அவளின் வாழ்க்கை 77

“கண்ணன் மாமாவைத் தெரியும்.. பிறகு.. அவரின்டை..” எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்..
“இயக்கத்திலை எத்தனை கண்ணன்கள் இருக்கினம். நீ ஆரைச் சொல்றே?”
“இயக்கத்திலை எத்தினை கண்ணன்கள் எண்டு எனக்குத் தெரியாது. ஆனால் என்ட கண்ணன் மாமாவை இயக்கத்திலை இருக்கிற எல்லாருக்குமே தெரியும். அவர்தான் ………” ஆக்ரோஷமாய் அவரின் பெயரை அவள் சொல்லி முடித்தபோது எல்லோர் முகங்களும் பேயறைந்த மாதிரி ஆகிவிட்டிருந்தது.

கோபமாய் எழுந்து வந்துவிட்டவள், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். ஆத்திரமும் ஏமாற்றமும் மாறிமாறி வந்து அவளை வதம் செய்தன. அன்று மட்டும் எப்படியாவது அடம்பிடித்து அவருடனேயே போயிருந்திருந்தால் இவ்வளவும் வந்திருக்காதே என்று தோன்றவும் தன் மீதே அவளுக்கு கோபம்கோபமாக வந்தது. கதவைப் ‘படார்’ என்று அறைந்து சாத்திவிட்டு கீழே வந்தாள். மேனேஜர் அப்போதுதான் சுவாமிக்கு விளக்குக் கொளுத்திவிட்டு ‘மருதமலை மாமணியே முருகையா’ பாடுப் போட்டிருந்தான். மெதுவாகத்தான் என்றாலுமே குன்னக்குடியின் வயலினிசை அவளது இதயநரம்பை முறுக்கி என்னமோ செய்தது.

பல்லைக்கடித்துக்கொண்டு வேகமாய் தெருவில் இறங்கி நடந்தாள். சென்றியில் இருந்த ஆமிக்காரன் பக்கத்தில் நின்றவனிடம் இவளைக் காட்டி,

“லஷ்சன முனு.. நேத?” (அழகான முகம் இல்லையா?) கிண்டலாய்ச் சொல்லிச் சிரித்தான்.

அவளுக்கிருந்த ஆத்திரத்தில் அப்பிடியே அவனது துவக்கைப் பறித்து எல்லோரையும் சுட்டுத் தள்ளிவிடலாம் போலிருந்தது. அவள் கோபத்தில் இருக்கும்போதுதான் அழகாய்த் தெரிகிறதா எல்லோருக்கும். எல்லோருக்குமெண்டல்..? யோசனையாய் ரெண்டு அடி எடுத்துவைத்தவள், குறுக்கால் ஒரு போலீஸ் வண்டிவந்து மறித்து நிற்கவும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். பயத்தை மறைத்தபடி அதைத்தாண்டிச் செல்லமுயல்கையில் தற்செயலாய் உள்ளேபார்த்தவள் அதிர்ந்துபோய் நின்றாள். அது.. கடைசியாய் விடைபெறுமுன் அவளைச் சமாதானப்படுத்துவதற்காய், அவள் தொடுவதற்கு அனுமதித்த அவனது ‘உயிர்’..

அவசரமாகத் திரும்பி அறைக்கு ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தாள். கதவு திறந்தேயிருந்தது. ஒரே எட்டில் உள்ளே சென்று பார்த்தால், அறை முழுக்க கிளறிக் கொட்டியிருந்தது. அதைப்பற்றிக் கவலைப்படுக்கொண்டிருக்க இப்போது நேரமில்லை. அவசர அவசரமாய்த் தேடி ஒருவாறு எடுத்துவிட்டாள்.. அந்தப் படத்தை. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டவள், பேர்சின் அடியில் மறைத்து வைத்திருந்த இந்தப் படத்தை மட்டும் ஏனோ விட்டுவைத்திருந்தாள்.

கண்நீர்த்திரையிட, நடுங்கும் கரங்களால் எடுத்துப் பார்த்தாள். அந்தக் கண்கள்.. அன்று எதுவோ சொல்லியதே..? வயலினை வாங்குவதற்காய் நீண்ட அந்தக் கரங்கள்.. அன்று…. நினைக்க நினைக்க தலை சுற்றியது. கடவுளே.. இத்தனை நாளாய் நடந்ததெல்லாம் வெறும் கற்பனையா இல்லை அதன் பிரதிபிம்பங்களா..? கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா?

“வீட்டை போன் பண்ணிச் சொல்லிட்டம். இப்ப உடனை train பிடிச்சு இரவைக்குமுந்தி வந்திடுவினம். அதுவரைக்கும் இவ, உன்கூடவே இங்கைதான் இருப்பா.. சரியே?” அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தைகள் எதையுமே காதில் வாங்காமல் பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்.

“இந்த T-ஷர்ட்..” இன்னும் விலை பிரிக்கப்படாத அந்தக் கறுப்பு T-Shirtஐ அவர் எடுத்தபோது, பயித்தியம் பிடித்தவள்போல் பாய்ந்து சென்று “அதைத் தொடாதீங்கோ.. அது அவரின்டை..” கதறியபடி பறித்துக் கட்டிலில் போட்டு அதன்மேல் விழுந்து விக்கிவிக்கி அழுதாள்.

முன்னொருதடவை அவன் கருப்புச்சட்டை அணிந்துவந்து பார்த்திருக்கிறாள். ஆனால் இது எதற்காய் வாங்கியது என்பது நினைவிலிருந்துவிலகி அவள் எண்ணம், சொல், செயல் முழுவதும் இப்போது அவன் மட்டுமே வியாபித்திருந்தான்.

“என்ன நடந்தது?” கேட்டுக்கொண்டே அருகில்வந்து சமாதானப்படுத்த முயன்றவரை வெறிகொண்டவள் போல் தள்ளிவிட்டு,

“வில் யு ப்ளீஸ் கெட்-அவுட்” வாசலைக் காட்டிக் கர்ச்சித்தாள். அவர்கள் தயங்கி நிற்கவும்,

“எல்லாரும் வெளியே போங்கோ.. இப்பவே..” பத்திரகாளியாகிவிட்டிருந்தாள்.

அவளை ஒருமாதிரியாகப் பார்த்துக்கொண்டே அவர்கள் வெளியேறவும் கதவை அறைந்து சாத்தியவள் அப்பிடியே மயங்கிச் சரிந்தாள்.

*****

அவளது உயிரிலே கலந்துவிட்ட அந்தச் சில மணித் துளிகளுக்குள்ளேயான வாழ்க்கை அவளுடனேயே இருந்துவிட்டுப் போகட்டும். யாரும் அவளைத் தொந்தரவு செய்யாதிருக்கட்டும்.

*****