எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 37

“இல்ல ஸார்.. எனக்கு லவ் ஸ்டோரிஸ்ல இன்ட்ரஸ்ட் இல்ல.. கண்டிப்பா நான் லவ் ஸ்டோரிலாம் எழுத மாட்டேன்..!!”

“ஹாஹா.. உங்களை மாதிரி ஒரு யங்க்ஸ்டர்.. காதல் பிடிக்காதுன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு தம்பி..!!”

“காதல் பிடிக்காதுன்னு சொல்லல ஸார்.. காதல் கதைகள்தான் பிடிக்காதுன்னு சொன்னேன்..!!”

“ரெண்டும் ஒண்ணுதான் தம்பி..!! நீங்க யாரையாவது காதலிச்சிருந்தா.. காதல்க்கதைகள் மேலயும் உங்களுக்கு ஆர்வம் வந்திருக்கும்.. நீங்க பேசுறதை வச்சே எனக்கு புரிஞ்சு போச்சு.. உங்களுக்கு எதுவும் மாட்டலைன்னு..!! நான் நெனைச்சது சரியா..??”

நக்கலாக சொன்ன பரந்தாமன் தனது தலையை சற்றே தாழ்த்தி அசோக்கை கூர்மையாக பார்த்தார். அசோக்கிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக, அவரே வெற்றிக்கனைப்புடன் தொடர்ந்தார்.

“ஹாஹஹா..!! போங்க தம்பி.. பேய், பிசாசுன்னு ஏதாவது கதை எழுதுறதை விட்டுட்டு.. போய் யாரையாவது லவ் பண்ணுங்க.. போங்க..!!”

பரந்தாமன் சொல்லிவிட்டு சிரிக்க, அசோக் அவரையே சில வினாடிகள் முறைப்பாக பார்த்தான். அவர் பேச்சில் இருந்த கிண்டல் அவனுக்கு எக்கச்சக்கமாய் எரிச்சலை உண்டுபண்ணியிருந்தது. அவருடன் அதற்கு மேலும் விவாதம் செய்ய விரும்பாதவனாய் கேட்டான்.

“அப்போ.. ஃபைனலா என்னதான் ஸார் சொல்றீங்க ..??”

“இன்னுமா உங்களுக்கு புரியல..?? சரி.. தெளிவாவே சொல்லிர்றேன்.. நான் உங்களை மாதிரி இல்ல தம்பி.. எனக்கு காதல் பிடிக்கும்.. காதல்கதைகளையும் பிடிக்கும்.. காதலை மையமா வச்சு உருவாக்குற கதைகளைத்தான் நான் ப்ரொட்யூஸ் பண்ணுவேன்.. என்னோட கொள்கைல இருந்து நான் எப்போதும் மாறுறதா இல்ல..!! நல்ல காதல்க்கதை இருந்தா மறுபடி என்னை வந்து பாருங்க.. இல்லனா வராதீங்க.. இப்போ இடத்தை காலி பண்ணுங்க…!!”

சொல்லி முடித்து அமைதியான பரந்தாமன், அசோக்கின் முகத்தையே குறுகுறுவென பார்த்தார். அவருடைய உதட்டில் ஒருவித விஷமப் புன்னகை வழிந்தது. அசோக் என்ன செய்வது என்று அறியாதவனாய், ஏமாற்றமும் எரிச்சலும் மிகுந்த மனதுடன், அசையாமல் அமர்ந்திருந்தான். அப்போதுதான் அவன் பார்வை, எதிரே இருந்தவரின் முதுகுக்கு பின்னால் இருந்த அந்த ஷோ கேஸில் எதேச்சையாக விழுந்தது. அதன் மேல் வைக்கப்பட்டிருந்த அந்த பெரிய சைஸ் புகைப்படத்தின் மீதும்..!! உடனே அவனுடைய எரிச்சலடைந்திருந்த மூளை சுறுசுறுப்பாய் எதையோ யோசிக்க ஆரம்பித்தது..!! ஒரு சில வினாடிகளிலேயே ஒரு முடிவுக்கு வந்தான். உதட்டுக்கு அவசரமாய் ஒரு புன்னகையை கொடுத்தவாறே அவரை ஏறிட்டான். குரலில் ஒருவித குறுகுறுப்புடன் கேட்டான்.

“அப்போ.. உங்களுக்கு காதல்க்கதைகளையும் பிடிக்கும், காதலையும் பிடிக்கும்.. அப்படித்தான ஸார்..??”

“ஆமாம்.. இவ்ளோ நேரம் அதைத்தான சொல்லிட்டு இருந்தேன்..??”

“பேச்சு மாற மாட்டீங்களே..??” அசோக் அவ்வாறு குதர்க்கமாய் கேட்கவும்,

“இ..இதுல பேச்சு மாற என்ன இருக்கு..??” அவர் இப்போது குழப்பமாய் இவனை பார்த்தார்.

“ஸாரி ஸார்.. என்னை மன்னிச்சுடுங்க..!!”

“மன்னிக்கனுமா.?? எதுக்கு..??”

“இவ்வளவு நேரம் உங்ககிட்ட டைரக்டர் சான்ஸ் கேட்டு வந்தவன் மாதிரி நடிச்சதுக்கு..!!”

“ந..நடிச்சியா..?? எ..என்ன சொல்ற நீ..??” அவர் பதட்டத்தில் பட்டென ஒருமைக்கு தாவினார்.

“ஆமாம் ஸார்.. உங்களோட மனநிலைமையை பத்தி தெரிஞ்சுக்கத்தான் இவ்ளோ நேரம் நடிச்சுட்டு இருந்தேன்.. ஆக்சுவலா கிஷோர்ட்ட சொல்லி உங்க அப்பாயின்ட்மன்ட் வாங்கினது.. உங்ககிட்ட கதை சொல்றதுக்காக இல்ல..!!”

“அ..அப்புறம்..??” அவர் இப்போது குழப்பத்தின் உச்சிக்கே சென்றிருந்தார்.

“நா..நானும்..”

“நீயும்..??”

“உ..உங்க மகளும்..”

“என் மகளும்..????” பரந்தாமனின் முகம் பதட்டத்தில் துடித்தது.

“நானும் உங்க மகளும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம் ஸார்.. ரெண்டு பேரும், ரெண்டு வருஷமா உயிருக்கு உயிரா காதலிக்கிறோம்..!! நீங்கதான்.. ஸ்டேட்டஸ்லாம் பாக்காம.. எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு.. எங்க காதலை..”

அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பரந்தாமன் உச்சபட்ச டென்ஷனை அடைந்திருந்தார். அமர்ந்திருந்த சேரில் இருந்து விருட்டென எழுந்தார். ‘டேய்ய்ய்..!!!’ என்று கத்தியவாறு, அசோக்கின் சட்டையை எட்டி கொத்தாக பிடித்து இழுத்தார். அவருடைய முகம் இப்போது திடீர் ஆத்திரத்தை பூசிக்கொண்டு கோரமாக மாறியிருந்தது. காண சகிக்கவில்லை..!! ‘பேயை நேர்ல பாத்திருக்கீங்களா நீங்க..??’ என்று சற்றுமுன் அவர் கேட்ட கேள்விக்கு, இப்போது பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது அசோக்கிற்கு..!! அவன் சொல்வதற்கு முன்பாகவே, பரந்தாமன் ஆத்திரத்தில் படபடவென பொரிந்தார்.

Updated: June 3, 2021 — 3:03 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *