எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 18 49

‘ப்ச்’ என்று ஒரு சலிப்பை உதிர்த்தாள்.. ‘எங்கே விழுந்திருக்கும்..’ என்று நெற்றியை கீறினாள்.. ‘ஒருவேளை அங்கே..??’ என்பது மாதிரி ஒரு எண்ணம் தோன்றவும் உடல் சிலிர்த்துக் கொண்டது..!! ‘சேச்சே.. அப்டிலாம் இருக்காது.. வேற எங்கயாவது விழுந்திருக்கும்..’ என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்..!!

படுக்கையறையில் தேடிப் பார்க்கலாம் என்று அவள் திரும்பிய போதுதான்.. திடீரென..

“கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்…!!!!”

என்று காலிங்பெல் சப்தம் எழுப்பியது..!! அந்த சப்தத்தை கேட்டதுமே, மீரா அப்படியே ப்ரேக் போட்ட மாதிரி டக்கென்று நின்றாள்.. கண்களில் மெலிதான ஒரு மிரட்சியுடன் திரும்பி, வாசற்கதவை வெறித்தாள்..!! அவளுடைய உடலில் ஒருவித பதற்றம் ஊற்றெடுக்க.. உதடுகள் சன்னமான குரலில் முணுமுணுத்தன..!!

“போலீஸ்..!!!!”

மீராவின் பென்டன்டை கைப்பற்றியதிலும்.. ஸ்ரீனிவாச பிரசாத்தை பேச விடாமல் தடுத்ததிலும்.. அசோக் மிகுந்த திருப்தியுற்றிருந்தான்..!! போலீசின் கவனத்தை மீராவின் பக்கம் இருந்து திருப்பியாயிற்று.. அவர்கள் அவளை நெருங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்திருந்தான்..!! அவன் செய்த விஷயங்கள் மீராவுக்கு மிகவும் சாதகமான விஷயங்களாக அமைந்த போதிலும்.. போலீஸ் மீராவை நெருங்குவதை தவிர்க்கும் அளவிற்கு போதுமானதாக இருக்கவில்லை..!!

அந்தவகையில் அசோக்கை விட மீரா மிகவும் கூர்மையாக இருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்..!! விஜயசாரதியை பார்ப்பதற்கு கிளம்பும்போது, சமையலறை சென்று அந்த கத்தியை எடுத்து தனது கைப்பைக்குள் திணித்தாளே.. அந்த நொடியே.. அடுத்தநாள் தன் வீட்டு வாசலில் வந்து போலீஸ் நிற்கும் என்பதை தெளிவாக அறிந்தே வைத்திருந்தாள்..!! அதனால்தான்.. இப்போது கதவை திறந்ததும்.. எதிர்ப்பட்ட இரண்டு காக்கி உடுப்புகளை பார்த்து.. அவளால்..

“எஸ்..!!” என்று இயல்பாக சொல்ல முடிந்தது..!!

கான்ஸ்டபிள்கள் இருவர் மீராவின் வீட்டை அணுகியிருந்த அதே சமயத்தில்.. அசோக் ரெட்ஹில்ஸ் காவல் நிலையத்தில்தான் இருந்தான்.. அவனுடன் ஸ்ரீனிவாச பிரசாத்தும் இருந்தார்..!! இருவரும் சேர்ந்து.. முதல்நாள் நடந்த சம்பவத்தினைப் பற்றி.. ஒரு ஃபார்மல் ஸ்டேட்மன்ட் எழுதி தர வேண்டி இருந்தது..!! அப்புறம்.. முதல்நாள் மலரவன் கேட்டுக்கொண்ட மாதிரி.. இருவரது கைரேகை பிரதிகளையும் ரெட்ஹில்ஸ் போலீஸ் வசம் ஒப்படைத்தனர்..!! மலரவன் மேலும் சில கேள்விகளுடன் தயாராக இருந்தார்.. அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி அவரை திருப்தி செய்தனர்..!!

“விஜய சாரதியோட செல்ஃபோன் இன்னும் கெடைக்கல..!! பட்.. அவரோட செல்நம்பர் வச்சு.. அவருக்கு நேத்து வந்த கால்லாம் ட்ரேஸ் பண்ணினோம்.. லாஸ்டா உங்க நம்பர்ல இருந்துதான் அந்த நம்பருக்கு கால் போயிருக்கு.. ஐ மீன்.. கொலை நடந்த கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்..!!” மலரவன் சொல்லிவிட்டு அசோக்கை கூர்மையாக பார்த்தார்.

“ஓ..!!” அசோக் திகைப்பது போல நடித்தான். அவசரமாய் தன் செல்ஃபோன் எடுத்து பார்த்தான்.

“அந்த காலை யாரோ அட்டண்ட் பண்ணிருக்காங்க.. ஒருநிமிஷம் வரை அந்த கால் போயிருக்கு..!!”

“தெ..தெரியல ஸார்..!! என் மொபைல பேன்ட் பாக்கெட்ல வச்சிருந்தேன்.. தானா டயல் ஆகி இருக்கும்ன்னு நெனைக்கிறேன்.. நிச்சயமா நானா பண்ணல..!!”

“கொலை பண்ணினவங்கதான் செல்ஃபோனை எடுத்துட்டு போயிருக்கனும்.. அவங்கதான் அந்த காலையும் அட்டன்ட் பண்ணிருக்கணும்..!!”

“இருக்கலாம் ஸார்..!! நான் ஆக்சிடண்டா டயல் பண்ணின மாதிரி.. அவங்களும் ஆக்சிடண்டா கால் பிக்கப் பண்ணிருக்கலாம்..!! தெரியல ஸார்.. ஐம் நாட் ஷ்யூர்..!!”

அசோக்கின் சமாளிப்பை நம்புவதை தவிர மலரவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. அசோக்கிற்கு பொய் சொல்ல எந்த அவசியமும் இல்லை என்று அவர் உறுதியாக நம்பியதால்.. அவன் சொன்ன அந்த ஆக்சிடன்ட் டயல் லாஜிக்கை ஒரு பெருமூச்சுடன் ஏற்றுக் கொண்டார்..!! பிறகு.. ஸ்ரீனிவாச பிரசாத் கேட்ட சில பொதுவான கேள்விகளுக்கும்.. மலரவன் பதிலளித்தார்..!!

“மூர்த்தி ஸார் வந்தாச்சா..??”

“ம்ம்.. காலைலேயே வந்துட்டார்..!!”

“இன்வெஸ்டிகேஷன்ல ஏதாவது இம்ப்ரூவ்மன்ட்..??”

“ப்ச்.. எதுவும் இல்ல ஸார்..!! என்ன மோட்டிவ்னு கூட இன்னும் தெரியல..!! பட்.. இன்வெஸ்டிகேஷன் புல் ஃஸ்விங்ல ஸ்டார்ட் பண்ணிருக்கோம்.. ரெண்டு ஆங்கிள்ல இன்வெஸ்டிகேஷன் மூவ் பண்ண நெனைச்சிருக்கோம்..!!”

“ஓ.. என்ன ஆங்கிள்ஸ்..??”

“ஒன்னு.. மூர்த்தி ஸாரோட பிஸினஸ் எதிரிங்க யாராவது, அவர் மேல இருக்குற பகைல.. அவரோட ஒரே பையனை தீர்த்து கட்டிருக்காங்களான்னு..!! இன்னொன்னு.. அந்த காசிப்பயலோட ட்ரக் பெட்லிங் கேங்ல யாராவது.. அவன் மேல இருக்குற பகைல இதைப் பண்ணிருக்கலாமான்னு..!!”

“ஓகே ஓகே.. குட்..!!”

எல்லா சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு.. அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் அங்கிருந்து கிளம்ப.. ஒருமணி நேரத்துக்கும் மேலாகிப் போனது..!!

“ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம் தம்பி.. கேஸ் கோர்ட்டுக்கு வர்றப்போ.. நீ வர்ற மாதிரி இருக்கும்..!! உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே..??” கிளம்புகிற சமயத்தில் மலரவன் அசோக்கிடம் கேட்க,

“இ..இல்ல ஸார்.. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!” அவன் புன்னகையுடன் சொல்லிவிட்டு திரும்பி நடந்தான்.

அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் மலரவனின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.. வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் ஜீப்பில் ஏறிக் கொண்டனர்..!! சாவி திருகி ஜீப்பை கிளப்பினார் ஸ்ரீனிவாச பிரசாத்.. ஆக்சிலரேட்டரை மிதித்து வேகம் கூட்டினார்..!! அந்த ஜீப்.. காவல்நிலைய வளாகத்தின் நுழைவாயிலை தாண்டியபோது.. எதிர்ப்பக்கம் இருந்து இன்னொரு ஜீப் க்ராஸ் செய்து, காவல் நிலையத்துக்குள் நுழைந்தது..!! அந்த ஜீப்பில்.. பின் சீட்டில்.. அமர்ந்திருந்தாள்.. மீரா..!!!

ஒரு ஜீப்பில்.. ‘அடுத்து என்ன செய்யப் போகிறோம்?’ என்ற கவலை தோய்ந்த முகத்துடன் அசோக்..!! அடுத்த ஜீப்பில்.. எதைப் பற்றிய அக்கறையும் இல்லாமல்.. எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மீரா..!! இரண்டு ஜீப்புகளும் ஒன்றை ஒன்று எதிரும் புதிருமாய் க்ராஸ் செய்து கொண்டன.. அசோக்கும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வாய்ப்பில்லை..!! இருவரையும் சந்தித்துக்கொள்ள வைத்து.. அவர்களது காதலுக்கு உதவி செய்கிற மாதிரி ஒரு எண்ணம்.. பாழாய்ப்போன அந்த விதிக்கும் வரவில்லை..!!

அடுத்த ஐந்தாவது நிமிடம்.. மீரா மலரவனின் முன்பு அமர்ந்திருந்தாள்..!! அவளுடைய இதயத்தின் துடிப்பு வழக்கத்தைவிட அதிகமாயிருந்தது.. ஆனால் அந்த பதற்றத்தை தனது முகத்தில் காட்டாமல், மிக லாவகமாக மறைத்திருந்தாள்..!! சில வினாடிகள் அவளை ஏற இறங்க பார்த்த மலரவன்.. பிறகு மிக இயல்பாகவே தன் விசாரணையை ஆரம்பித்தார்..!!