எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 192

அசோக் பேசிய பேச்சில் இருந்த உண்மை பரந்தாமனின் முகத்தை அறைய, அவர் பதில் பேச நாவெழாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். ஏதோ ஜென்ம விரோதியை பார்ப்பதுபோல, அவனையே முறைத்துக் கொண்டிருந்தார். அசோக் உதட்டில் இருந்த புன்னகை மாறாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். பரந்தாமன் அதற்குமேலும் அந்த சூழ்நிலையை விரும்பாதவராய் வெறுப்புடன் சொன்னார். இல்லை.. கத்தினார்..!!

“டேய்.. வெளில போடா..!!”

“போறேன் ஸார்.. இதுக்கப்புறமும் உங்ககிட்ட பேசிட்டு இருக்க எனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு..?? வந்ததும் உங்க டைம் எனக்கு செலவு பண்ணினதுக்காக தேங்க்ஸ் சொன்னேன்.. இப்போ.. உங்ககிட்ட பேசி என் டயத்தை வேஸ்ட் பண்ணினதை நெனச்சு.. ரொம்ப ஃபீல் பண்றேன்..!! வர்ட்டா..!!”

ஸ்டைலாக சொன்ன அசோக், அவர் முன்பாக இருந்த டிவிடி கேசை எடுத்துக்கொண்டு, கிளம்பினான். அறையை விட்டு வெளியேறினான். அவன் கண்ணில் இருந்து மறையும் வரை பரந்தாமன் அவனது முதுகையே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த பில்டிங்கை விட்டு வெளியே வந்த அசோக், உடனடியாய் செய்த காரியம்.. தன் செல்போன் எடுத்து கிஷோருக்கு கால் செய்ததுதான்..!! அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டதுமே, அசோக் அதற்காகத்தான் காத்திருந்தவன் போல, கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தான்..!!

“பன்னாடை.. பரதேசி.. தெருப்பொறுக்கி.. பிச்சைக்கார நாயே..!!”

“டேய்.. டேய்.. என்னடா ஆச்சு.. ஏண்டா திட்டுற..??”

“வெண்ணை.. புண்ணாக்கு.. மொள்ளமாரி.. தெள்ளவாரி..!!”

என்னவென்று புரியாமல் அந்தப்பக்கம் கிஷோர் கதறிக் கொண்டிருக்க. அதை பொருட்படுத்தாமல் இந்தப்பக்கம் அசோக், கெட்ட வார்த்தைகளை சரமாரியாக சிதறிக் கொண்டிருந்தான்.

Creative Ad Labs – அசோக்கும் அவன் நண்பர்களும் சேர்ந்து ஆரம்பித்த அட்வர்டைசிங் கம்பனியின் பெயர் அதுதான்..!! ஆபீஸுக்கு வெளியே ‘இது ஒரு விளம்பர கம்பனி’ என்று விளம்பரம் செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் பலகையே.. வண்ணம் இழந்து.. பிளைவுட் விரிசல் விட்டுப்போய்.. சற்றே சிதிலமடைந்து.. சாய்வாக தொங்கிக் கொண்டிருப்பதிலேயே.. அந்த கம்பனியின் லாபகரம் பற்றிய உண்மை நிலவரம் புரியும்..!!

அலுவலகத்தின் மொத்த பரப்பளவே ஆயிரம் சதுர அடிதான்..!! மொத்தம் மூன்றே அறைகள்..!! ஒரு பெரிய சைஸ் அறையில்.. சுவற்றில் அறையப்பட்ட இரண்டு மெகா ஸ்க்ரீன்கள்.. அதன் முன்புறமாக அமைந்திருக்கும் மேஜையில்.. அந்த ஸ்க்ரீன்களுடன் இணைக்கப்பட்ட வீடியோ எடிட்டிங் சிஸ்டம்.. ஆடியோ மிக்சிங், எடிட்டிங் கருவிகள்.. பக்கவாட்டில் இரண்டு ராட்சத ஸ்பீக்கர்கள்.. மேஜை முன்பாக நான்கைந்து நாற்காலிகள்.. அலுவலகத்தில் முக்கியமான அறையே அதுதான்..!! அதில்லாமல் அசோக்கும் அவன் நண்பர்களும் அமர்ந்து பிசினஸ் (?????) பேசிக்கொள்ள வசதியாக ஒரு அறை..!! அதை ஒட்டி.. கேமரா, கேபிள்கள், லைட்ஸ் போன்ற உபகரணங்களை அடைத்து வைத்துக்கொள்ள ஒரு அறை.. அவ்வளவே..!! கொஞ்சம் உற்றுக் கவனித்தால், சுவற்றின் ஓரமாய் நசுக்கப்பட்ட சிகரெட் துண்டுகளை காண நேரிடும்.. குப்பைக்கூடையை கிளறினால், காலியான ஓல்ட் மங் பாட்டிலையும், கடலை வறுவல் கவரையும், கண்டுபிடிக்க இயலும்..!!

