டீச்சரம்மா.. Part 1 371

சரண் என் வகுப்பு மாணவன். பதினென்றாம் வகுப்பில் ஒரு முறையும், பனிரெண்டாம் வகுப்பில் ஒரு முறையும் பெயில் ஆகி, இப்போது கல்லூரி படிக்க வேண்டிய வயதில் பனிரெண்டாம் வகுப்பில் இரண்டாவது வருடம் படித்துக்கொண்டு இருக்கிறான்.

நான் அவன் பேப்பரை புரட்டிப்பார்க்க அவன் விடைகள் மெய்ன் ஷீட்டைக் கூட தாண்டவில்லை. நான்கு பக்க மெய்ன் ஷீட்டிலும் கூட மூன்று பக்கங்கள் மட்டும்தான் எழுதியிருந்தான். எதிலும் இரண்டு கேள்விகள் தவறு. ஒரு கேள்வி சரி என்றபோதும் கேள்வி எண்ணை மாற்றிப் போட்டிருந்தான்.

அவன் ஒரு 5 மதிப்பெண்ணாவது வாங்க வேண்டும் என்று நினைத்த நான், தவறான கேள்வி எண்ணை போட்டிருந்த கேள்விக்கு, சரியான கேள்வி எண்ணை என் சிவப்பு மையினால் திருத்தி, டிக் செய்து 5 மார்க் கொடுத்தேன். அந்த பரிட்சையில் மொத்தமாகவே அவன் பெற்றது 5 மதிப்பெண்கள்தான்.

“ச்சே.. என் க்ளாஸ்ல இப்படியும் ஒரு ஸ்டூடன்ட்..” என்று தலையில் கை வைத்துக்கொண்டு அடுத்த பேப்பரை திருத்த ஆரம்பித்தேன். மொத்த பேப்பரையும் திருத்தி முடித்து மார்க் லிஸ்ட் எடுத்தபோது சரணைத் தவிர மற்ற அனைவரும் என் சப்ஜெக்டில் பாஸ் ஆகியிருந்தனர்.

அப்போது கமலி டீச்சர் “என்ன டீச்சர், சரண் உங்க சப்ஜெட்லயாவது பாஸாகிட்டானா?” என்று கேட்டாள்.

“இல்ல டீச்சர். 5 மார்க் வாங்கிருக்கான். அதிலயும் ஒரு கேள்விக்கு ரொம்ப கேர்லெஸ்ஸா கொஸ்டின் நம்பர் மாத்தி போட்டுருக்கான். நான் அத கண்டுக்காம அந்த கேள்விக்கு 5 மார்க் போட்டிருக்கேன். இல்லைனா 0 தான். பப்ளிக் எக்ஸாம்ல இப்டி பண்ண முடியுமா டீச்சர்? இவனை மாதிரி பசங்கள எல்லாம் எப்படி மேத்ஸ் குரூப்ல சேர்த்தாங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல..” என்று என் மன ஆவேசத்தை கமலி டீச்சரிடம் கொட்டித் தீர்த்தேன்.

வேறு என்ன செய்வது ரிசல்ட் குறைந்தால் ஹெட்மாஸ்டர் க்ளாஸ் டீச்சர் என்ற முறையில் என்னைத்தான் முதலில் கேள்வி கேட்பார்.

என் ஆவேசத்தை புரிந்துகொண்ட கமலி டீச்சர் “டீச்சர், அவன் 10th-ல நல்லாத்தான் மார்க் வாங்கியிருந்தான். அதனாலதான் அவனுக்கு மேத்ஸ் குரூப் குடுத்தாங்க. நீங்க வந்து ரொம்ப நாலஞ்சு மாசந்தான் ஆகுறதால உங்களுக்கு அவனப்பத்தி தெரியல. அவன் ரொம்ப நல்ல பையன்.. ஆனா, இப்போ அவங்கிட்ட ஏதோ பிரச்சனை இருக்கு!” என்று சொல்லி முடிக்கையில் மதியம் உணவு இடைவேளைக்கான மணி ஒலித்தது.

உடனே என் வேலையெல்லாம் ஒரு ஓரமாக தூக்கி வைத்துவிட்டு என் லஞ்ச் பாக்ஸை திறக்கையில் என்னுடன் மற்ற அனைத்து ஆசிரியைகளும் சேர்ந்துகொண்டனர். கிட்டத்தட்ட ஏழெட்டு பேர் ஒன்றாக அவரவர் குடும்ப விஷயங்கள், சினிமா என்று ஒவ்வொரு டாப்பிக்காக பேசி சிரித்தபடி சாப்பிட்டு முடித்தோம்.