கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 13 7

அம்மா! … தாயே காமாட்சி! உன்னை கையெடுத்து கும்பிட்டு … உங்கிட்ட என் கொறயை சொல்லணும்ன்னு நெனைச்சேன். நான் கேக்கறதுக்கு முன்னாடியே என் ஆசையை நீ நிறைவேத்திட்டியே? அடுத்த நொடி அவள் மனசு இறைக்கு நன்றி சொல்லியது.

சுந்தரியின் கால்கள் இலேசாக நடுங்க ஆரம்பித்தது. அவள் கால்கள் துவண்டன. பால்கனியில் நிற்க முடியாமல், மெதுவாக அறைக்குள் சென்று ஹாலில் இருந்த நாற்காலியின் நுனியில் உட்க்கார்ந்தாள். கீழ போய் வான்னு சொல்றதா, இல்லை அவனே மேலே வர்ற வரைக்கும் பொறுத்திருப்பதா? ஒரு நொடி புரியாமல் சுந்தரி மனதுக்குள் மருகினாள். விருட்டென திரும்பி இரும்பு அலமாரியில் பதித்திருந்த ஆளுயர கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். நேற்றிரவு சரியாக தூங்காமல், காலையிலிருந்து தலையை சிக்கெடுத்து வாராமல் முகம் சற்றே வீங்கி, வெளுத்திருந்தது.

அடியே சுந்தரி, நல்லா இருக்குடி நீ போடற நாடகம் … வீட்டுக்கு வந்தவனை வாங்கன்னு வாய் நிறைய கூப்பிடறதை விட்டுட்டு, ஏதோ தப்புப் பண்ணவ மாதிரி உள்ள வந்து உட்காந்துகிட்டு, கண்ணாடியில புதுப்பொண்ணு மாதிரி மூஞ்சைப் பாத்துக்கறே? மனது அவளைத் துளைத்தது. அதே மனது, தெரு வரைக்கும் வந்தவனுக்கு வீட்டு உள்ள வரத் தெரியாதா? புது மாப்பிளையா வீட்டுக்கு வரான் … ஆரத்தி எடுத்து கொட்டறதுக்கு? அடியே ! பட்டதுக்கு அப்புறமும் உனக்கு புத்தி வரலயே, நீ செய்யறது, சரியா.. தப்பான்னு நீயே யோசனைப் பண்ணிக்க நீ அடிச்சித் தொரத்தினவன் ஆசையா உன்னைப் பாக்க வர்றான் … உன் குறுக்குப் புத்தியை வுட்டுட்டு, ஒழுங்கா நடந்துக்க … அவள் எண்ணங்கள் அவளை புரட்டி எடுத்தன.

சுகன்யா, வெறுமனே மூடியிருந்த வாயில் கதவைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த போது, சுந்தரி தலையை குனிந்தபடி தன் இரு கைகளையும் கோத்து மடியின் மேல் வைத்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா …”

“ஆட்டோ சத்தம் கேட்டுது … எட்டிப்பாத்தேன் … எங்கடி உன் அப்பா? … உன் கூட வந்தவரை வெளியிலேயே நிக்க வெச்சுட்டு நீ மட்டும் உள்ள வந்துட்டியே? குரல் முணுமுணுப்பாக வந்தது சுந்தரியிடமிருந்து.

“எம்மா … உன் டீச்சர் அதிகாரத்தை என் கிட்ட காட்டதே? இது உன் பள்ளிக்கூடம் இல்லே … என் அப்பாவை நான் வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டேன் … உன் புருஷனை நீதான் எழுந்து போய் உள்ள வாங்கன்னு கூப்பிடணும் …” சுகன்யா தீர்மானமாக பேசினாள்.

சுகன்யாவின் பேச்சிலிருந்த கசப்பான உண்மை சுந்தரியைச் சுட, முளைச்சு மூணு எலை விடல; ஆத்தாளுக்கு புத்தி சொல்றா … சட்டென வந்த கோபத்தில், கை விரல்கள் நடுங்கின; அவள் கால்களும் நடுங்கி வலுவிழந்தன. பெண்ணின் பேச்சால், மீண்டும் தலைக்கு வேகமாக ஏறிய ரத்தத்தால் அவள் முகம் சூடாகி, சற்றே நிறம் மாறியது. மனதில் எழுந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பால், அவளது விழிகள் கலங்கி நீரைப் பெருக்க, மூக்கு நுனிகள் விடைக்க, கீழ் உதட்டை பற்களால் அழுத்தி கடித்து அதன் துடிப்பை அடக்க முயன்றவள், தன் முயற்சியில் வெற்றியடையாமல், வேகமாக எழுந்து அறைக்கு வெளியில் ஓடினாள்.

“வாங்க! … ஏன் இங்கேயே நிக்கறீங்க … உள்ளே வாங்க! … குமரு … என் மேல இருக்கற கோவம் இன்னும் தீரலயா? நான் வான்னு சொன்னாதான் … வீட்டுக்குள்ள வருவியா? இது என் வீடு இல்லங்க … இது உங்க பொண்ணோட வீடு … உனக்கு இப்பத்தான் என் ஞாபகம் வந்துச்சா? … ம்ம்ம் … இவ்வள நாளா என்னை அழ வெச்சு பாத்ததுலே … உனக்கு சந்தோஷம்தானே?
“ சுந்தரி விம்ம ஆரம்பித்தவள், அடுத்த நொடி தன் வாய் விட்டு ஓவென கதற ஆரம்பித்தாள்.

சுகன்யா வேகமாக மாடியேறி வந்துவிட, அவள் பின்னால் ஆட்டோவை அனுப்பிவிட்டு, நிதானமாக ஒவ்வொரு படியாக மேலே ஏறி வந்து, மாடிக்குள் நுழைந்து, மாடி வெராண்டாவில், ஷூவை கழற்றிக்கொண்டிருந்த குமாரசுவாமி, அழுதபடி தன்னை வரவேற்ற சுந்தரியை, எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்தார். ஒரு நொடிக்குப் பின் அவளை வேகமாக நெருங்கி, தன் இடது கையை அவள் தோளில் போட்டு தன் மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டார். இடது கையால் அவள் முகத்தை நிமிர்த்தி,
“அழாதே … சுந்தரி … ப்ளீஸ் அழாதே” சொல்லிக்கொண்டே, அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டார்.

தன் தாயின் பின்னால் வெளியில் வந்த சுகன்யாவும், வாங்கப்பா, வீட்டுக்குள்ள வாங்கப்பா என வாய் நிறைய தன் தந்தையை வரவேற்றவள்,
“அப்பா … அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு உள்ள வாங்கப்பா … அம்ம்மா, எதுவாயிருந்தாலும் உள்ளே வந்து பேசும்மா” சொல்லிக் கொண்டே திரும்ப அறைக்குள் ஓடி, ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்த குளிர்ந்த நீரை, கண்ணாடி கிளாஸில் ஊற்ற ஆரம்பித்தாள்.

உள்ளே நுழைந்த தகப்பனிடம், தண்ணீரை கொடுத்து உபசரித்தாள். குமாரசுவாமி ஹாலிலிருந்த சோஃபாவில் உட்க்கார்ந்து, சுந்தரியை தன் அருகில் உட்க்கார வைத்தான். சுந்தரி தன் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க முடியாமல், குமாரின் தோளில் தன் முகத்தைப் பதித்துக்கொண்டு மீண்டும் ஓசையின்றி அழ ஆரம்பித்தாள். குமார் எதுவும் பேசாமல், தன் மனைவியின் தலையை மவுனமாக, மனதில் பொங்கும் ஆசையுடன் வருடிக் கொண்டிருக்க, கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவர் கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *