எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 1 37

“அதான் ஏன் சொன்னேன்னு கேக்குறேன்..??”

“அந்த ஆள் முகமூடியை கிழிக்கிறதுக்குத்தான்..!! போனதுல இருந்தே லவ்வு லவ்வுன்னு பொலம்பிட்டு இருந்தான்.. ‘சரிய்யா.. நான் உன் பொண்ணை லவ் பண்றேன்.. கட்டிக்குடு..’ன்னு கேட்டா.. என் ஸ்டோரில வர்ற காட்டேரியை விட கர்ணகொடூரமா மாறிட்டான்..!! ஹாஹா.. இப்போ நான் அவனுக்கு வச்சுட்டு வந்திருக்குறேன் பாரு ஊசி.. அது இன்னும் நாலஞ்சு நாளைக்கு அவனை குத்தி குடைஞ்சுட்டு இருக்கும்.. அது போதும் எனக்கு..!!”

அசோக் சொல்லிவிட்டு பெருமையாக புன்னகைத்தான். சாலமனும், வேணுவும் இன்னும் குழப்பம் விலகாமலே காட்சியளித்தனர். கிஷோரோ, அசோக் பதிலுக்கு பதில் பேசியதில், களைத்தும் சலித்தும் போயிருந்தான். அந்த சலிப்பு இப்போது குரலிலும் கலந்து போயிருக்க,

“ஏண்டா இப்படிலாம் பண்ற..??” என்று பரிதாபமாக கேட்டான்.

“நீ ஏண்டா இப்படிலாம் ஃபீல் பண்ற..??” அசோக் அதே டோனில் திருப்பி கேட்டான்.

“பின்ன என்ன..?? அன்னைக்கும் இப்படித்தான்.. ‘பாலாஜி அட்வர்டைசிங்’ மோகன்ராஜோட சண்டை போட்டுட்டு வந்த..??”

“அது வேற மேட்டர்.. அந்த ஆள் லூசுத்தனமா ஒரு ஐடியா சொன்னான்.. ‘ஸார்.. இது லூசுத்தனமா இருக்கு ஸார்..’ அப்டினு நான் ரொம்ப மரியாதையாத்தான் சொன்னேன்.. அதுக்கே அந்த ஆளுக்கு கோவம் வந்துடுச்சு..!!”

“ம்ம்.. அப்படி என்ன லூசுத்தனமா சொன்னான்..??”

“காஞ்சனா ஜுவல்லர்ஸ் வெளம்பரத்துக்கு ஒரு கோட் சொன்னான் மச்சி.. மஹா கேவலமான கோட்..!!”

“என்ன அது..??”

“‘காஞ்சனா ஜ்வல்ஸ் வாங்குங்கள்.. காதலின் ஆழத்தை உங்கள் காதலிக்கு உணர்த்துங்கள்..’ அப்டின்னு..!!”

“நல்லாத்தான இருக்கு..?? இதுல என்ன லூசுத்தனம்..??”

“ஏண்டா.. இவனுக நகையை வாங்கிக் குடுத்துத்தான் காதலோட ஆழத்தை காதலிக்கு உணர்த்தனுமா..?? நாட்ல நகை வாங்க வக்கு இல்லாதவன்லாம் லவ்வே பண்ணக் கூடாதா..?? லவ் பண்றவனுகளை எல்லாம் கேலி பண்ற மாதிரி இல்ல.. அந்த கோட்..?? அதைத்தான் அந்த ஆள்ட்ட சொன்னேன்..!!”

“ம்ம்.. உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலைலாம்..?? அவன் சொல்ற மாதிரி ஆட் ரெடி பண்ணி தர்றது மட்டுந்தான்டா நம்ம வேலை..!!”

“ப்ச்.. என்னால அப்படி இருக்க முடியல..!!”

“முடியாது.. உன்னால முடியாது.. நீ பாட்டுக்கு அந்த ஆள் கூட சண்டை போட்டுட்டு வந்துட்ட.. அப்புறம் நான் அவன் கைல காலுல விழுந்து, காண்ட்ராக்ட் கேன்சல் ஆகாம பாத்துக்கிட்டேன்..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. முடியலடா சாமி.. உன்னை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே எனக்கு ஒன்னும் புரியல..!! ஹ்ம்ம்ம்ம்… போன வாரம் ஒரு தெலுகு படம் பாத்தேன்.. அதுல.. ஹீரோ ரொம்ப முரட்டுப்பயலா இருப்பான்.. அவனை பாத்து.. காமடியன் ஒரு டயலாக் சொல்வாரு..!! அந்த டயலாக்தான் எனக்கும் உன்னை பாத்து சொல்ல தோணுது..!!”

“ஓ.. அப்படி என்ன டயலாக்..??”

“ம்ம்.. ‘இவன் ரொம்ப வயலண்டா இருக்கான்டா.. இவனுக்கு கொஞ்சம் பூ, பொண்ணுலாம் கண்ணுல காட்டுங்கடா..’ன்னு சொல்வாரு..!!”

“ஹாஹா… பூ, பொண்ணுலாம் பாத்துட்டா..??”

“நீ இப்படிலாம் பிரச்னை பண்ண மாட்டேன்னு தோணுது..!! நீ பெருசா மக்கர் பண்றதே இந்த லவ்ன்ற மேட்டர்லதான்.. லவ்வை பத்தி நீ வச்சிருக்குற தப்பான அபிப்ராயத்துலதான்.. நீ ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சேன்னா.. எல்லாம் சரியாயிடும்னு எனக்கு தோணுது.. நம்ம பிசினசும் நல்லபடியா உருப்படும்னு தோணுது..!!”

“போடா.. இந்த பரந்தாமன், மோகன்ராஜ்-க்காகலாம் என்னை லவ் பண்ண சொல்றியா..??”

“சரி.. அவனுகளுக்காக பண்ண வேணாம்.. எங்களுக்காக பண்ணு..!!”

“உங்களுக்காகவா.??”

“ம்ம்.. உன்னோட ஃப்ரண்ட்ஸ் நாங்க எல்லாம் லவ் பண்றோம்.. எங்களை பாத்து உனக்கு லவ் மேல ஆசை வரல..??” கிஷோர் அந்த மாதிரி கேட்க,

“ஏய்.. நீங்களாடா..?? உங்களை பாத்தப்புறந்தான்.. எனக்கு லவ் மேல இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் காணாமப் போயிடுச்சு..!!” அசோக் கிண்டலாக சொன்னான்.

“ஏண்டா இப்படி சொல்ற..??”

“பின்ன..?? ஒருத்தன்.. லவ் பண்றவ.. பாடுறேன்ற பேர்ல நரி மாதிரி ‘ஊஊஊ’ன்னு ஊளையிடுறதைலாம்.. லவ்லி வாய்ஸ்னு மனசாட்சியே இல்லாம பொய் சொல்றவன்..!!” – அசோக் அவ்வாறு சொன்னதும் கிஷோர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான்.

“ஒருத்தன்.. பாத்ரூம் போறதுக்கு கூட ‘ரொம்ப அர்ஜன்ட்மா.. போயிட்டு வந்து பேசுறேனே.. ப்ளீஸ்..’ அப்டின்னு பெர்மிஷன் கேக்குறவன்..!!” – இப்போது வேணு தலையை கவிழ்த்துக் கொண்டான்.

“ஒருத்தன்.. லவ்வர் செருப்பால அடிக்காத குறையா.. ‘என் மூஞ்சிலயே முழிக்காத’ன்னு.. இவன் மூஞ்சில காறித்துப்பிட்டு போனப்புறமும்.. இன்னும் அவளையே நெனச்சுக்கிட்டு.. ‘அன்பே.. அழகே.. அவிச்ச முட்டையே.. அழுகுன முள்ளங்கியே..’ன்னு.. கவிதை எழுதிட்டு இருக்குறவன்..” – நீங்கள் நினைத்தது சரிதான். சாலமன் இப்போது மண்டையை தொங்க போட்டுக் கொண்டான்.

“உங்களை மாதிரிலாம் மானங்கெட்டு லவ் பண்றதுக்கு.. லவ் பண்ணாமலே இருக்கலாம்..!!” அசோக் முடிவாக சொல்ல,

“ஷ்ஷ்ஷ்ஷ்.. முடியல மச்சி..!! காதல் மேல உனக்கு அப்படி என்ன வெறுப்பு..?? சொல்லு மச்சி.. சொல்லு..!!” வேணு உணர்சிகரமாக கேட்டான்.

“என்னடா.. தமிழ் சினிமால.. ஹீரோயின் அப்பாகிட்ட பேசுற டயலாக்லாம் எங்கிட்ட பேசுற..?? எனக்கு காதல் மேலலாம் எந்த வெறுப்பும் இல்ல.. காதல்ன்ற பேர்ல நீங்க லூசுத்தனமா என்னன்னவோ பண்றதுதான் காமடியா இருக்கு..!! உங்களோட சுயத்தை இழந்துட்டிங்களேடா.. காதல் பண்றோம்னு உங்க ஒரிஜினாலிட்டியை தொலைச்சுட்டிங்களே..??” அசோக்கின் கேள்விக்கு இப்போது கிஷோர் பதில் சொன்னான்.

Updated: June 3, 2021 — 3:03 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *