பலி பீடமே தான்யா அது,யாராவது எங்கள் மக்களை ஏமாற்றினால் அங்கு வைத்து தான் எங்கள் குல தெய்வத்திற்கு பலி கொடுப்போம்.ஏன் ஒரு வாரம் முன்பு கூட இங்கு ஒரு போலீஸ் எங்க பொண்ணை ஏமாற்றி கெடுத்து விட்டார்.இங்கு தான் வைத்து நரபலி கொடுத்தோம் என்று கூற ,ஷெட்டிக்கு உள்ளூர உதறல் எடுத்தது.
டேய் ஷெட்டி ,இங்கு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஆபத்து , சட்டுபுட்டென்று இடத்தை காலி பண்ணி விடலாம் என்று மனதில் நினைத்தான்.
சரி அப்போ நாங்க உத்தரவு வாங்கி கொள்கிறோம் ,ஸ்ருதி வா போகலாம் என்று ஷெட்டி அழைத்தான்.
அப்பொழுது அந்த நேரம் அந்த ஊர் தலைவரின் மனைவி ,வந்து அவர் காதில் ஏதோ கிசுகிசுத்தாள் .
ஷெட்டி மனதில் , “அய்யயோ ஸ்ருதி என் மனைவி இல்லையென்று கண்டு பிடித்து விட்டார்களா ?” என்று அவன் அடிவயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது.
ஐயா ,மன்னித்து கொள்ளுங்கள் நீங்கள் இப்போ இங்கே இருந்து செல்ல முடியாது என்று கொஞ்சம் அதிகாரத்துடன் ஊர்தலைவர் கூற,
செத்தாண்டா சேகரு ,என்று ஷெட்டி மனதில் நினைத்தான்.
ஸ்ருதியோ எந்த கவலையும் இல்லாமல் மக்களோடு மக்களாக பேசி கொண்டு நன்றாக ஒன்றி விட்டு இருந்தாள்.
எதுக்கு நாங்க… இப்போ போக முடியாது ,என்று வாய் குழறலாக ஷெட்டி கேட்க,
ஐயா,இன்று இரவு எங்க தெய்வத்திற்கு நாங்க பூஜை போட போகிறோம்,ரொம்ப விசேஷமாக இருக்கும் . பாட்டு,குரவை கூத்து எல்லாம் நடக்கும். இப்போ உங்க மனைவி வேறு நம்ம குழந்தையை காப்பாற்றி எங்க கூட்டத்தில் ஒருவராக மாறி விட்டார். அதனால் நீங்க இருவரும் கண்டிப்பாக கலந்து கொண்டு தான் போக வேண்டும் .
“தலைவரே அது எப்படி முடியும் ,தேர்தல் வேலை நிறைய இருக்கு ,நாங்க இன்னொரு நாள் கண்டிப்பாக வந்து கலந்து கொள்கிறோம்.”ஷெட்டி கூற
ஐயா ,இன்று நடக்க இருக்கும் பூஜையில் பாட்டு,குரவை கூத்து மட்டும் கிடையாது.அதற்கு அப்புறம் இங்கு இருக்கும் மக்கள் எதிர்காலத்திற்கு வேலனிடம் குறி கேட்பார்கள்.அது அப்படியே பலிக்கும்.நீங்களும் வரும் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? என்று கேட்டு கொள்ளலாம்.
எதுக்கும் என் மனைவி கிட்ட ஒரு வார்த்தை கேட்டு கொள்ளுங்கள்.-ஷெட்டி கூற
எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல!எனக்கும் குரவை கூத்து எல்லாம் பார்க்கணும் ஆசையாக இருக்கு. நான் கண்டிப்பா உங்க பூஜையில் கலந்து கொள்கிறேன் என்று ஸ்ருதி ஒப்புகொண்டாள்.
ஷெட்டிக்கும்,ஸ்ருதிக்கும் தனி வீடு ஒதுக்கப்பட்டது.
ஏய் ஸ்ருதி ,நான் இங்கே இருந்து எப்படியாவது சீக்கிரம் கிளம்பி விடலாம் என்று நினைத்தால் நீ இங்கேயே ஏன் தங்க ஒப்பு கொண்டாய் ?
எனக்கு இந்த மக்களை ரொம்ப பிடித்து இருக்கு ,கள்ளம் கபடம் இல்லாமல் ரொம்ப வெகுளியா இருக்காங்க ,அதனால் தங்க ஒப்பு கொண்டேன்.
எனக்கு இங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிடமும் பயமாக இருக்கு. எங்கே நாம் கணவன் மனைவி இல்லை என்ற குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் இருக்கிறேன் .நீ வேற இங்கே தங்கறேன் என்று சொல்லி ஏழரையை கூட்டி வைச்சு இருக்கற .
ஒன்னும் பயப்படாதீங்க ,உங்க உயிருக்கு எந்த ஆபத்தும் நான் வர விட மாட்டேன்.பூஜை முடிந்த உடனே கிளம்பி விடலாம்.
ஆனால் இரவு நடக்க போகும் பூஜை இருவர் வாழ்க்கையையே புரட்டி போட போகிறது என்று இருவருக்குமே தெரியாது.
இரவு முதலில் விளக்கு பூஜை நடக்க ,விளக்கு ஒளியில் ஸ்ருதி மட்டும் அனைவருக்கும் இடையில் வைரம் போல ஜொலித்தாள்.விளக்கு ஒளி அவள் அழகை மேலும் மெருகேற்றி காட்டியது.
அடுத்து குரவை கூத்து நடக்க தொடங்கியது.குரவை கூத்தில் முருக பெருமானின் பெருமைகள் பேசப்பட்டு பின்பு முருகன் வள்ளியை கைப்பிடிக்க எடுத்த முயற்சிகள் தத்ரூபமாக காட்டப்பட்டன.இதை எல்லாம் ஸ்ருதி ஆவலாக ரசித்து பார்த்து கொண்டு இருந்தாள்.குரவை கூத்து முடிந்த உடன் குறி சொல்லும் படலம் ஆரம்பம் ஆகியது.
பொதுவாக ஊருக்கே குறி சொல்ல ஆரம்பித்த வேலன்,இந்த முறை நீங்க நெடுநாள் எதிர்பார்த்த மாதிரி நல்ல விசயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்கும். மழை நன்றாக பொழியும்.இதோ இன்று உங்கள் குழந்தையை காப்பாற்றி கொடுத்தாலே இந்த பெண் வெற்றி பெற்று உங்கள் ஊருக்கு நல்ல விசயங்கள் பல நடக்க போகிறது. ஆனால்…….
ஆனால் என்ற வார்த்தை கேட்டு ,ஷெட்டிக்கு பயங்கர உதறல் எடுத்தது.
