எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 4 51

சங்கீதா திமிராக சொன்னாள். அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேச விருப்பம் இல்லாதவனாய், அசோக் அந்த இடத்தை விட்டு நகர முயன்றான். சங்கீதா அவனுக்கு குறுக்காக ஓடி வந்து வழி மறித்தாள்.

“ஏய்ஏய்ஏய்.. இருடா.. எங்க கெளம்பிட்ட.. உங்கிட்ட நான் என்னன்னவோ கேக்கனும்னு நெனச்சேன்..!!”

“என்ன..??”

“அந்தப்பொண்ணைப் பத்தி கொஞ்சம் சொல்லேன்..?? அவ பாக்குறதுக்கு எப்படி இருந்தா..?? ஹைட்டா குள்ளமா.. கலரா கருப்பா..??”

சங்கீதா அவ்வாறு ஆர்வமாக கேட்கவும், அசோக்கிற்கு பட்டென அவனுடைய மனது லேசாகிப்போனது மாதிரி ஒரு உணர்வு..!! இதயத்தை அந்தப் பெண்ணுடைய ஞாபகம் வந்து ஈரமாய் நனைத்தது..!! அவனையும் அறியாமல்.. உதட்டில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது..!! தலையை சற்றே சாய்த்து.. ஏதோ அந்தரத்தில் பார்வையை நிறுத்தி.. குரலில் ஒரு மென்மையை கூட்டிக்கொண்டு.. ரசனையுடன் சொல்ல ஆரம்பித்தான்..

“அ..அவ.. அவ எப்படின்னா.. அவளை பத்தி சொல்லனும்னா.. அவ ஒரு..” அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சங்கீதா அவனை இடைமறித்து,

“டேய்.. இரு இரு..!! ரொம்ப கஷ்டப்படாத.. அவளை பத்தி நமக்கெதுக்கு இப்போ..?? விடு.. நீயே அவளை ஒழுங்கா பாத்தியோ இல்லையோ..?? நீநீநீ…” என்று இழுத்தவள், அப்புறம் பட்டென

“அந்த செருப்பை பத்தி சொல்லு.. எப்படி இருந்துச்சு அந்த செருப்பு..?? ப்ளாக்கா.. ப்ரவுனா..?? பேட்டாவா.. பேரகனா..??”

என முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்கவும், அசோக் இப்போது உலகமகா கடுப்புக்கு உள்ளானான். தங்கையை ஏறிட்டு வெறுப்பாக முறைத்தான். அவளோ சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, அப்படியும் முடியாமல் கொஞ்ச சிரிப்பை உதடுகள் வழியே சிந்திக்கொண்டு, அண்ணனையே குறும்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக் எதுவும் பேசவில்லை. தன் வலது உள்ளங்கையை அகலமாக விரித்து, அதையே பார்த்தான்.

“என்னடா.. நான் கேட்டுட்டு இருக்கேன்.. நீ கையையே பாத்துட்டு இருக்குற..??” சங்கீதா சீண்டினாள்.

“இங்க பாரு சங்கு.. இப்படியே ஒரு அறை வுட்டேன்னு வச்சுக்கோ.. நாலு நாளைக்கு எந்திரிக்க மாட்ட..!! காது பஞ்சர் ஆயிடும்.. அப்புறம் நீ பாடுற பாட்டை உன்னாலேயே கேட்க முடியாது..!!”

அசோக் அந்த மாதிரி டென்ஷன் ஆனது சங்கீதாவுக்கு ஒரு குதுகலத்தையே அளித்தது. வாயைப் பொத்திக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள். நாக்கை வெளியே துருத்தி பழிப்பு காட்டினாள். அசோக்கால் அவளை எதுவும் செய்ய முடியவில்லை. அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.

என்ன செய்வது..?? அசோக்கிற்கு அப்படிப்பட்ட ஒரு நாளாக அது அமைந்துபோனது. எப்போதும் டிவியில் விளம்பரங்கள் ஓடுகையில் யாரையும் சேனல் மாற்ற விடமாட்டான். அடுத்தவர்கள் வெறுப்பாக இவனை முறைக்க, இவன் விருப்பமாக விளம்பரங்கள் பார்த்து ரசிப்பான். ஆனால் அன்று.. அந்த டிவியில் விளம்பரத்தை பார்த்ததும் எரிச்சலின் எல்லைக்கே சென்றான்.

1 Comment

  1. Varakkal thangal

Comments are closed.