அசோக்கையும் கிஷோரையும் தவிர, பிசினஸில் பணம் போட்ட இன்னும் இரண்டு நண்பர்கள்.. சாலமனும், வேணுவும்..!! நான்கு பேருக்கும் சென்னைதான் சொந்த ஊர். கல்லூரி படிக்கையிலேதான் நட்பாகி நெருக்கமானார்கள். சாலமனும், வேணுவும் விஷுவல் எஃபக்ட்ஸ், ஆடியோ மிக்சிங் மாதிரியான டெக்னிகல் வேலையில் பிஸ்து காட்டுவார்கள். கிஷோருக்கு ஒளிப்பதிவில் ஆர்வம். அசோக்குக்கு கான்சப்ட் டெவலப் செய்வது மாதிரியான கிரியேட்டிவ் வேலையும், ப்ரொடக்ஷன் கண்ட்ரோல் மாதிரியான மேனேஜ்மன்ட் வேலையும்..!!

கிஷோர் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவன்.. பிசினஸ் தவிர.. ஒரு முன்னணி திரைப்பட ஒளிப்பாதிவாளரிடம் அசிஸ்டண்டாக பகுதி நேர பணி புரிகிறான்.. சினி இண்டஸ்ட்ரியில் சில காண்டாக்டுகள் அவனுக்கு உண்டு.. அந்த மாதிரி ஒரு காண்டாக்ட்தான் அந்த பரந்தாமன்..!! இவர்கள் நான்கு பேரை தவிர.. இவர்கள் கம்பனி இருக்கும் லட்சணத்தில், இவர்களுக்கு உதவிக்கென இரண்டு பேரை சம்பளம் கொடுத்து வேலைக்கு வேறு வைத்திருக்கிறார்கள்..!!

அசோக்கின் நண்பர்கள் மூன்று பேரும், வெவ்வேறு வித குடும்ப சூழல், வெவ்வேறு வித குணநலன்கள் கொண்டவர்கள்.. இருந்தாலும் அவர்கள் மூன்று பேருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை.. அசோக்கை தனியாக பிரித்துக்காட்டும் வேற்றுமை.. காதல்..!! அசோக்கை தவிர மற்ற மூவருமே காதலில் விழுந்து.. உருண்டு.. புரண்டு கொண்டிருப்பவர்கள்..!!

பரந்தாமனிடம் பிசினஸ் பற்றி அசோக் கூறுகையில், நிறைய விஷயங்கள் மிக நாசுக்காக, நகாசுப்பூச்சொடு சொன்னான். உண்மை நிலை சற்று பரிதாபகரமானது. ‘என்னை பத்தி சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்லை..’ என்று சொன்னான் அல்லவா..?? அவர்கள் பெரிதாக சாதிப்பதற்கு வாய்ப்பு எதையும் இந்த விளம்பர உலகம் வழங்கவில்லை என்பதுதான் நிஜம்..!! ‘லக்ஸ்.. லிரில்.. கேட்பரிஸ்.. சன்ரைஸ்.. கோல்கேட்.. பெப்சொடன்ட்..’ என்று பெரிய பெரிய கனவுகளுடன்தான் கம்பனியை ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது எல்லாம் ‘கோபுரம் பூசு மஞ்சள்தூள்.. அரசன் சோப்.. சங்கு மார்க் லுங்கிகள்.. சுடர்மணி பனியன் ஜட்டிகள்..’தான்..!!

Updated: June 3, 2021 — 3:03 am