அவளின் வாழ்க்கை 77

இற்றைக்கு சுமார் பத்து வருடங்களின் முன்பு ஒரு நாள்..

கல்லூரி தொடங்கி சில நாட்களே ஆயிருந்தன. இன்று, அறிமுக தினம். எல்லா பிரிவு மாணவர்களும் இரசாயன பகுதி விரிவுரை மண்டபத்தில் கூடியிருந்தனர். எல்லோர் முகங்களிலும் ஒருவித பெருமிதமும் சந்தோசமும் குடிகொண்டிருந்தது. அதற்குக் காரணமில்லாமல் இல்லை. அப்போதெல்லாம் உயர் தரத்தில் நாடளாவிய ரீதியில் அதியுயர் புள்ளிகள் பெற்ற சுமார் இருபது விகிதமான மாணவர்களுக்கே கல்லூரி அனுமதி கிடைக்கும். அவர்களையும் கூட தரம் பிரித்து முதலில் மருத்துவம், பொறியியல் போக எஞ்சியோரே இங்கு வந்திருப்பர். ஆனாலும் கூட மிகுதி எண்பது சதவிகிதத்தை விட தாம் உயர்ந்தவர்கள் என்ற மிதப்பு இருக்கும். இவர்களுக்கே இப்படி என்றால் முதல் இரு பிரிவுக்கும் சென்றவர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

பேராசிரியர்கள் அறிமுகம் தொடங்குவதற்கு இன்னும் ஒருசில நிமிடங்களே இருந்தன. அதற்குள் மாணவர்கள் அருகிலிருந்தவர்களிடம் அறிமுகம் செய்யத்தொடங்கி விட்டிருந்தனர். இது விரிவுரை மண்டபமா இல்லை மீன் சந்தையா என்று ஒருகணம் தோன்றியது அவளிற்கு.

அடடா, சொல்ல மறந்திட்டன். “அவள்” தான் இந்தக் கதையின் கதாநாயகி(?). அவளைப்பற்றிச் சொல்வதென்றால் அப்பாவின் அரியண்டம் தாங்காமல் ஏதாச்சும் ஒரு பட்டம் வாங்கி பறக்க விடுவம் எண்டு வந்திருந்தாள். அதை விட அவளுக்கும் இந்த சூழலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எழுதவே தொடங்காத வெற்றுத் தாள்களை இன்னும் எத்தினை தரம் தான் எண்ணிக்கொண்டிருப்பது. தலை வேறு பயங்கரமா இடிக்கத் தொடங்கியிருந்தது. இத்தனை கூட்டத்தில் அவள் இல்லை எண்டு யாரும் கவனிக்கப் போவதில்லை. பேசாம எழும்பிப் போய் விடலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தாபோது, பின்னாலிருந்து ஒரு குரல் “உங்களுக்கு ராணியைத் தெரியுமா?”. அதிர்ந்து போய் தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தாள்.

பின்னல் ஒரு இரண்டு வாங்கு தள்ளி இருந்துதான் அந்தக் குரல் வந்திருக்கவேண்டும். ஆனால் யார் கேட்டது? தன்னிடம் தான் கேட்டார்களா? இல்லை பொதுவாகக் கதைத்துக்கொண்டிருந்தார்களா? குழப்பத்துடன் திரும்பி பையை எடுத்துக் கிளம்பத் தயாரானாள். “உங்களைத்தான், ராணியத் தெரியுமா எண்டு கேட்டன்”. சடாரெனத் திரும்பியதால் இந்தமுறை குரலுக்குரியவனக் கண்டு பிடித்துவிட்டாள்.

இதற்க்கு முன்பு அவனை கண்டீனில் சிலமுறை பார்த்திருக்கிறாள். ஆனால் கதைத்ததில்லை. ஏனெனில் இதுவரை அவள் யாரிடமும் தானாகச் சென்று கதைத்ததில்லை. அதுவும் முக்கியமாய் ஆண்களிடம். அவளைப் பொறுத்தவரை ஆண்கள் எல்லாம் வேற்றுக்கிரக வாசிகள். பெண்களை அழவைத்து ஆனந்தம் காண்பவர்கள். கட்டி வைத்து உதைக்க வேண்டும். அதுக்குத்தானே கராத்தே பழகுகிறாள். ச்சே அதுவும் இந்தப் பாழாப்போன காலால், இப்போதைக்கு முடியாது போலிருக்கு.

“உங்கட ஸ்கூல் எண்டு தான் நினைக்கிறன்”. அவனேதான். தான் இன்னும் முதாலாவது கேள்விக்கே பதில் சொல்லவில்லை எண்பது இப்போது தான் உரைத்தது அவளுக்கு.

“எந்த ராணி..?”

“உடுவில்லதானே படிச்சனீங்கள். அவவும் உங்கட batch தான்.” அவளுக்கு மயக்கம் வருமாப் போல இருந்தது. நான் உடுவில்ல படிச்சது இவனுக்கு எப்படித் தெரியும்? கொழும்பு வந்தே கிட்டத்தட்ட அஞ்சு வருசமாச்சு.

சுதாகரித்துக்கொண்டு, “யார், மகாராணியா?”, சந்தேகத்துடன் கேட்டாள்.

“ஓம். இங்க ராமநாதன்..” சொல்லி முடிக்கவில்லை.

“தெரியும். உங்களுக்கு எப்படி அவவைத் தெரியும்?”, தேவையில்லாத கேள்வி. ஏன் கேட்டாள் எண்டு அவளுக்கே தெரியவில்லை.

“எனக்கு தங்கச்சி முறை..”. திரும்பவும் அதிர்ந்தாள். தொண்டை அடைத்துக்கொண்டது.

நல்லகாலம், நிகழ்ச்சி ஆரம்பமானதால் அதற்குமேல் பேசவேண்டி இருக்கவில்லை.

ஒரே சமயத்தில் உடம்பின் அத்தனை நாடி நாளங்களும் இதயத்தை நோக்கி ரத்தத்தைப் பாச்சியது போலிருந்தது. தலை சுற்றியது. நாடியில் கை வைப்பதுபோல் மெதுவாகத் தலையை ஒருபக்கமாய்ச் சாய்த்துத் கைகளால் தாங்கிக் கொண்டாள். நிகழ்வுகள் நிழல்களாய் அவள் முன் ஓடின.