மகேந்திரவர்மன் மற்றும் அவனது படைகள் மாயமலையை நெருங்கின.செடி கொடிகளை போல் மரங்களை பிடுங்கி எறிந்து கொண்டு குன்று ஒன்று இடம் பெயர்ந்து வருவது போன்ற உருவத்தை வீரர்கள் பார்த்தனர்.அவர்கள் முன்னே படம் எடுத்து வந்து நின்ற அதன் உருவத்தை பார்த்ததுமே சில வீரர்கள் மயங்கி விழுந்தனர்.சாதாரண பாம்பை கண்டாலே படையும் நடுங்கும்.இந்த மலை போன்ற பாம்பை கண்டால் எந்த படைவீரர்கள் தான் முன்னே நின்று போரிட முடியும்.ஒருவேளை இந்த கார்கோடகனை பார்த்து தான் பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழி எழுதி வைத்தார்களோ என்னவோ..!
“வீரர்களே..!ஏன் பயந்து நடுங்கிறீங்க..உங்கள் ஆயுதங்களை எடுத்து அதன் மேல் வீசுங்கள்” என மகேந்திரவர்மன் கட்டளையிட்டான்..வீரர்கள் வீசிய அம்புகளும்,வேல்களும்,கார்கோடகனுக்கு ஏதோ குண்டூசி குத்தியது போல் இருந்தது.ஆனால் இந்த செய்கையில் கோபம் அடைந்த கார்கோடகன் உடனே தன் உஷ்ண பெருமூச்சை வெளியிட முன்னே இருந்த வீரர்கள் மயங்கி விழுந்தனர்.பல வீரர்களை வாலால் சுழற்றி வீசியது.
தன் வீரர்கள் தன் கண்முன்னே மயங்கி விழுவதை கண்ட மகேந்திரவர்மன் வெகுண்டு எழுந்தார்.இந்த நேரத்தில் மதிவதனி என்ன செய்வாள் என்று ஒரு கணம் யோசித்து பார்த்தார்.எதிரி எப்பேர்பட்டவனாயினும் துணிந்து போரிடும் அவளின் தீரத்தை ஒரு நிமிடம் நினைத்து பார்த்தார்.ஒருமுறை அல்ல மும்முறை காத்தவராயனை அவள் வீழ்த்தியதை அவர் மனதில் நினைத்து பார்க்க கிழவரான அவர் உடம்பில் புது இரத்தம் பாய்ந்தது.யானையின் மீது அமர்ந்து இருந்த மகேந்திரவர்மன்,யானையே விழுங்கக்கூடிய அளவில் இருந்த கார்கோடன் மீது தாவி பாய்ந்தார்..நேராக அதன் தலையில் மீது விழுந்த மகேந்திரவர்மன்,தன் கையில் இருந்த ஈட்டியால் கார்கோடனின் கண்ணை சரியாக குத்தினார்..ஒரு கண் பழுதான நிலையில் கார்கோடன் துள்ளி வாலால் மகேந்திரவர்மனை அடிக்க,அந்த தாக்குதலில் இருந்து குதித்து மன்னர் லாவகமாக தப்பினார்..குதித்த வேகத்தில் அதன் மண்டையில் நச்சென்று ஈட்டியை குத்த கார்கோடனால் வலியை சமாளிக்க முடியவில்லை.மகேந்திரவர்மனின் வீரத்தை பார்த்து உற்சாகம் அடைந்த மகேந்திரபுரி வீரர்கள் கார்கோடனின் உடலெங்கும் சரமாரியாக தாக்கினார்கள்.கார்கோடன் வலி தாங்காமல் தன் தலையை உலுக்க மகேந்திரவர்மன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.ஒரு கண்ணை இழந்த கார்கோடன் ஊர்ந்து கொண்டே மகேந்திரவர்மனை விழுங்க வந்த பொழுது வீரர்கள் தடுக்க வந்தனர்.அவர்களை தூக்கி வீசி கொண்டே கார்கோடன் முன்னேறி வர,”நில் கார்கோடா..”என்று சத்தம் கேட்ட திசையை கார்கோடன் நோக்கினான்..
பல்லக்கில் இருந்து வெளியே வந்து சியாமந்தக ரத்தின மணியை அணிந்து நின்று இருந்த அக்ரூரரை கண்டதும் கார்கோடன் பின்வாங்கினான்..
“ஆகா…இது கிருஷ்ண பகவான் அணிந்திருந்த மாலை அல்லவா..இவரை எதிர்த்து நான் எப்படி போரிட முடியும்..”என நினைத்த கார்கோடன் வாலை சுருட்டி கொண்டு அமைதியானது..
“மன்னிக்கவும் அக்ரூரரே..!பிருந்தாவனத்தில் என் கர்வத்தை அடக்கிய கிருஷ்ணரின் மாலை தங்களிடம் இருப்பதை பார்த்தும் நான் போரிட்டால் அதுவே என் அழிவுக்கு வழி வகுத்து விடும்.அதனால் இக்கணமே நான் இங்கு இருந்து செல்கிறேன்..”என்று ஒடி ஒளிந்தது.
தடை காணாமல் போக மாயமலை உள்ளே அனைவரும் பிரவேசித்தனர்.
மாயமலையின் பிரமாண்ட பள்ளத்தாக்குகளையும்,அடர்த்தியான மரங்களையும் மகேந்திரவர்மன் பார்த்து கொண்டே வந்தார்.மாயமலை பற்றி கேள்விப்பட்டதை விட இன்னும் பயங்கரமாக உள்ளதே..!என மனசுக்குள் வியந்து கொண்டே வந்தார்.அக்ரூரர் சொன்ன வழிப்படி வந்ததால் மதிமயக்கும் வனம் வழியே அவர்கள் வரவில்லை.அதன் வழியே வந்து மதிவதனி காத்தவராயனிடம் சிக்கி கொண்டேன் என்று அவளும் கூறி இருந்தது அவருக்கு ஞாபகம் இருந்தது.
மாயமலை கோட்டை நெருங்கிய உடன் இருட்டு கவிழ ஆரம்பித்துவிட்டது..கோட்டையை சுற்றி இருந்த காத்தவராயன் தளபதி ஆவிகளின் அமானுஷ்யங்கள் ஆரம்பித்து விட்டன.இதை பார்த்து வீரர்கள் பயப்பட அக்ரூரர் முன்னே வந்தார்.
“மன்னா இதற்கு மேல் நான் முன்னே செல்கிறேன்..நான் சியாமந்தக ரத்தின மணியை அணிந்து இருப்பதால் கெட்ட சக்திகள் இதை பார்த்து ஓடிவிடும்.ஆனால் காத்தவராயன் ஆவி மட்டும் மானிட உடலில் இருப்பதால் அது மட்டும் முன்னின்று தாக்குதலை நடத்தும்.. விராடன் உடலில் இருந்து காத்தவராயன் ஆவியை பிரித்து விட்டால் பிறகு கவலை இல்லை.அவனை நான் கட்டுபடுத்தி சிறைப்பிடித்து விடுவேன்..ஆனால் விராடன் உடம்பில் இருந்து காத்தவராயன் ஆவியை பிரிப்பது தான் மிக சிரமம்..”
மன்னர் ஆச்சரியப்பட்டு”சக்தி வாய்ந்த உங்களால் கூட முடியாதா..!”என கேட்டார்.
“ஆமாம் மன்னா..! விராடன் உடம்பில் இருந்து விலாசினி உடன் காத்தவராயன் உடலுறவு கொள்ளாது இருந்தால் என்னால் விராடன் உடம்பில் இருந்து அவனை பிரித்து இருக்க முடியும்.ஆனால் உடலுறுவு கொண்ட பிறகு விராடன் தன் சொந்த மகன் உடல் என்பதால் விராடன் உடலில் உள்ள அணுக்களோடு காத்தவராயன் ஒன்றி விட்டான்.காத்தவராயன் நினைத்தால் மட்டுமே விராடன் உடம்பில் இருந்து வெளிவர முடியும். அதுவும் விராடன் உடம்பை அழித்த பிறகு தான் அவனும் வெளிவர முடியும்.தன்னுடல் கிடைக்கும் வரை விராடன் உடம்பில் இருந்து காத்தவராயன் வெளியே வர மாட்டான்.இதனால் தான் முதலில் வர தயங்கினேன்..”
“அப்போ விராடன் உடலில் இருந்து காத்தவராயனை பிரிக்க முடியாதா..!”மன்னர் சஞ்சலத்துடன் கேட்டார்.
“முடியும்..அதற்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது.அதாவது விராடன் உடலில் உள்ள காத்தவராயன் ஆவியை மீறி விராடன் ஆத்மா மேலேறி வர வேண்டும்..அப்படி வர வேண்டுமெனில் விராடனை பாதிக்கும் சம்பவம் ஏதாவது ஒன்று அங்கு நிகழ வேண்டும்.அப்படி நிகழ்ந்தால் மட்டுமே என்னால் காத்தவராயன் ஆவியை கட்டுப்படுத்தி அதற்கு சாபம் இட முடியும்.. விராடன் உடம்பில் காத்தவராயன் இருக்கும் பொழுது நான் சாபம் இட்டால் அது விராடனை சேர்த்து பாதிக்கும்.அக்காரியத்தை மட்டும் நான் செய்ய மாட்டேன்..”
அக்ரூரர் பேச்சை கேட்டு மன்னர் சற்று தளர்ச்சி அடைந்தாலும் நம்பிக்கை இழக்கவில்லை.நிச்சயம் ஏதாவது வழி கிடைக்கும் என மன்னர் பத்து வீரர்களோடு மட்டும் அக்ரூரர் உடன் வர கோட்டைக்குள் நுழைந்தார்.
வெளவால்களின் சத்தமும்,கோட்டான்களின் கும்மாளமும் மாயமலை கோட்டையை மிக பயங்கரமாக காட்டின. விலாசினி உள்ளே நுழைந்த பொழுது விளக்குகளின் அலங்காரத்தில் மின்னி கொண்டு இருந்த மாயமலை கோட்டை இப்போ அதற்கு நேர் எதிராக இருட்டாக இருந்தது.
சியாமந்தக மணி அக்ரூரர் அணிந்து இருந்ததால் அவரை எந்த தீய சக்தியும் நெருங்கவில்லை.மேலும் இருட்டாக இருந்த மாயமலை கோட்டையை அது வெளிச்சம் ஆக்கியது.மகேந்திரவர்மனின் படை வீரர்களை ஆவிகள் ஆக்கிரமித்து ஒருவரையொருவர் தங்களுக்கு உள்ளேயே சண்டை போடுமாறு செய்தன..அக்ரூரர் தன்னால் முடிந்தவரை ஒவ்வொரு ஆவியாய் அடக்கி கொண்டு வந்தாலும் சில உயிர் சேதம் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை. எங்கு தேடினும் விலாசினியையோ,விராடனையோ காண முடியவில்லை.
எல்லா ஆவிகளை அடக்கிய பிறகு காத்தவராயன் குரல் கேட்டது.”வா அக்ரூரரா..! மந்திரகட்டை உருவாக்கி என்னை உன் நாட்டுக்குள் நுழைய விடாமல் செய்தாய்.இப்போ உன் பெண்ணை என் மந்திர கட்டுக்குள் வைத்து உள்ளேன்.முடிந்தால் காப்பாற்றி கொள்..”என சிரித்தான்.
சுற்றும் முற்றும் பார்த்தாலும் காத்தவராயன் உருவம் கண்ணுக்கு தென்படவில்லை.கோட்டை முழுக்க தேடியும் விலாசினியும் கிடைக்கவில்லை.எல்லோரும் தேடி தேடி களைத்து ஓய்ந்தனர்.
“அக்ரூரரே …இப்படி தேடினால் உங்கள் மகள் கிடைக்க மாட்டாள்..எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.எல்லோரும் உங்கள் அருகில் இருப்பதால் காத்தவராயன் நம் முன்னே தோன்றாமல் இருக்கிறான்.நாங்கள் பிரிந்து தனியாக தேடி செல்கிறோம்,கண்டிப்பாக எங்களை அழிக்க காத்தவராயன் என் முன்னே வருவான்.பிறகு நீங்கள் வாருங்கள்..”
“மன்னா இது மிகவும் ஆபத்து..”என அக்ரூரர் எடுத்துரைத்தார்.
“ஆனால் வேறு வழியில்லை முனிவரே..இன்று இரவு காத்தவராயனை அடக்கியே ஆக வேண்டும்”
மன்னர் ஒருபுறமும்,அக்ரூரர் ஒருபுறமும் பிரிந்தனர்.
மன்னர் காலம்
மகேந்திரவர்மன் போட்ட திட்டம் வேலை செய்தது.கோட்டையின் பின்பகுதியில் தேடிச் செல்ல நதியின் ஓசை கேட்டது.
நதியின் அருகே நிலா வெளிச்சத்தில் யாரோ நடந்து வருவது போல தோன்றியது..ஆனால் திடீரென அவ்வுருவம் காணாமல் போனது.
மகேந்திரவர்மன் கூட வந்த வீரர்களுக்கு பயத்தில் கை கால் நடுங்கின.கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு உருவம் வந்து ஒரு வீரனை கொத்தி போனது..இப்படியே காத்தவராயன் மகேந்திரவர்மன் கூட வந்த வீரர்களை ஒவ்வொருவராய் பலி வாங்கி விட்டான். அடுத்து மீதம் இருந்தது மகேந்திரவர்மன் மட்டுமே..
மகேந்திரவர்மனையும் காற்றாக வந்து தூக்கி தூக்கி போட்டான்.கடைசியில் அரண்மனை மொட்டை மாடியில் தூக்கி வீச மகேந்திரவர்மன் உருண்டு புரண்டு விழுந்தார்.
கை கால்கள் எங்கும் காயங்கள் உண்டாக மகேந்திரவர்மன் கத்தினார்..”டேய் காத்தவராயா..இது உன் இடம்,எனக்கு இப்போ கூட பயம் இல்லை.ஆவியாக இருப்பதால் உனக்கு பலம் கூடி இருந்தும் பயந்தாங்கொள்ளி போல இப்படி ஒளிந்து இருந்து போர் புரிகிறாயே..!வெக்கமா இல்ல..!உன்னை மும்முறை தோற்கடித்த மதிவதனியின் தந்தை போருக்கு அழைக்கிறேன்..தைரியம் இருந்தால் நேருக்கு நேர் போட்டிக்கு வாடா..!”
காத்தவராயன் விராடன் உடலில் மகேந்திரவர்மன் தோன்றினான்..
“பல வருடங்களுக்கு முன்பே,என்னிடம் தோற்று ஓடிய கோழை தானே நீ..!இப்போ மட்டும் எங்கிருந்து வந்தது இந்த தைரியம்..அன்று உனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தேன்..இன்று அதற்கு வாய்ப்பே இல்லை.மதிவதனி போன்ற அற்புதமான பேரழகியை பெற்று,அவளை எனக்கு அனுபவிக்க கொடுத்த உனக்கு மட்டும் மரணத்தில் சலுகை தரலாம் என நினைக்கிறேன்..உன்னோட முடிவு எப்படி இருக்க வேண்டும் என சொல்,அல்லது வலியில்லாத மரணம் நானே தரட்டுமா..”
மன்னரின் முகம் கோபத்தால் சிவந்தது.”துஷ்டனே..!இதுவரை மாயமந்திரங்களை பயன்படுத்தி தந்திரமாக வெற்றி பெற்று கொண்டு இருந்தாய்.அதையும் என் மகள் உடைத்து உன் கையாலாகாததனத்தை வெளி உலகுக்கு காட்டி விட்டாள்..இன்று உனக்கு முடிவுரை எழுதும் நாள்”என மகேந்திரவர்மன் வாளை சுழற்றினார்.
மன்னன் பேச்சை கேட்டு காத்தவராயனுக்கும் கோபம் வந்தது. “மாமனார் என்று போனால் போகிறது என்று உன்னை விட்டு வைத்தால் உன் வாய் எல்லை மீறி விட்டது.இப்பவே உன்னை கொன்று பித்ரு லோகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்”என காத்தவராயன் மகேந்திரவர்மன் மீது பாய்ந்தான்..
இரண்டு பேருக்கும் துவந்த யுத்தம் ஆரம்பாகியது..ஒருவரையொருவர் விட்டு கொடுக்காமல் மொட்டை மாடியில் சண்டை போட்டனர்.சில சமயம் காத்தவராயன் பின்வாங்க நேர்ந்தது.முன்பு போரில் என்னிடம் தோற்ற அதே மகேந்திரவர்மன் இவன்தானா. !என காத்தவராயனுக்கு சந்தேகம் வந்தது..
காத்தவராயனும், மகேந்திரவர்மனும் நீண்ட சண்டையிட்டு கொண்டே இருக்க,ஒரு கணத்தில் காத்தவராயன் கையில் இருந்த வாள் நழுவியது.
“காத்தவராயா.உன்னை பற்றி கிளப்பி விட்ட வதந்திகளை நம்பி போரில் ஏமாந்து விட்டேன்.ஆனால் என் மகள் உன்னை தோற்கடித்து வெல்லும் வழியை காட்டி விட்டாள்..இன்றோடு நீ தொலைந்தாய்..”என மகேந்திரவர்மன் அவன் மீது வாளோடு பாய காத்தவராயன் உடனே மாயமாய் மறைந்தான்.அங்கங்கே தோன்றி,மறைந்து காத்தவராயன்,மகேந்திரவர்மனை அலைக்கழிக்க,கடைசியாக மொட்டை மாடியில் இருந்த முற்றம் போன்ற அமைப்பில் மன்னன் முட்டி கொண்டான்..அதில் கண்ணாடி பதிக்கப்பட்டு கீழே விலாசினி இருப்பதை பார்க்க முடிந்தது..அதை பார்த்து மகேந்திரவர்மன் அயர்ந்து,”கோட்டை முழுக்க தேடினோமோ இந்த அறை கோட்டையில் தானே இருக்கிறது.இதை எப்படி தவற விட்டோம்”என அவர் யோசித்து தடுமாறி நின்றார்..
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு,மின்னல் போல் அந்த முற்றத்தின் மேலே தோன்றிய காத்தவராயன் மகேந்திரவர்மன் மார்பில் எட்டி உதைத்தான்.அவன் உதைத்த வேகத்தில் மன்னரும் பின்னாடி காற்றில் பறந்து கீழே விழுந்து மயக்கம் அடைய,அவர் மார்பில் வாளை பாய்ச்ச தயாரானான் காத்தவராயன்.
“அது என்னுடைய ரகசிய அறை..மகேந்திரவர்மா..!யாராலும் கண்டுபிடிக்க முடியாது.அந்த ரகசியத்தை அறியாமலேயே மயக்கத்திலேயே செத்து போ..”என காத்தவராயன் வாளை ஓங்கிய நேரம்”நில் காத்தவராயா..!இன்னும் ஒரு அடி நீ வாளை கீழே இறக்கினால் இவள் கழுத்தை அறுத்து போட்டு விடுவேன்..”என ஒரு பெண்ணின் உடலை அக்ரூரர் தரையில் கிடத்தினார்.
காத்தவராயன் கடகடவென சிரித்தான்..”என்ன அக்ரூரரே !விளையாட்டு காட்டியது போதும்.நீயாவது உன் மகளை கொல்வதாவது..”என காத்தவராயன் சிரித்து கொண்டே , மன்னன் நெஞ்சில் வாளை பாய்ச்ச கீழே இறக்கினான்.
“நான் பொய் உரைக்கவில்லை காத்தவராயா..!விலாசினி உடம்பில் உயிர் இருந்தால் தானே,அவள் வயிற்றில் வளரும் சிசுவை கொண்டு உன் உடலை பெற முடியும்.இதோ இப்பொழுதே இவளை அழிக்கிறேன்..”என படாரென அவள் நெஞ்சில் வாளை பாய்ச்சி விட்டார். விலாசினி அலறல் சத்தம் “விராடா….”என்று பயங்கரமா கேட்டது..அது விராடன் உடம்பில் இருந்த அவன் ஆத்மாவை தட்டி எழுப்பியது.
இதை பார்த்த காத்தவராயன் பதறவில்லை.ஆனால் விராடன் ஆத்மா பதறியது..அது காத்தவராயன் ஆவியை முந்தி கொண்டு மேலே வர விராடனுக்கு நினைவு வந்தது..
கீழே துடித்து கொண்டு இருந்த விலாசினியை பார்த்ததும் அவன் கண்கள் கலங்கியது. விலாசினியை பார்த்தான்,அவன் கையில் இருந்த வாளை பார்த்தான்.காத்தவராயன் ஆவி மீண்டும் உடலில் அவன் ஆத்மாவை மீறி ஆக்கிரமிப்பதை உணர்ந்தான்.நொடி பொழுதும் தாமதிக்கவில்லை..! தன் கழுத்தை தானே அறுத்து கொண்டான்..அவன் ரத்ததுளிகள் பட்டு மகேந்திரவர்மனுக்கு விழிப்பு வந்தது..
