கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 19 3

கிராமத்துக்கு வந்தால் சுகன்யாவின் வாசம் எப்போதும் மாடி அறையில்தான். அது என்னவோ தெரியவில்லை மாடியறை கோடைக் காலத்தில், பகலில் தகிக்கும் செங்கல் சூளையாயிருந்தாலும், மாடி அறைகள்தான் அவளுக்கு மிகவும் பிடிக்கிறது. ஹாஸ்டலில் தங்கிப் படித்தக் காலத்தில், விடுமுறையில் வீட்டுக்கு வந்த போதும், படித்து டிகிரி வாங்கி, வேலைக்காகத் முயற்சி செய்து கொண்டிருந்த காலத்திலும், சுகன்யா இந்த மாடியில்தான் தன் நேரத்தைக் கழிப்பாள்.

“சுகா, நாலு நாளைக்கு மேல வீட்டுல சேந்தாப்பல இருக்கறது இல்லே நீ. அந்த நாலு நாள்லேயும் ஏண்டி எப்பவும் அந்த மாடியில போய் ஏறிக்கிறே? செத்த நேரம் ஹால்லே உக்காந்து வாயாடினா எனக்கும் பொழுது போகுமில்லே?” சுந்தரி புலம்புவாள்.

“இத்தனை நாள்தான் படிக்கிறேன் படிக்கிறேன்னு கதை சொல்லிக்கிட்டு இருந்தே? கிச்சன்ல கூட மாட நின்னு வீட்டு காரியங்களையும் கொஞ்சம் கொஞ்சம் பழகினாத்தான், கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போனா சுலபமா இருக்கும்.” சுந்தரியின் பொருமல்கள் பெண்ணின் முன் விழலுக்கிறைத்த நீர்தான். சுகன்யா தாயின் முனகல்களை காதில் வாங்கிக் கொள்ளாமல், கள்ளக்குரலில் சினிமா பாடல்களை முனகியவாறு, மாடியில் நடை பழகுவாள் … தனிமையில் இன்பம் கண்டுக் கொண்டிருப்பாள்.

சுகன்யா தலையணையை இரண்டாக மடித்து, தலைக்கு கீழே, உயரமாக போட்டு வசதியாக சாய்ந்து கொண்டாள். சென்னையிலும், மாணிக்கத்தின் வீட்டு மாடியில் அவள் விருப்பத்துக்கேற்றவாறு இடம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அவளுக்கு. செல்வா வீட்டு மாடியில இப்படி ஒரு ரூம் இருக்கான்னு அவனை கேக்கணும்? அந்த ரூமை எங்களுக்குன்னு வெச்சுக்கணும். அடியே சுகன்யா, நீ இப்பவே பைத்தியம் மாதிரி என்னன்னமோ பகல் கனவு காணறே? மல்லிகா மனசுல என்ன ஓடிகிட்டு இருக்குன்னு யாருக்கும் தெரியலை.

செல்வாவை பார்த்துட்டு வந்த அப்பா,
“வெரி குட் செலக்ஷன்”ன்னு முதுகை தட்டிக்குடுத்து சிம்பிளா பேச்சை முடிச்சுட்டார். அம்மா கேட்டதுக்கு,
“எனக்கு ஒரு பெண் இருக்கா, அவளை உங்கப் பையனுக்கு பிடிச்சிருந்தா பாருங்கன்னு” சொன்னேங்கறார் – சுகன்யா என் பொண்ணுதான்னு ஒப்பனா நடராஜன் கிட்ட ஏன் சொல்லலை? ஏன் அப்பா இப்படி புதிரா பேசிட்டு வரணும்? இது மட்டும் சுகன்யாவுக்கு பிடிபடவில்லை.

கீழே ஹாலில் மாமா ரகுவிடம் அம்மா சத்தமாக பேசிக் கொண்டிருந்தாள். குரலில் மகிழ்ச்சியும், உல்லாசமும் கரைபுரண்டு கொண்டிருந்தது. முகம் சிவந்து பெருமிதத்தில் பளபளத்திருந்தது. கணவன், சென்னையில் தானாக திடீரென தன்னைப் பார்க்க வந்தது! மூவருமாக காஞ்சீபுரம் காமாட்சியம்மனைத் தரிசனம் பண்ணியது! ஆசை ஆசையாக தனக்கும், தன் பெண்ணுக்கும், பட்டுப் புடவைகள் வாங்கிக் கொடுத்து, மாமல்லபுரத்துக்கு அழைத்து சென்றது! தங்களுடன் குமார் விதவிதமாக போட்டோக்கள் எடுத்துக்கொண்டது! பெண்ணுடன் கடல் நீரில் குதித்து விளையாடியது என சுந்தரி தம்பியிடம் ஒன்று விடாமல் பெருமையடித்துக் கொண்டிருந்தாள்.

சுகன்யா, மல்லாந்து படுத்து வானத்தைப் பார்க்க ஆரம்பித்தாள். நிலவை ஏன் இன்னும் காணவில்லை? வானம் முழுவதும் எண்ணற்ற நட்சத்திரங்கள் சிறிதும் பெரிதுமாக அவளைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. நட்சத்திரத்தை எண்ணிக்கொண்டிருந்தான்னு கதையில எழுதறாங்களே உண்மையிலேயே எண்ணிப் பார்க்க முடியுமா? நட்சத்திரங்களை எண்ணியவர்கள் யாராவது இருக்கிறார்களா? மொத்தம் ஆகாசத்துல எத்தனை நட்சத்திரங்கள் இருக்குதுன்னு கணக்கு இருக்கா?

கூகூள்லதான் தேடிப் பாக்கணும். சுகன்யா நட்சத்திரங்களை ஒன்று, இரண்டு, மூன்று என்று நிதானமாக எண்ணத்தொடங்கினாள். முப்பது வினாடிகளுக்குள் பொறுமையிழந்து எண்ணுதலை நிறுத்தி என்னால இதெல்லாம் முடியாதென் மனதில் தன் இயலாமையை நோக்கி சிரித்துக்கொண்டாள் அவள்.

மொட்டை மாடியில் தனிமையில் படுத்து, குருட்டுத்தனமாக எதையாவது இப்படி யோசிச்சு, மனசுக்குள்ளே சிரித்து, விட்டேத்தியா நான் என்னுள் மூழ்கி எத்தனை நாளாச்சு? மனம் சிலந்தி வலையாக விரிந்து கொண்டிருந்தது. மனமெனும் சிலந்தி வலையில் அன்று சிக்கியவன் செல்வாவும் அவன் நினைவுகளும்தான். நினைவுகள். நினைவுகள். நினைவுகள். நினைவுகள் சுகமானவை. மனதில் மலரும் நினைவுகளை, சுவைச்சு, அசை போட்டு, மகிழறதுலதான் எத்தனை சுகம்.

என் மனசுல செல்வாவைப் பத்திய நெனப்புகளும் ஆசைகளும் கொஞ்ச நஞ்சமாவா இருக்கு? இந்த ஆசைகளெல்லாம் எப்ப கைகூடி வரும்? ஆசைகள், கனவுகளில் சட்டுன்னு நிறைவேறிடும். கனவுல அனுபவிக்கற சுகத்தை உடலும் அனுபவிக்குமா? சில சமயத்துல கனவுல நடக்கற நிகழ்ச்சிகளால் ஏற்படற சுகமோ, துக்கமோ, உடலும் அனுபவிக்கற மாதிரித்தான் இருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *