எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 44

“நேத்து உங்களுக்கு கால் பண்ணி திட்டுனான்னு சொன்னீங்களே.. அவதான்..!! சரியான எடுபட்ட சிறுக்கி.. இத்தனை நாளா என் புருஷனை மயக்கி வச்சிருந்தா.. நேத்து உங்கட்ட பேசுனப்புறம் என் புருஷனுக்கும் அவளுக்கும் பயங்கர சண்டை போல.. இப்போ அவரு எங்கிட்டயே திரும்ப வந்துட்டாரு.. ‘அவளை பத்தி நல்லா புரிஞ்சுக்கிட்டேன் துளசி.. இனிமே நீதான் எனக்கு எல்லாம்’னு.. நடுராத்திரில வீட்டுக்கு வந்து அழுவுறாரு..!! ஹ்ம்ம்… எப்படியோ.. உங்களோட ராங் காலால எனக்கு என் வாழ்க்கை திரும்ப கெடைச்சிடுச்சு.. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. உங்க உதவியை இந்த தங்கச்சி எப்போவும் மறக்க மாட்டேன்..!!”

அந்த துளசி ‘அண்ணா.. அண்ணா..’ என்று அன்பை பொழிந்துவிட்டு, இணைப்பை துண்டித்தாள். அவளுடன் பேசிமுடித்த பிறகுதான், அசோக்கிற்கு நேற்று இரவு தொலைந்து போன உற்சாகம் திரும்ப கிடைத்தது. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது என்று தோன்றியது. தவறான அழைப்பினால் சரியானதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். மீரா தவறான நம்பர் கொடுத்துவிட்டாளே என்ற எரிச்சல் கூட அவனிடமிருந்து அப்போது மறைந்து போனது.

அந்த சந்தோஷத்துடனே சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் கிளம்பினான். பைக்கில் வடபழனியை அடைந்து, சிக்னலுக்காக காத்திருந்த போது, அவனுடைய செல்போன் மீண்டும் பதறியது. மீண்டும் ஒரு எண்ணிலிருந்து கால்..!! இந்த முறை எந்த தயக்கமும் இல்லாமல், இயல்பாக அந்த காலை அட்டண்ட் செய்தான்..!! அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அடுத்த முனையில் ஒரு ஆள், ஆத்திரமாக சீறினான்.

“டேய்.. யார்டா நீ.. எந்த ஊரு உனக்கு..?? எங்க மீனாக்கா அந்த ஆளை எவ்ளோ கஷ்டப்பட்டு உஷார் பண்ணி வச்சிருந்தது தெரியுமா..?? ஒன்னு ஒன்னா அவன் சொத்துலாம் உருவலாம்னு ப்ளான் போட்ருந்தோம்.. இப்படி ஒரே கால்ல எல்லாத்தையும் காலி பண்ணிட்டியேடா நாதாரி..?? உன்னை நாங்க சும்மா விட மாட்டோம்டா..!!”

“ஹலோ.. நா..நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கங்க.. அ..அதுலாம் நான் வேணும்னு பண்ணல.. எல்லாம் ஒரு..”

“ஏய்.. மூட்றா.. பேசுன.. பேத்துடுவேன்..!! நான் சொல்றதை மட்டும் தெளிவா கேட்டுக்கோ.. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எங்களுக்கு தெரியாது.. நாளைக்கு நைட்டு நாங்க சொல்ற எடத்துக்கு பத்து லட்ச ரூவா பணத்தோட வர்ற.. என்ன.. புரியுதா..??”

“என்னது..?? பத்து லட்சமா..??”

“ஆமாம்.. நீ பண்ணுன காரியத்துக்கு ஃபைனு..!!” அந்த ஆள் கூலாக சொல்ல, அசோக் டென்ஷன் ஆனான்.

“யோவ்.. என்ன வெளையாடுறியா..?? பணம் வேணுமாம்ல..?? பணம்லாம் ஒன்னும் தர முடியாது.. வேணுன்னா ஒரு ஸாரி சொல்லிக்குறேன்..!! ஸாரி..!!!! ஓகேவா..??” இப்போது அந்த ஆள் டென்ஷன் ஆனான்.

“என்னது.. ஸாரியா..?? என்னடா.. கொழுப்பா உனக்கு..?? என்ன கேட்டுட்டு இருக்குறோம்.. என்ன சொல்லிட்டு இருக்குற நீ.. பத்து லட்சம் எங்க இருக்கு.. உன் பிஸ்கோத்து ஸாரி எங்க இருக்கு..?? பணம் வரலன்னா உன் உசுரு உனக்கு இல்ல மவனே.. ஞாபகம் வச்சுக்கோ.. நீ எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு உன்னை போட்டுத்தள்ளாம விடமாட்டோம்..!!”

“யோவ்.. இந்த மெரட்டலுக்குலாம் நான் பயப்பட மாட்டேன்.. பணம்லாம் தர முடியாது.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ.. போ..!!”

அசோக் கெத்தாக சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தான். திரும்பவும் அதே நம்பரில் இருந்து கால் வர, கண்டுகொள்ளாமல் செல்போனை பாக்கெட்டில் போட்டான். ‘நன்னாரிப்பயலுக.. ஒத்தை ராங் கால் பண்ணதுக்கு பத்து லட்சம் ஃபைனாம்.. ரொம்பத்தான் ஆசையெடுத்து அலையுரானுக..!!’ என்று மனதுக்குள்ளேயே அந்த ஆளை திட்டியவாறு, எரிச்சலுடன் சிக்னலை ஏறிட்டான். இன்னும் சிவப்புதான் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!!

1 Comment

  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Comments are closed.