எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 18 55

இன்னொரு பக்கம்.. கொலையாளியை கண்டுபிடிக்கிற முயற்சியில் மலரவன் மிகத் தீவிரமாக இறங்கியிருந்தார்..!! உயர் அதிகாரியிடம் டெலிஃபோனில் பேசியவர்.. ‘கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சுடுவேன் ஸார்’ என்று நம்பிக்கையாக சொன்னார்..!! கொலை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகை பிரதிகளை கவனமாக ஆராய்ந்தார்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஒரு வரி விடாமல் கூர்ந்து வாசித்தார்..!! விஜயசாரதியிடமும், காசியிடமும் சமீபகாலமாக மொபைலில் பேசியவர்களை ஒவ்வொருவராக விசாரித்து முடித்தார்..!! தண்டையார்பேட்டை ஸ்லம் ஏரியாவில்.. சேறு நிறைந்த ஒரு சாலையில் நடந்து சென்று.. ஒருவாரம் முன்பு ஜெயிலில் இருந்து ரிலீசான ஒரு ரவுடியின் வீட்டு கதவை தட்டினார்..!! ஒரு நாளுக்கு நான்கு மணி நேரங்கள் மட்டுமே ஓய்வெடுத்துக்கொண்டு.. மிச்ச நேரங்களில் தனது ஜீப்பில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்..!!

மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் கழித்துவிட்டு.. நான்காம் நாள் காலை.. அசோக் வெறுங்கையுடன் சென்னை திரும்பினான்..!! மீராவும் அன்று மாலை வெளிநாட்டுப் பயணத்திற்கு தன்வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தாள்..!! மூன்று நாட்கள் அலைச்சல்.. திரும்ப வருகையில் ரயில் பயணம்.. களைப்படைந்து போயிருந்தான் அசோக்.. வந்ததுமே தனது அறைக்கு சென்று படுக்கையில் வீழ்ந்தவன்.. அடித்துப் போட்டாற்போல உறங்கிப் போனான்..!!

மகன் தூங்கட்டும் என்று விட்டுவிட்டிருந்த பாரதி.. மதியம் ஆனதும் ஒரு காபியுடன் சென்று அவனை எழுப்பினாள்..!! பல்துலக்கிவிட்டு அந்த காபியை அவன் உறிஞ்ச.. அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தவள், மெல்ல ஆரம்பித்தாள்..!!

“என்னடா.. என்னாச்சு.. உபயோகமா ஏதாவது தெரிஞ்சதா..??”

அம்மா கேட்கவும், ஹைதராபாத்தில் நடந்த விஷயங்களை அசோக் சுருக்கமாக அவளுக்கு எடுத்துரைத்தான். அவன் சொன்னதை எல்லாம் அவளும் கவனமாக கேட்டுக் கொண்டாள்.

“அவன் ஏமாத்தின இன்னும் ரெண்டு மூணு பொண்ணுகளை பத்தித்தான் தகவல் கெடைச்சது மம்மி.. மீரா பத்தி எந்த தகவலும் கெடைக்கல..!!”

“ம்ம்.. அப்போ அலைச்சல்தான் மிச்சமா..??”

“அப்படியும் சொல்லிட முடியாது..!! அந்த விஜயசாரதி பத்தி நெறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது..!! அப்புறம்.. இங்க சென்னைல அவனோட க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சது.. அவங்களுக்கு கண்டிப்பா மீரா பத்தி தெரிஞ்சிருக்கும்னு நம்புறேன்.. அவங்களை பத்தின டீடெயில் கலக்ட் பண்ணிட்டு வந்திருக்கேன்..!! ஆனா.. இப்போ உடனே அவங்களை போய் விசாரிக்க முடியாது.. கொலை நடந்திருக்குற இந்த சமயத்துல நான் போய் விசாரிச்சா.. தேவையில்லாத சந்தேகம் வரும்..!! அதனால.. இதை கொஞ்சநாள் ஆறப்போட்டு.. அப்புறம் அவங்களை விசாரிக்கலாம்னு நெனைச்சிருக்கேன்..!! அதுவரை மீராவுக்கு மட்டும் எதுவும் ஆகிடக்கூடாது மம்மி..!!” அசோக் கவலையாக சொல்ல,

“ஹ்ம்ம்.. அவளுக்கு எதுவும் ஆகாது.. நீ தேவையில்லாம கவலைப்படாத..!! அவ கண்டிப்பா உனக்கு கெடைப்பா.. நீங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் சேர்ந்து வாழப் போறீங்க.. அம்மாவுக்கு அதுல எந்த சந்தேகமும் இல்ல..!!” பாரதி அவனுக்கு நம்பிக்கையூட்டினாள்.

“தேங்க்ஸ் மம்மி..!!”

“அம்மா கீழ போறேன்டா.. இன்னும் அரைமணி நேரத்துல சாப்பாடு ரெடியாயிடும்..!! காலைல வேற நீ சாப்பிடல.. குளிச்சுட்டு கீழ வா.. மொதல்ல வந்து நல்லா வயிறாற சாப்பிடு.. என்ன பண்ணலாம்னு அப்புறமா யோசிச்சுக்கலாம்..!! சரியா..??” சொல்லிவிட்டு பாரதி அந்த அறையினின்று வெளியேறினாள்.

குளித்து முடித்து வேறு உடை மாற்றி கீழே செல்ல.. அசோக் முழுதாக ஒருமணி நேரம் எடுத்துக் கொண்டான்..!! படியிறங்கி கீழே வந்தவன், நேராக ஹாலுக்குத்தான் சென்றான்..!! ஹாலில் இருந்த டிவியில் ஜஸ்டின் டிம்பர்லேக் அலறிக்கொண்டிருந்தார்..!!

“Aren’t you something to admire..?
‘Cause your shine is something like a mirror..!!”

டிவிக்கு முன்னால் கிடந்த சோபாவில் சங்கீதா அமர்ந்திருந்தாள்.. ஆனால் டிவியில் ஓடிய பாடலுக்கு காதுகொடாமல்.. கையில் விரித்து வைத்திருந்த ஒரு புத்தகத்தில் தன் கவனத்தை செலுத்தியிருந்தாள்..!! அசோக் வந்ததும் புத்தகத்திலிருந்து முகத்தை திருப்பி.. அண்ணனை ஏறிட்டு புன்னகைத்தாள்..!! அசோக்கும் பதிலுக்கு புன்னகைத்து.. அவளுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான்..!! சங்கீதா உடனே ரிமோட்டை எட்டி எடுத்து சேனல் மாற்றினாள்.. ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டு சென்றவள்.. ஒரு சேனலில் விளம்பரம் ஓடியதை பார்த்ததும்.. அதிலேயே வைத்துவிட்டு அசோக்கிடம் திரும்பி கேலியாக சொன்னாள்..!!