கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 20 10

‘ரகு, விடியற்காலையிலேயே புறப்பட்டு பாண்டிச்சேரிக்கு
“ஆஃபீஸ் விசிட்டுக்கு’ன்னு போயாச்சு. புதன் கிழமை ஈவினிங்தான் வரேன்னு சொல்லிட்டு போயிருக்கான். ஸ்கூட்டர் சும்மாதானே துருப்புடிக்குது வரண்டாவுல… சுகன்யாவை, இங்கே இருக்கற வரைக்கும், அதை எடுத்து ஓட்ட சொல்லுன்னு சொல்லிட்டுப் போயிருக்கான் உன் மாமன் … நீ என்னை என் ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு, வண்டியில பெட்ரோல் இருக்கான்னு செக் பண்ணிக்க; அப்படியே தாத்தா வீட்டுக்குப் போயிடேன்…”

‘ம்ம்ம் … அப்பா போன் பண்ணா என்னச் சொல்ல?’

‘நீ தூங்கிக்கிட்டிருக்கும் போதே என் புருஷன் கிட்ட பேசவேண்டியதெல்லாத்தையும் நான் பேசி முடிச்சிட்டேன்! எங்க பேச்சாலே நீ டிஸ்டர்ப் ஆக கூடாது பாரு!”

சுகன்யா தன் தாயை சட்டென திரும்பி பார்த்தாள். சுந்தரி தன் கழுத்திலும், முதுகிலும் பவுடரை பூசிக்கொண்டிருந்தவள் நமட்டு சிரிப்புடன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தாள். சுந்தரியின் தலையில் மல்லிகைப்பூ கமகமத்துக்கொண்டிருக்க, கழுத்திலும், கையிலும் நேற்று மாமியார் போட்ட நகைகள் மின்னிக்கொண்டிருந்தன.

‘ஏம்மா … நேத்தே உன் கிட்ட “சாரி” சொல்லிட்டேன்!. அப்புறம் ஏன் இப்படியெல்லாம் பேசறே?” சுகன்யா தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவள் முதுகில் தொங்கினாள்.

‘விடுடி … ஸ்கூலுக்கு கிளம்பறேன் … கட்டிப்புடிச்சி வேணுமின்னே கட்டிக்கிட்டு இருக்கற காட்டன் புடவையை கசக்கறே?

‘நீ என்னைப் பாத்து விஷமமா சிரிச்சா … கிண்டலா பேசினா … நானும் பதிலுக்கு பதில் அப்படித்தான் பண்ணுவேன்!

“போதுண்டி செல்லம் … கழுத்து வலிக்குதும்மா..” சுந்தரி பெண்ணிடம் கெஞ்சினாள்.

“அம்மா … நான் ஒண்ணு சொல்லட்டா … கோச்சிக்க மாட்டியே?” சுகன்யாவின் கண்களில் குறும்பு கொப்பளித்துக்கொண்டிருந்தது.

“ம்ம்ம் … எதுவாயிருந்தாலும் சீக்கிரம் சொல்லித் தொலை…”

‘அப்பா வீட்டுக்கு வந்ததுலேருந்து உன் மூஞ்சே ஒரு பொலிவா இருக்கும்மா … நாளுக்கு நாள் உன் அழகு கூடிக்கிட்டே போகுது; இன்னைக்கு நம்ம வீட்டு தோட்டத்து மல்லிப்பூ வேற உன் தலையில ஏறிக்கிச்சா, நீ வாசனையா இருக்கேம்ம்மா..” சொல்லிய சுகன்யா தாயின் பின் கழுத்தை முகர்ந்து நீளமாக தன் மூச்சை இழுத்தாள்.

பெண்ணின் பேச்சால், சுந்தரியின் உடல் சிலிர்த்து, அவள் முகம் சட்டென சிவந்து, அதில் ஒரு பெருமிதம் குடியேறியது.

‘சுகா ரொம்ப வழியாதே! எனக்கு நேரமாச்சும்மா … கிளம்புடிச் செல்லம்; டிபனுக்கு இட்லி, குருமா பண்ணியிருக்கேன்; இருக்கற குருமாவை ஒரு டப்பாவிலே போட்டுக்க; உனக்கு நாலு இட்லிதான் வெச்சிருக்கேன் … அதையும் எடுத்துக்கோ; தாத்தா வீட்டுலயே போய் சாப்பிட்டுக்கோ…”

வாசலை நோக்கி வேகமாக நடந்த சுந்தரி, நடையில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை, தள்ளிக்கொண்டுப் போய் தெரு வாசலில் நிறுத்தி சீட்டின் மேல் படிந்திருந்த தூசைத் துடைக்க ஆரம்பித்தாள்.

“ஒரு நிமிஷம் நில்லும்மா.. டிரஸ் மாத்திக்கிட்டு இதோ வந்துட்டேன்…”