எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 41

அன்று இரவு உணவை, வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில்தான் உண்டார்கள். ஆறு பேரும் டைனிங் டேபிளில் அமர்ந்து, ஆனந்தமாக பேசி சிரித்தவாறே சாப்பிட்டுக்கொண்டிருக்க, அசோக் தன் மனதில் இருந்த அழுத்தத்தை, அடக்கிக் கொள்ள முடியாமல் சொல்லிவிட்டான்.

“நீ..நீங்கல்லாம்.. தேவை இல்லாம.. ரொம்ப ஓவரா சந்தோஷப்படுற மாதிரி எனக்கு தோணுது.. கொஞ்சம் கொறைச்சுக்கங்க ப்ளீஸ்..!!”

அவன் அவ்வாறு சொன்னதும், எல்லோருமே சட்டென முகம் மாறினர். குழப்ப ரேகைகள் ஓடுகிற முகத்துடன் அனைவரும் அசோக்கை ஏறிட்டனர்.

“ஏய்.. என்னடா இப்படி சொல்லிட்ட..?? நீ ஒரு பொண்ணை லவ் பண்ணிருக்க.. அதுமட்டும் இல்லாம அவளையும் ஐ லவ் யூ சொல்ல வச்சிருக்க..?? எவ்வளவு பெரிய விஷயம் இது..?? இதவிட எங்களுக்கு வேற என்னடா பெரிய சந்தோஷம் இருக்க முடியும்..?? இந்த அளவுக்கு கூட நாங்க சந்தோஷப்படலன்னா எப்படி.??” மணிபாரதி மகனிடம் கேட்டார்.

“உங்களுக்கு சந்தோஷமா இருக்கு.. எ..எனக்கு என்னவோ கொஞ்சம் உறுத்தலா இருக்கு..!!”

“ப்ச்.. நீயும் அவளை லவ் பண்ற.. அவளும் உன்னை லவ் பண்றேன்னு வாய் விட்டு சொல்லிட்டா.. அப்புறம் என்ன உறுத்தல் உனக்கு..??” சங்கீதா அண்ணனிடம் குழப்பமாய் கேட்டாள்.

“ஒருவேளை.. அந்தப் பொண்ணோட குடும்பத்துல இருக்குறவங்க.. இந்த காதலை ஒத்துக்குவாங்களோ இல்லையோன்னு பயப்படுறானோ என்னவோ..?? ஏண்டா அப்படியா..??”

பாட்டி தன் மனதில் இருந்த சந்தேகத்தை பேரனிடம் கேட்டாள். அவள் அவ்வாறு கேட்டதும், இப்போது தாத்தா பலத்த சிரிப்புடன் ஆரம்பித்தார்.

“ஹாஹாஹாஹா..!! ஏன் அசோக்கு.. அதை நெனைச்சா மனசை போட்டு கொழப்பிக்கிற..?? நம்ம கிஷோர் வீட்டுல கூடத்தான்.. ஆரம்பத்துல நம்ம சங்கீதாவை ஏத்துக்கல.. ‘காதலாவது கத்திரிக்காயாவது’ன்னு அவரு அம்மா கெடந்து குதிச்சாங்க..!! அப்புறம்.. நம்ம குடும்பத்துல எல்லாரும் அவங்கட்ட பக்குவமா பேசி.. நேரா போய் அவங்களை பாத்து எடுத்து சொல்லி.. எப்படி எப்படி எல்லாமோ போராடி.. கொஞ்சம் கொஞ்சமா அவங்க மனசை கரைக்கலையா..?? இப்போ அந்த அம்மாவே ‘உங்க குடும்பத்தோட சம்பந்தம் வச்சுக்க நாங்க குடுத்து வச்சிருக்கனும்’னு வாயார சந்தோஷமா சொல்றாங்க..!! உன் விஷயத்தை மட்டும் சும்மா விட்ருவோமா..?? உனக்கு நாங்கல்லாம் இருக்கோம்டா.. நாம குடும்பத்தோட போய் நாலு வார்த்தை பேசினாலே.. யாருக்குமே நம்மள புடிச்சு போகும்..!! இதுக்குலாமா கவலைப்படுறது..??”

“ஐயோ நான் அதுக்குலாம் கவலைப்படல தாத்தா..!!” அசோக் சற்றே எரிச்சலாக சொன்னான்.

“அப்புறம் என்னடா..??” அத்தனை நேரம் அமைதியாக இருந்த பாரதி இப்போது அசோக்கின் முகத்தை கூர்மையாக பார்த்தவாறு கேட்டாள்.

“எனக்கும் அந்தப் பொண்ணை பத்தி எதுவும் தெரியாது.. அவளுக்கும் என்னைப் பத்தி எதுவும் தெரியாது.. ஆனா ரெண்டு பேரும் ஐ லவ் யூ மட்டும் சொல்லிக்கிட்டோம்..!! நானும் அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல என் காதலை சொல்வேன்னு நெனைக்கல.. அவளும் திடீர்னு அப்படி ஐ லவ் யூ சொல்வான்னு எதிர்பார்க்கல.. அ..அதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு..!! ஏதோ.. எக்ஸாம்க்கு போய்ட்டு எம்ப்ட்டி பேப்பர் நீட்டிட்டு வந்தவனுக்கு.. சென்டம்னு ரிசல்ட் வந்த மாதிரி இருக்கு..!!” அசோக் அந்தமாதிரி குழப்பம் அப்பிய முகத்துடன் சொல்ல, அவனையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த பாட்டி, இப்போது ஒரு பெருமூச்சுடன் ஆரம்பித்தாள்.

1 Comment

  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Comments are closed.