எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 194

“ஹ்ம்ம்.. பாத்தது போதும்.. பத்து மணியாகப் போகுது.. போய் படுத்து தூங்குங்க.. போங்க..!!”

“இருடா.. இந்த தேன்கிண்ணம் முடிஞ்சுக்கட்டும்..” தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“ப்ச்.. அதான் சொல்றேன்ல..?? போய் படுங்க போங்க.. தேன்கிண்ணம், தயிர்க்கிண்ணம்னுக்கிட்டு..!!” அசோக் அவ்வாறு கத்த, பாட்டிக்கு கோவம் வந்துவிட்டது.

“ம்க்கும்.. இந்தப்பய வந்தாலே இப்படித்தான்.. நம்மள செத்த நேரம் டிவி கூட பாக்கவிடமாட்டான்.. நீங்க வாங்க.. காலுக்கு ஏதோ தைலம் தேய்க்கணும்னு சொன்னிங்களே.. தேச்சுவிட்டு தூங்க போலாம்..!!”

சலிப்பாக சொன்ன பாட்டி, ரிமோட் எடுத்து டிவியை ஆஃப் செய்தாள். தாத்தாவை கூட்டிக்கொண்டு ஹாலில் இருந்து கிளம்பினாள். அவர்கள் போவதையே அசோக் முறைப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அசோக்கின் தாத்தா, பாட்டியைப்பற்றி தெரிந்து கொள்ளும் முன், நீங்கள் வேறொரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். தஞ்சாவூருக்கு அருகே இருக்கும் அரசுகொடிப்பாளையம் என்ற ஊரில், கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கும் மேலாக, எந்த ஒரு திருவிழாவிற்கும் மேடைநாடகம், தெருக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை. ஆனால் அந்த ஊரின் தற்போதைய நிலைதான் அப்படி. ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அந்த ஊரில் வாரத்துக்கு ஒரு நாடகம், மாதத்துக்கு இரண்டு கூத்து என்று ஊரே அமர்க்களமாய் இருக்கும். திரைப்படம் அந்த அளவுக்கு வேரூன்றி இருக்காத காலத்தில், நாடகத்தையே பெரும் பொழுதுபோக்காக நினைத்திட்ட மக்கள்..!!

அந்த ஊர் ஜமீன்தார் ஒரு கலா ரசிகர். நாடகப்ரியர். யார் வீட்டிலோ கல்யாணம், காதுகுத்து என்று எந்த விசேஷமாக இருந்தாலும், ஜமீன்தார் பெரும்பங்கு செலவை ஏற்றுக்கொள்ள, மாகாளி அம்மன் கோயில் முன்பாக அமைந்திருக்கும் ஊர்ப்பொது மேடையில் நாடகம் நடைபெறும். அவ்வாறு நாடகம் போடுவதற்கு ஜமீன்தார் அணுகுவது, தஞ்சையை சேர்ந்த ‘நாகமணி நாடக சபா’தான். அந்த சபாவின் சார்பாக பவளக்கொடி, வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி என்று எந்த நாடகம் நடைபெற்றாலும், அதில் நாயகனாக நடிப்பது.. ‘நடிப்பிசை வேந்தன்.. நாடக கலா சிரோன்மணி’ நாராயணசாமிதான்..!!

பலத்த கரகோஷங்களுக்கு இடையே மேடையில் தோன்றும் நாராயணசாமி.. அவ்வாறு தோன்றியதுமே.. ‘தேடி வந்தேனே புள்ளி மானே..’ என்று உச்சஸ்தாயியில் பாடியவாறு.. மேடையில் நிற்கும் குறவள்ளியை விட்டுவிட்டு.. முன்வரிசையில் அமர்ந்திருக்கிற கோமளவல்லியை தேட ஆரம்பித்துவிடுவார்…!! அந்த நொடிக்காகவே அத்தனை நேரம் காத்திருந்த கோமளவல்லியும்.. நாராயணசாமியை ஆசையுடன் பார்ப்பாள்..!! அவர்களுடைய பார்வைகள் ஒன்றோடொன்று மோதி, காதல் கதை பேசும்..!! காதலியை கண்டுவிட்ட குஷியில் நாராயணசாமியும்.. ‘ஊர்வசியும் இவள்தானோ… ரம்பைதானோ… ரதிதானோ… பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ…??’ என்று.. சத்தியவான் சாவித்திரிக்காக மனப்பாடம் செய்து வைத்திருந்த பாடலை.. வள்ளி திருமணத்திலேயே அள்ளி வீசுவார்..!! கோமளவல்லியும் சற்றுமுன் செய்தது போலவே, முகவாய்க்கட்டையை திருப்பி அழகாக வெட்கிப்போவாள்..!!

Updated: June 3, 2021 — 3:03 am