக கை காட்ட.. அசோக் பாரதிராஜா படத்தில் வரும் பல்லுப்போன கிழவி போல.. கண்களுக்கு மேல் கையை ஹரிசாண்டலாக வைத்து.. அவன் கைகாட்டிய திசையை உன்னிப்பாக பார்த்தான்..!! இருநூறு மீட்டருக்கு அப்பால்.. ஒளிர்ந்துகொண்டிருந்த அவனுடைய வீடு பார்வையில் பட்டது..!! திரும்பி வேணுவிடம் கேட்டான்.

“ஏன் இங்கயே நிறுத்திட்ட..??”

“ஹிஹி.. சும்மாதான் மச்சி.. இங்க இருந்து நடந்தே போயிடுடா.. ப்ளீஸ்..!!”

“ஏன்..?? நீங்க யாரும் வீட்டுக்கு வரலையா..??”

“இ..இல்லடா.. நாங்க இன்னொரு நாள் வரோம்.. நீ கெளம்பு..!!” கிஷோர் பின்சீட்டில் இருந்து சொன்னான். அவன் சொல்லியவிதத்தில் ஒருவித அவசரமோ பதற்றமோ இருந்தது.

“ஏய்.. வீட்டுக்கு வாங்கடா..!! இன்னைக்கு என் பர்த்டேன்னு அம்மா ஏதாவது ஸ்பெஷல் ஐட்டம் பண்ணிருப்பாங்க.. வந்து ஆளுக்கு கொஞ்சம் டேஸ்ட் பாருங்..” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவனுக்கு பின்புறம் இருந்த சாலமன்,

“ஐயையோ..!!!!” என்று அலறினான். அவ்வளவுதான்..!! உடனே அசோக் கடுப்புடன் பின்னால் திரும்பினான். கிஷோரையும், சாலமனையும் பார்த்து படுகோவமாக கத்தினான்.

“டேய்.. எவன்டா இப்போ ஐயோன்னு கத்துனது.. எவன் கத்துனது..?? சொல்லுங்கடா.. எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்.. டெல் மீ..!!!!! என் அம்மா சமையல் அவ்வளவு மட்டமா..??”

“ஐயோ.. அதுக்காக கத்தல மச்சி..!! இவன் ஷூகாலோட என் காலை மிதிச்சுட்டாண்டா..!!” சாலமன் பரிதாபமாக சமாளித்தான்.

“ஏய்.. பார்லயும், ரெஸ்டாரன்ட்லயும் சாப்பிட்டதே வயிறு ஃபுல்லா இருக்குடா மச்சி.. நாங்க இன்னொரு நாள் வந்து சாப்பிடுறோம்..!! அல்ரெடி ரொம்ப லேட் ஆயிடுச்சு.. எங்க வீட்லயும் தேட ஆரம்பிச்சுடுவாங்க..!!”

அசோக்கை சமாளிக்கும் வித்தையை ஓரளவாவது அறிந்தவன் கிஷோர்தான். அவன் அந்தமாதிரி சாந்தமாக சொன்னதும், அசோக் சமாதானமானான். மூன்று பேர் முகத்தையும் மாற்றி மாற்றி ஒருமுறை பார்த்தான். எல்லோருமே இவனைப்பார்த்து அமைதியாக புன்னகைத்தார்கள்.

“ஹ்ம்ம்.. ஓகேடா.. பை.. ஸீ யு டுமார்ரோ..!!”

அசோக் குழறலாக சொல்லிவிட்டு காரை விட்டு கீழே இறங்கினான். கால்கள் சற்றே தள்ளாட வீடு நோக்கி நடையைப்போட்டான். அவன் கீழே இறங்குவதற்காகத்தான் காத்திருந்த மாதிரி, கார் விர்ரென திடீர் வேகம் எடுத்து பறந்தது. காருக்குள் அவர்கள் ‘யப்பா.. ஆண்ட்டி சமையல்ல இருந்து கிரேட் எஸ்கேப்டா சாமி..!!’ என்று கமென்ட் அடித்தது அசோக்கின் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

அசோக் வீட்டுக்குள் நுழைந்தபோது, ஹாலில் இருந்த டிவியில் ஏதோ ஒரு தமிழ் சேனலில், பழைய பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. உதட்டுக்கு மேலே இரண்டு கம்பளிப்பூச்சிகள், உயர நோக்கி ஊர்வதுமாதிரி ஒரு மீசையை ஒட்டிக்கொண்டு.. இரண்டு கையிலும் இரண்டு கர்ச்சீப்களை வைத்து ஆட்டி ஆட்டி நடந்தவாறு.. ‘ஊர்வசியும் இவள்தானோ… ரம்பைதானோ… ரதிதானோ… பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ…??’ என்று.. சிவாஜி கணேசன் சாவித்திரியை பார்த்து பாடிக்கொண்டிருந்தார்..!! சாவித்திரியும் நளினமாக தன் உதட்டை சுளித்து.. முகவாய்க்கட்டையை தோள்ப்பட்டையில் இடித்து.. வெடுக் வெடுக்கென முகத்தை வெட்டிக்கொண்டிருந்தார்..!!

டிவிக்கு முன்பாக கிடந்த சோபாக்களில் ஒன்றில் அசோக்கின் தாத்தாவும் பாட்டியும் அமர்ந்து அந்த பாடலை பார்த்தும், கேட்டும், ரசித்தும் கொண்டிருந்தனர். சரியாக அசோக் உள்ளே நுழைந்த நேரத்தில், தாத்தா பக்கவாட்டில் திரும்பி பாட்டியை பார்த்து புன்னகைத்து..

“ஏய்.. கோமளா..” என்று ரகசியமாக அழைத்து “ஞாபகம் இருக்கா..??” என்று கேட்டார்.

பாட்டிக்கு உடனே பட்டென பழைய ஞாபகம் வந்து, வெட்கத்தில் குப்பென முகம் சிவந்து போனது.

“ம்ம்.. இருக்கு..!!’

என்று கிசுகிசுப்பாக சொன்னவள், தன் முகவாய்க்கட்டையை தோள்ப்பட்டையில் சாய்த்து நளினமாக வெட்கப்பட்டாள். ஏற்கனவே நண்பர்களின் காதலைப்பார்த்து கடுப்புடன் வந்திருந்த அசோக்குக்கு, இவர்களுடைய காலம் போன காலத்து ரொமான்சைப் பார்த்ததும், மேலும் எரிச்சலே உண்டானது. தாத்தாவை பார்த்து சற்றே முறைப்பாகவும், கிண்டலாகவும் கேட்டான்.

“என்ன.. ரொம்ப ரசிச்ச்ச்சு.. பாட்டோட அப்படியே ஒன்றிப்ப்ப்போய்.. டிவி பாக்குற மாதிரி இருக்கு..??”

“அ..அது.. அதுவந்து.. டிவில தேன்கிண்ணம் போட்டான்டா அசோக்கு.. ரொம்ப நாளுக்கப்புறம் நல்ல நல்ல பாட்டா போடுறான்.. அ..அதான் நானும் உன் பாட்டியும்.. செத்த பாக்கலாம்னு..” தங்கள் ரொமான்சை பேரன் பார்த்துவிட்டான் என்ற நாணத்துடன், தாத்தா திணறலாக சொன்னார்.

Updated: June 3, 2021 — 3:03 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *