எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 18 55

“கூடிய சீக்கிரம் தமிழ்ல என் பேரு வரும்டா.. அதுவும் தனியா..!!”

கான்ஃபிடன்ட்டாக சொன்ன பரணியை கடுப்புடன் முறைத்தவாறே.. அவன் வாங்கிவைத்திருந்த ஹைதராபாத்தி சிக்கனை எடுத்து கடித்தார்கள்..!! இவர்கள் விழித்திருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையில்.. பரணி தனது டாலிவுட் அனுபவங்களை சொல்லிக்கொண்டிருக்க.. இருட்டுக்குள் அவனை தனியாக புலம்பவிட்டு.. இவர்கள் குறட்டை இல்லாமல் உறங்கினார்கள்..!!

அடுத்தநாள் காலையே அசோக்கும், கிஷோரும் இப்ராஹிம் பாக்கில் இருக்கும் வாசவி இஞ்சினியரிங் கல்லூரிக்கு சென்றார்கள்..!! எப்படி ஆரம்பிப்பது என்றே இருவருக்கும் ஆரம்பத்தில் படுகுழப்பம்..!! விஜயசாரதி கொலையாகியிருந்த விஷயம் அவனது கல்லூரிக்கு இன்னும் பரவியிருக்கவில்லை.. இவர்களும் அந்த விஷயத்தை யாருக்கும் தெரிவிக்கவில்லை..!! கல்லூரி பேராசிரியர்கள் சிலரை சந்தித்து பேசினார்கள்.. விஜயசாரதி அந்த கல்லூரியில் படித்து முடித்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன.. நிறைய பேராசிரியர்கள் மாறியிருந்தனர்.. ஒருசில பழையவர்கள் விஜயசாரதியை நினைவு கூர்ந்தாலும், ‘ரோக்’ என்று அவனை திட்டியதை தவிர, அவர்களால் உருப்படியான தகவல் எதையும் தர முடியவில்லை..!!
பிறகு.. கல்லூரிக்கு வெளியே இருந்த பெட்டிக்கடையில்.. காசில்லாமல் சிகரெட் மறுக்கப்பட்ட அவனை பிடித்தனர்.. அந்த கல்லூரியில் ஆபீஸ் அசிஸ்டன்டாக பணிபுரிபவன்..!! அவனிடம் சில கரன்ஸிகளை அள்ளி தெளித்து.. அவன் மூலமாக அந்தக் கல்லூரியில் அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் படித்த மாணவர்களின் தகவல்களை ஒரு குறுந்தட்டில் கிடைக்கப் பெற்றனர்..!! மாணவர்களுடைய புகைப்படங்களும் அந்த குறுந்தகட்டில் இடம்பெற்றிருந்தன..!!

அந்த புகைப்படங்களை கவனமாக ஆராய்ந்து.. விஜயசாரதி அந்த கல்லூரியில் பயின்ற காலத்தில் மீரா அங்கு பயிலவில்லை என்ற உண்மையை கண்டறிந்தனர்..!! ‘சரி.. ஹைதராபாத்திலேயே வேறு கல்லூரியாக இருக்கும்..’ என்று மீண்டும் ஒரு தவறான நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டனர்..!! குறுந்தகட்டில் கிடைத்த தகவல் மூலம்.. ஹைதராபாத்தில் விஜயசாரதி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று முதலில் விசாரித்தனர்..!!
அவர்கள் மூலம் இன்னொருவர்.. அவர் மூலம் வேறொருவர்.. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம்.. அந்த இடத்திலிருந்து அடுத்த இடம் என்று.. அவர்களது விசாரணை அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்துகொண்டே இருந்தது..!! விஜயசாரதியின் புகைப்படத்தை காட்டி அவனை நினைவுறுத்துவது.. பிறகு மீராவின் அடையாளங்களை சொல்லி அந்த மாதிரி யாராவது ஒரு பெண்ணை அந்த விஜயசாரதி காதலித்தானா என கேட்பது.. என்கிற மாதிரிதான் அவர்களது விசாரணை பொதுவாக அமைந்திருந்தது..!!

விஜயசாரதியை பற்றி விசாரிக்க விசாரிக்க.. அவனது தீய குணங்களும், கெட்ட சகவாசங்களும்.. மேலும் மேலும் அவர்களுக்கு தெரியவந்தன..!!

பேகும்பேட்டில் ஒரு விபச்சார விடுதி..

“இவளுக எல்லாம் அவன் காதலிச்சவளுகதான்.. ஒவ்வொருநா ராத்திரிக்கும் ஒவ்வொருத்தி..!!” – தன்னிடமிருந்த பெண்களை கைகாட்டி பேசினாள், அந்த விடுதியின் தலைவி.

ஹைடெக் சிட்டியில் ஒரு பார்..

“என்ன ஸார்.. விஜயோட ஃப்ரண்டுன்றீங்க.. டோப் இருக்கானு கேட்டா இல்லைன்றீங்க..??” – மிதமிஞ்சிய போதையில் வாய்குழற சொன்னான், விஜயசாரதியுடன் கல்லூரியில் படித்த ஒருவன்.

துமுகுன்ட்டாவில் ஒரு சேரிப்பகுதி..

“அவன்ட்ட சொல்லி வைங்க.. என்னைக்கா இருந்தாலும் என் கையாலதான் அவனுக்கு சாவு.. அண்ணா அடுத்த மாசம் வெளில வர்றாரு..!!” – விஜயசாரதி இறந்துபோன விஷயம் தெரியாமல் கறுவினான், ஒற்றை கையை இழந்துபோயிருந்த ஒரு ரவுடி.

எர்ரகடாவில் ஒரு ஓபன் கார்டன் ரெஸ்டாரன்ட்..

“அதெல்லாம் ஒரு கனவா நெனச்சு மறந்துட்டு.. இப்போ நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன் ஸார்..!! தயவு செஞ்சு.. என் வீட்டுக்காரர்ட்ட மட்டும் இந்த விஷயத்தை சொல்லிடாதிங்க.. உங்களை கையெடுத்து கும்பிடுறேன்..!!” – கையில் ஒருவயது குழந்தையுடன் கெஞ்சினாள், விஜயசாரதியிடம் காதலென்ற பெயரில் கற்பிழந்த இன்னுமொரு பெண்.

அசோக் ஹைதராபாத்தில் விஜயசாரதி பற்றி விசாரித்து அலைந்து கொண்டிருந்த சமயத்தில்.. மீரா சென்னையில் வளைகுடா பயணத்தின் விசா பிரச்சினைக்கு அலைந்து கொண்டிருந்தாள்..!! வேலைக்கு ஏற்பாடு செய்திருந்த கன்சல்டன்ஸிக்கு சென்று மேனஜரை சந்தித்து பேசினாள்.. வெளிநாட்டில் தான் தங்குவதற்கான ஏற்பாட்டை பற்றி விவாதித்தாள்..!! முதல் மாச சம்பளம் வரும்வரை செலவுக்கு தேவையென.. தனது செயின், ப்ரேஸ்லட்டை எல்லாம் விற்று காசாக்கினாள்..!! அந்தக்காசின் கணிசமான தொகையை.. ஐயாயிரம் சவூதி ரியாலாக மாற்றி.. தனது ஹேண்ட் பேகுக்குள் திணித்தாள்..!!

“எந்த நாட்டுக்கு போறேன்னு கூட சொல்ல மாட்டியா..??” கேட்ட மனோகரிடம்,

“எனக்கு சொல்ல விருப்பம் இல்ல..!! இன்னும் ரெண்டே நாள்.. அப்புறம் நீங்க யாரோ நான் யாரோ..!!” என்று வெடுக்கென சொன்னாள்.

“ஹ்ம்ம்.. எதுக்கு இந்த கஷ்டம்லாம்..?? இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல.. நீ மட்டும் கொஞ்சம் உன் பிடிவாதத்தை விட்டுட்டேன்னு வச்சுக்கோ.. ராணி மாதிரி வாழலாம்..!!” பல்லிளித்தவனிடம்,

“செருப்பு பிஞ்சுடும்..!!!!” கண்களில் கோபக்கனலுடன் எச்சரித்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன்பே.. வெளிநாட்டு பயணத்திற்கான பேக்கிங் வேலைகளை ஆரம்பித்திருந்தாள்.. ஒரு பெரிய பெட்டியில் தனது உடைகளை எல்லாம் அடுக்கி வைத்தாள்.. மறவாமல் அந்த உடைகளுக்கு நடுவே அசோக்கின் புகைப்படத்தை செருகினாள்..!!