எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 51

“உங்க தாத்தா வீட்டுல.. காம்பவுண்டு சுவர் நல்லா ஏழடி உசரத்துக்கு இருக்கும்.. சுவர் மேல கொஞ்சம் கூட இடைவெளி விடாம.. கண்ணாடி பீங்கான் வச்சு பூசிருப்பாங்க.. அந்த சுவரை ஏறி குதிக்கனும்னா எவ்வளவு ரத்தத்தை கீழ சிந்தனும் தெரியுமா..?? கை கால்லாம் கிழிஞ்சுபோய்.. ரத்தக்களரியாதாண்டா உன் அப்பாகிட்ட வந்து சேர்ந்தேன்..!! ஏன்..?? தைரியம்..!!!”

“ம்ம்..!!”

“அன்னைக்கு எனக்கு அந்த தைரியம் இருந்ததாலதான்.. இன்னைக்கு எனக்கு கைல வச்சு தாங்குற புருஷன் கெடைச்சிருக்காரு.. கண்ணுமணிக மாதிரி ரெண்டு புள்ளைங்க கெடைச்சிருக்கீங்க.. கவலைன்னா என்னன்னே தெரியாத மாதிரி ஒரு குடும்பமும், வாழ்க்கையும் கெடைச்சிருக்கு..!!”

பாரதி மிக உணர்ச்சிவசப்பட்டுப்போய் சொல்லிக்கொண்டிருந்தாள். அசோக்கோ எந்த உணர்ச்சியும் காட்டாமல், அந்தப் பெண்ணின் நினைவில் மூழ்கியிருந்தான். கொஞ்ச நேரம் இடைவெளிவிட்ட பாரதி மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் ஆரம்பித்தாள்.

“ம்ஹ்ஹ்ஹ்ம்…!! உங்க தாத்தா.. பச்சைக்கலர்ல பட்டையா ஒரு பெல்ட் இடுப்புல கட்டிருப்பாரு.. ட்ரன்க் பெட்டிக்குள்ள நான் ஒளிச்சு வச்சுருந்த போஸ்ட் கார்ட்லாம் அவர் கைல கெடைச்ச அன்னைக்கு என்ன செஞ்சாரு தெரியுமா.. அந்த பெல்ட்டை கழட்டி..”

“ஐயையையெ… போதும் மம்மி.. மொக்கை தாங்க முடியல..!!” அசோக் இப்போது பொறுமையில்லாமல் சொன்னான். பாரதி சலிப்பானாள்.

“ம்க்கும்… ஏண்டா சொல்ல மாட்ட.. நான் பட்ட வேதனைலாம் உனக்கு மொக்கையாத்தான் தெரியும்..!!”

“ப்ச்… உன் கதையை விடு மம்மி.. அந்தப் பொண்ணை பத்தி சொல்லு..!!”

“இன்னும் அவளை பத்தி என்ன சொல்லனும்..?? நான் சொல்லவேண்டியதுலாம் சொல்லிட்டேன்.. இனிமே நீதான் நல்லா யோசிச்சு முடிவெடுக்கணும்..!! நான் போய் சட்னியை அரைக்கிறேன்.. நீ சட்டுன்னு கெளம்பி வா..!!”

சொன்ன பாரதி அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தாள். வாசலை அடைந்தவள் ஒருகணம் தயங்கி நின்றாள். பிறகு அப்படியே திரும்பி மகனை பார்த்து, புன்னகையுடன் சொன்னாள்.

“எனக்கென்னவோ.. அந்தப் பொண்ணு மருமகளா வர்றதுக்கு.. இந்த வீடு குடுத்து வச்சிருக்கணும்னு தோணுது அசோக்..!! உன்னால முடிஞ்சா.. அந்த பாக்கியத்தை இந்த குடும்பத்துக்கு குடு..!!”

அம்மா அந்தமாதிரி தெள்ளத்தெளிவாக சொல்ல, அசோக்கும் இப்போது மனக்கலக்கம் நீங்கியவனாய் அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தான். அந்தப் பெண்ணை மீண்டும் சந்திக்க நேர்ந்தால், அவளுடன் பேசுகிற வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அவளை மீண்டும் சந்திக்கிற வாய்ப்பு கிட்டுமா என்று ஒரு கேள்வியும் கூடவே மனதில் எழுந்தது. எனக்கென விதிக்கப்பட்டவளாய் இருந்தால், நிச்சயம் என் எதிரே தோன்றுவாள் என்று அந்த மனதை சமாதானம் செய்தான். ‘அவளை அனுப்பி வை..!!’ என்று ஆண்டவனிடம் ஒருமுறை வேண்டிக் கொண்டான்.

1 Comment

  1. Varakkal thangal

Comments are closed.