அசுரன் Part 33 17

மன்னர் காலம்

வந்த வேலையை முடித்து கொண்டு அக்ரூரர் தன் வீட்டுக்கு விடியற்காலை 3 மணிக்கே கிளம்ப தயாரானார்.

“அப்புறம் சம்பந்தி,சீக்கிரமே நீங்க பொண்ணு கேட்டு வாங்க..உங்க வரவை நான் எதிர்பார்க்கிறேன்.”என சொல்லிவிட்டு அக்ரூரர் கிளம்ப தயாரானார்..

மாப்பிள்ளை வீட்டார்”என்ன சம்பந்தி அவசரம்,இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து விடிந்ததும் காலையில் போகலாமே..”என கூறினார்கள்.

அக்ரூரர் அதை மறுத்து”நேற்று இரவு முழுக்க விலாசினி தனியா இருந்திருப்பா சம்பந்தி..நான் நேற்றே சென்று இருக்க வேண்டும்..இதுவே தாமதமாகி விட்டது..”என சொல்லிவிட்டு அவசரம் அவசரமாக கிளம்பினார்.

அவசரமாக கிளம்பிய அக்ரூரரிடம் மாப்பிளை வீட்டார்”முக்கியமான விசயம் சம்பந்தி,தாங்கள் விலாசினியை மணம் முடித்து தரும் பொழுது சியாமந்தகா ரத்தினத்தை சீதனமாக தர வேண்டும் என கோரிக்கை விடுக்க,

அக்ரூரர் தயக்கத்துடன்,”நானே இதுவரை அதை உபயோகிக்கவில்லை சம்பந்தி,அதை நல்லதிற்காக மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று தான் வம்சாவளியாக நாங்கள் பாதுகாத்து வருகிறோம்.அந்த ரத்தினத்தை தன் நலனை கருதாமல் பொது நலனுக்காக யார் நல்ல வழியில் பயன்படுத்த விரும்புகிறாரோ அவரிடம் மட்டுமே கொடுக்க எனக்கு உத்தரவு இருக்கு.விலாசினி மணம் முடிந்து சில காலங்கள் போகட்டும்,நானே உங்களுக்கு அந்த ரத்தினத்தை தருகிறேன்.”

சியாமந்தகா ரத்தினம் என்பது சூரிய பகவான் அணிந்து இருந்த ரத்தினமணி.அது பார்ப்பதற்கு கோகினூர் வைரம் போல ஆனால் அதை பெரிதாக இருக்கும்.அதை சத்திரஜித் என்ற மன்னன் சூரிய பகவானை நோக்கி தவம் இருந்து பெற்றான்.அந்த ரத்தினத்தை அணிந்து இருப்பவருக்கு தோல்வியே கிடையாது.அதை அணிந்து வந்தால் அணிந்து வரும் நபர் ஜொலிப்புடன் சூரிய பகவானே நடந்து வருவது போல தோன்றும்.முக்கியமாக அந்த சியாமந்தக ரத்தினமணி மூலம் நாம் கடந்த காலம் ,மற்றும் எதிர் காலத்தை பார்க்க முடியும்.ஒருநாள் சத்திரஜித்திடம் அதை யாதவ மன்னருக்கு கிருஷ்ணன் கொடுக்க சொன்னார்.ஆனால் அதை அவன் மறுத்துவிட்டான்.சத்திரஜித்தின் தம்பி ஒருநாள் வேட்டைக்கு அந்த ரத்தினத்தை அணிந்து செல்லும் பொழுது வேட்டையில் சிங்கம் அவனை கொன்றுவிட்டது.சியாமந்தக ரத்தினமணிக்கு ஆசைப்பட்டு கிருஷ்ணர் தான் தன் தம்பியை கொன்று விட்டான் என்ற செய்தியை சத்திரஜித் நாடு முழுவதும் பரப்ப அது கிருஷ்ணருக்கு இழுக்கு ஆகி விட்டது.உடனே சத்திரஜித் தம்பி கடைசியாக சென்ற காட்டை நோக்கி கிருஷ்ணர் சென்றார்.ஆனால் கரடிகளின் ராஜாவான சிரஞ்சீவி ஜாம்பவான் சிங்கத்தை கொன்று அந்த சியாமந்தக ரத்தினத்தை கொண்டு சென்று தன் மகள் ஜாம்பாவதிக்கு அணிவித்து அழகு பார்த்தார்.கிருஷ்ணர் காட்டுக்கு வந்து பார்க்கும் பொழுது சத்திரஜித் தம்பி ஒட்டி வந்த குதிரை அருகே அவன் சடலம் இருப்பதை பார்த்தார்.அவனை கொன்றது சிங்கம் என அவரால் எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.
அவன் சடலத்திற்கு சற்று தூரத்திலேயே சிங்கத்தின் சடலத்தையும் அவர் கண்டுபிடித்தார்.சிங்கத்தை கொன்ற விலங்கின் கால் தடத்தை பின்பற்றி தொடர்ந்து போக அது ஒரு குகையில் சென்று முடிந்தது.அந்த குகைக்குள் உள்ளே சென்ற உடன் குகை முழுவதுமே ரத்தினத்தின் ஒளியால் மிக பிரகாசமாக இருந்தது..ரத்தினத்தை அணிந்து இருந்த பெண்ணின் அருகில் அவர் செல்ல,சிரஞ்சீவி ஜாம்பவானை கிருஷ்ணர் எதிர்கொள்ள நேர்ந்தது.இருவருக்குள் துவந்த யுத்தம் ஆரம்பமாகியது..21 நாட்கள் தொடர்ந்து நடந்த போரில் இருவருக்குமே வெற்றி,தோல்வி கிட்டவில்லை..ஆனால் ஜாம்பவான் களைப்பு அடைந்தார்.இதற்கு மேல் தன் பக்தனை சோதனைக்கு உள்ளாக்க விரும்பாத கிருஷ்ணர் தன் முந்தைய அவதாரமான ராமர் உருவை எடுக்க ஜாம்பவான் உடனே கண்களில் கண்ணீர் தளும்ப ,”பிரபு..!என்னை மன்னித்து விடுங்கள்.எப்பேர்பட்ட இழிவான காரியத்தை செய்து விட்டேன்.”என கிருஷ்ணன் கால்களில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்..ஜாம்பவான் இராமரின் சேவகன்.ராமர் இராவணனுடன் போர் புரிந்த பொழுது அனுமனோடு சேர்ந்து போர் புரிந்தவர் தான் ஜாம்பவான்.
கிருஷ்ணர் தான் வந்த காரணத்தை உரைக்க,ஜாம்பவான் தன் மகளை அவருக்கு மணம் முடித்து சியாமந்தக ரத்தினத்தையும் பரிசாக கொடுத்தார்.அந்த சியாமந்தக மணியை சத்திரஜித்திடம் ஒப்படைத்த கிருஷ்ணர் நடந்த உண்மையை சொல்ல,சத்திரஜித் தன் தவறை உணர்ந்தான்.பின் அவன் மகள் சத்ய பாமாவை கிருஷ்ணருக்கு மணம் முடித்து சியாமந்தக மணியை கிருஷ்ணருக்கே சீதனமாக கொடுத்து விட்டான்..அந்த சியாமந்தக மணி தான் கிருஷ்ணர் மூலமாக அக்ரூரர் முன்னோர்களுக்கு கொடுக்கப்பட்டது.அதை யாருக்கும் விற்க கூடாது,சீதனமாக மட்டுமே கொடுக்க வேண்டும்.அந்த ரத்தினம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் புரிவார்.செல்வம் தழைத்தோங்கும்,முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.தவறான காரணத்திற்கு உபயோகித்தால் அந்த ரத்தினம் உபயோகித்தவரையே அழித்துவிடும்..அந்த ரத்தினத்தை தான் அக்ரூரரின் சம்பந்தி சீதனமாக கேட்கிறார்.ஆனால் அந்த சியாமந்தக ரத்தினம் யாரிடம் போய் சேர வேண்டும் என்ற நபரை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டது.

அக்ரூரருக்கு நேற்றில் இருந்து ஏனோ மனசே சரியில்லை..ஏதோ தவறு நடக்க போகிறது என இடக்கண் தொடர்ந்து துடிப்பதை வைத்து உணர்ந்து கொண்டார்.
போதாக்குறைக்கு அவர் வாசற்படியில் காலடியை வைத்த நேரம் அவர் பின்னந்தலையில் பல்லி விழுந்து நெருக்கமானவர்களுக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்த்தியது.
ஓட்டமும் நடையுமாக தன் இருப்பிடத்தை நோக்கி விரைந்தார்.அவர் தன் வீட்டை அடைவதற்குள் சூரியன் உச்சியை நெருங்கி விட்டு இருந்தது.அவர் நினைத்தது போலவே விலாசினி அங்கு இல்லை.சுற்றும் முற்றும் விசாரிக்க அவள் நேற்று மாலை இருந்தே காணவில்லை என கூறினர்.

வேறு வழியின்றி கதவை தாளிட்டு மறைத்து வைத்து இருந்த சியாமந்தக ரத்தின மணியை வெளியில் எடுத்தார்.

அக்ரூரர் சம்மணமிட்டு அமர்ந்து,ரத்தினமணியை முன்னே வைத்து அதன் முன் இரு கைகூப்பி,”சுயநலனுக்காக இந்த ரத்தினத்தை பயன்படுத்த கூடாது என்று எனக்கு தெரியும் ரத்தினமே,ஆனால் எனக்கு வேறு வழியில்லை.என் மகளுக்கு என்ன ஆயிற்று கூறு ரத்தினமே..!என்று வேண்டினார்.

அந்த ரத்தினத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அப்படியே படக்காட்சிகள் போல விரிந்தன.. ஆரா மற்றும் அவன் மனைவி, விலாசினியை அழைத்து சென்றதையும், விலாசினி காத்தவராயன் பிடியில் சிக்கி தன் விலாசத்தை இழந்ததையும் அவரால் கண்கூடாக பார்க்க முடிந்தது.

இந்த ஊரில் யாருக்கும் எது நடக்கக்கூடாது என சப்த கன்னியர்களை காவல் வைத்தாரோ,கடைசியில் எல்லாவற்றையும் மீறி அவள் பெண்ணே காத்தவராயனிடம் சென்று பலியாகி விட்டாள் என்று நினைக்கும் பொழுது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

அவரது குடிசையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
உடனே அவசரம் அவசரமாக கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு வெளியே வர,அங்கு மகேந்திர்வர்மன் தன் படைகளோடு நின்று இருப்பதை பார்த்ததும் துணுக்குற்றார்.

அவர் முகத்தில் தெரிந்த கலக்கத்தை பார்த்த மகேந்திரவர்மன்,”முனிவரே, நான் தங்களிடம் தனிமையில் பேச விரும்புகிறேன்..”என்று கூறினார்.

ஏற்கனவே நொந்து போய் இருந்த அக்ரூரர்,”நான் தற்போது யாரையும் பார்க்க எண்ணமில்லை..”என சொல்லிவிட்டு கதவை தாழிட முயற்சி செய்ய மகேந்திரவர்மன் தடுத்தார்..