கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 39 12

“பத்து… அப்பா இருக்கற வரைக்கும் இந்த ஆசையை மனசுக்குள்ளவே வெச்சிக்கோடீ… என் மூஞ்சியிலே மீசையை அவர் பாத்தார்… ஆத்தை விட்டே என்னையும், உன்னையும் சேர்த்து, அடிச்சித் தொரத்திடுவார்..” ராகவனுக்கு பெற்றவரிடம் அத்தனை பயம். தகப்பன் உயிரோடு இருந்த வரை அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்து பேசினவர் இல்லை.

தகப்பனார் வைகுண்ட வாசத்தை அடைந்தவுடன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற ஒரு முறை மீசை வளர்த்தார். மீசை வெள்ளையும் கருப்புமாக வளர,
“வேண்டாங்க.. மீசை இல்லாமலே நீங்க அழகா இருக்கீங்க’ ஆசைப்பட்ட பத்மாவே கிண்டல் பண்ண, விட்டுது ஆசை விளாம்பழ ஓட்டோடு என அவர் மனதுக்குள் திருப்தியடைந்தார்.

கறுப்பு மெட்டல் பிரேமில் மூக்குக் கண்ணாடி. மீசை இல்லாம, நெத்தியில திருசூர்ணத்தோட வெள்ளை சட்டை போட்டு இருப்பார் அவர்தான் ராகவன். நல்ல மனுஷன். அவர் கிட்ட போங்க, உங்க பிராப்ளம் எல்லாத்தையும் நொடியில சால்வ் பண்ணிடுவார், அவர் சீஃப் மேனஜாராக இருந்த பாங்க் கிளையில் அவருடைய அடையாளம் இதுதான்…

ராகவன் எப்போதும் வெள்ளை சட்டைதான் அணிவார். நெருங்கிய உறவினர்களுக்கும், குடும்ப நண்பர்களுக்கும் அவர் கீழப்பந்தல் நாராயண ஐயங்கார். மற்றவர்களுக்கு அவர் வெறும் ராகவன். ராகவன் என்பது படிக்க ஆரம்பித்த காலத்தில் பள்ளிக்கூடத்திற்காக அவருக்கு சூட்டப்பட்ட பெயர்.

உயரத்துக்கு ஏற்ற கனம். வெய்யிலோ, குளிரோ, கால வித்தியாசமில்லாமல், எந்த காலத்திலும், வீட்டில் எட்டு முழ வேஷ்டி, கை வெச்ச பனியன் என்றுதான் எளிமையாக இருப்பார். அவர் அருகில் சென்றால், மஞ்சளின் வாசமும், துளசியின் நறுமணமும் வீசும். சனிக்கிழமைகளில் எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் தவறாமல் பெருமாளைத் தரிசனம் செய்தே ஆகவேண்டும்.

தனித்திருக்கும் போது வாயில் திருவாய்மொழியும், ஆண்டாள் பாசுரங்களும் முனகலாக வந்து கொண்டிருக்கும். ஒரு கைப்பிடி புளிசாதத்திற்கும், ஒரு தொன்னை நெய் வழியும் வெண் பொங்கலுக்கும், பெசண்ட் நகரில், தன் உழைப்பில், தான் கட்டிய மாடி வீட்டையும், வீட்டை சுற்றி இருக்கும் காலி இடத்தையும், மொத்தமாக எழுதிக்கொடுத்துவிடுவார்.

புளியோதரையிலும், வெண்பொங்கலிலும் மட்டும் அந்த அளவுக்கு அவருக்கு ருசி, விருப்பம், ஏன் ஒரு வெறி என்றே கூடச்சொல்லலாம். வாழ்க்கையில் இதைத் தவிர வேறு எந்த பெரிய ஆசை, லட்சியம், கனவு என்று இல்லாமல், தன் மனைவி, தன் தங்கை உஷா, தன் ஒரே மகன் என்ற நிறைந்த மனதுடன் வாழ்ந்து வருபவர், ராகவன்.

லயோலா காலேஜ் பாஸ் அவுட். கல்லூரியில் முதல் பெஞ்சில்தான் உட்க்காருவன் ராகவன். ஹாஸ்டலில் தங்கிப் படித்தவன். கல்லூரி மாணவர்களுக்கே உரிய அதீத ஆசைகள் எதுவும் இருந்ததில்லை. சிகரெட்டை கனவிலும் கையால் தொட்டதில்லை.

அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட
“தண்ணி அடித்தல்’ என்ற சொற்களைக் கேட்டால், காத தூரம் ஓடுவார்.
“அவன் தயிர்சாதம்டா” சக மாணவர்களின் கிண்டலைப் பற்றி கவலைப் பட்டடே கிடையாது.

காலையில் எழுந்ததும், ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயர் பாடும் ராகவனின் பிள்ளை, ஆசை புதல்வன், அவரின் ஒரே வாரிசு, தன் பதினெட்டாவது வயதில், தெரு முனை பெட்டிக் கடைக்கு பின்னால் நின்று கொண்டு, ஸ்டைலாக சிகரெட்டை உதடுகளில் கவ்வி, மூக்கு, வாய், உதடு என புகையை வெளியேற்றி அக்னி ஹோத்திரம் பண்ண ஆரம்பித்தான்.

தன் குலத்திலேயே முதலாவது ஆளாக, தன் வாரிசு சிகரெட் பிடிப்பதை முதல் முறையாக கண்ணால் கண்டவர், பிடிக்காமல், மனதுக்குள் புழுங்கினார். கோபத்தில் குமைந்தார். தங்கையிடமும், தாரத்திடமும் தான் கண்டதைச் சொல்லி சொல்லி மருகினார். ஒரு வாரம் மகனிடம் பேசவில்லை. ஆனால் தன் பொறுமையை இழக்கவில்லை.