அக்…அக்க்கா…க்க்கா…! 225

வாசுவுக்கு உறக்கம் வரவில்லை. அது புது இடம் என்பதால் மட்டுமல்ல, தலைக்குமேல் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியையே குறிக்கோளின்றி வெறித்தபடி படுத்திருந்தான். பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டவனாய்ப் பரிதவித்துக் கொண்டிருந்தான். ‘எப்படியோ வாழ்ந்திருக்க வேண்டிய அக்கா, இப்படி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாளே?’ நினைக்க நினைக்க வாசுவுக்கு அனுதாபமும், அவசரத்தில் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டு இப்போது அல்லல்படும் அக்காவின் மீது சற்று எரிச்சலும் ஏற்பட்டது.

’ஏன் அக்கா இப்படிச் செய்தாய்? அப்பா உன் காலிலேயே விழுந்து கெஞ்சினாரே? அம்மாவும் உறவினர்களும் எவ்வளவு அறிவுரை கூறினார்கள்? எல்லாவற்றையும் உதாசீனப்படுத்திவிட்டு, இளமை மயக்கத்தில் சரியான வேலையோ, வருமானமோ இல்லாத ஒருவனை நம்பி ஊர்விட்டு ஊர்வந்து இப்படி உருக்குலைந்து போய் விட்டாயே?’

வாசு சகுந்தலாவின் வீட்டுக்கு வந்திருப்பது அப்பாவுக்குத் தெரியாது. அம்மா கண்ணீரும் கம்பலையுமாகக் கெஞ்சியதால்தான் வாசு தன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு வந்திருந்தான். பெற்றோரை விடவும் சில நாட்களாகவே வாசுவுக்குத்தான் ஓடிப்போன அக்காவின் மீது மிகுந்த கோபம் உண்டாகியிருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ பிடித்து, குண்டும் குழியுமாக இருந்த ஆதம்பாக்கத்தின் ஒரு குறுகலான தெருவில், மிகுந்த சிரமத்துடன் அக்காவின் முகவரியைக் கண்டுபிடித்துக் கதவைத் தட்டியதும், கதவைத் திறந்த சகுந்தலாவைப் பார்த்தவுடனேயே அவனது மனதில் இருந்த கொந்தளிப்பு முற்றிலும் அடங்கி, அக்காவின் மீது உடனடியாக அனுதாபம் சுரந்துவிட்டது. இதுவா என் அக்கா? காலேஜுக்கும், ஹிந்தி கிளாசுக்கும் போகையிலும் வருகையிலும் கிராமத்து வாலிபர்கள் சைக்கிளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வட்டமிடுவார்களே, அந்த அக்காவா இவள்?

ஒரே ஒரு அறை, பாத்ரூம், கிச்சன் கொண்டிருந்த அந்த வீட்டில், இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகள், ஒரு பழைய டிவி, மூலையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பாய்கள், இன்னொரு மூலையில் சில தலையணைகள், லொடலொடவென்று ஓசையெழுப்பிய ஒரு மின்விசிறி! தலையெழுத்தா அக்கா? வீட்டுக்குள் நுழைந்ததும் மனதில் ஏற்பட்ட கொதிப்பு இரவு படுக்கிறவரையிலும், படுத்தபிறகும் வாசுவை தகித்துக் கொண்டிருந்தது. நல்ல வேளை, இதுவரை குழந்தை பிறக்கவில்லை! இல்லாவிட்டால், பெற்றோர்களின் முட்டாள்தனத்தால் அந்தப் பிஞ்சும் பசியும் பட்டினியுமாகப் பரிதவித்திருக்கக் கூடும்!

1 Comment

Comments are closed.