கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 13 16

“ஆமாப்பா … அப்பா! உங்களாலே நான் அம்மாகிட்ட இன்னைக்கு சரியா திட்டு வாங்கப் போறேன்” சுகன்யா தன் கருவிழிகளை அகலமாக விரித்து சிரித்தாள்.

“ஏம்மா … நான் என்ன பண்ணேன்?

“அம்மா மதியத்துக்குன்னு தயிர் சாதமும், தக்காளி சட்னியும் பேக் பண்ணி குடுத்தாங்க; உங்க கூட நான் ஹோட்டல்ல உக்காந்து நல்லா மூக்கு பிடிக்கத் தின்னுட்டு, அதை வீட்டுக்குத் திருப்பி எடுத்துக்கிட்டு போனா, முத்தமா குடுப்பாங்க; தொடையை திருவி எடுத்துடுவாங்க;”

“ம்ம்ம் … என் பொண்ணை திட்டவோ, கிள்ளவோ நீ யாருடின்னு நான் கேக்கறேன்?” சிரித்தார் குமாரசுவாமி.

“சரிப்பா … நீங்க என் கூட இருக்கும் போது எனக்கென்ன பயம்? ஆனா அவங்க கிட்ட நீங்க திட்டு வாங்காம இருந்தா சரி! அம்மா நடுவுல ரொம்ப மாறிட்டாங்கப்பா …

“ஏம்மா … அப்படி சொல்றே? அவ எனக்கு முதல்ல பொண்டாட்டி; அப்புறம்தான் உனக்கு அம்மாவா ஆனா; சும்மா என்னை நீ பயமுறுத்தாதே? என் சுந்தரியைப் பத்தி எனக்குத் தெரியாதா? தங்கமாச்சே அவ?” சிறிது நேரம் டல்லாக இருந்த தன் பெண் மீண்டும் முகம் மலர்ந்து சிரிப்பதை கண்ட மகிழ்ச்சியில் அவரும் சிரித்தார்.

“நீங்களே நேரா வந்து உங்க தங்கத்தைப் எடை போட்டு பாருங்க; இப்ப உங்க பத்தரை மாத்து தங்கத்தை பாக்கறதுக்கு கிளம்புங்க ..” தன் தந்தையுடன் சேர்ந்து அவளும் சிரித்தாள்.

“ம்ம்ம் … ஆனா ஆறு மணிக்கு எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு. என் கீழ வொர்க் பண்றவரோட மகன் ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பெட்டல்ல அட்மிட் ஆயிருக்கான். ஈவினிங் அவனை நான் பாக்கப் போகணும் … அப்புறமா அங்கேயிருந்து நான் எங்க ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸுக்கு போயிடலாம்ன்னு இருக்கேன்.

“இப்ப மணி ரெண்டுதானே ஆகுது … நீங்க தாராளமா உங்க வேலையை முடிச்சுட்டு, நம்ம வீட்டுக்கே திரும்பி வந்து ராத்திரி சாப்பிடணும்; உங்க பொண்டாட்டி, பொண்ணு நாங்க ரெண்டு பேரும் குத்து கல்லாட்டாம் சென்னையில இருக்கறப்ப, எங்கேயோ கெஸ்ட் ஹவுஸ்ல்ல நீங்க ஏன் தங்கணும், அங்க கண்டதை ஏன் சாப்பிடணும்?”

“சரிடா ராஜா! இதைப்பத்தி நாம அப்புறம் பேசிக்கலாம் … உனக்கு ஐஸ் கிரீம் அயிட்டம் எதாவது வேணுமா? இல்லன்னா – பேரரை பில்லை கொண்டு வரச்சொல்லு.”

“அப்பா நாம வீட்டுக்கு ஆட்டோவில போகலாம்பா.”

“சரிடா கண்ணு; நீ ஒரு நிமிஷம் இங்கேயே நில்லு, உன் அம்மாவுக்கு பன்னீர் திராட்சைன்னா ரொம்ப பிடிக்கும்; எதிர்ல ஃப்ரெஷ்ஷா வெச்சிருக்கான்; நான் வாங்கிட்டு வந்துடறேன்.”

சுகன்யாவின் உடல் ஒரு நொடி சிலிர்த்தது. அம்மாவுக்கு என்ன பிடிக்கும்ன்னு அப்பா இவ்வளவு நல்லா ஞாபகம் வெச்சிருக்கார்; உடலால அவர் இப்ப என் கூட இருக்கார், ஆனா அவரு மனசு அம்மாவைப் பத்தித்தான் நெனைச்சிக்கிட்டிருக்கு. அவங்களை பாக்கணும்னு கிடந்து தவிக்குது. அம்மா மேல இவ்வளவு ஆசையும், பாசமும் வெச்சிருக்கிறவர், இவ்வளவு நாளா பிடிவாதமா, தயங்கி தயங்கி அவங்களை பாக்க வராம இருந்திருக்கார். ஏன் ரெண்டு பேரும் இப்படி வீம்பா ஒருத்தரை ஒருத்தர் பிரிஞ்சு தங்களுடைய இளமையை வீணாக்கிக்கிட்டாங்க? இதை தலை எழுத்துங்கறதா? இல்லை, அப்பா சொல்ற மாதிரி தனிப்பட்ட ரெண்டு பேரோட ஈகோவில் பட்ட காயத்தின் விளைவாலா?

தனிப்பட்ட மனுஷங்க மனசை புரிஞ்சிக்கறது ரொம்ப கஷ்டம் போல இருக்கே. அவள் மனம் தன் தந்தைதையும், தாயையும் நினைத்து பரிதவித்தது. என் பெத்தவங்களை மாதிரித்தான் நானும் செல்வாவை காதலிக்கிறேன். அவனை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன். எங்க மத்தியிலேயும், இது போன்ற ஈகோ சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருமா?