கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 19 7

புடிவாதம் என் பரம்பரை சொத்து. ரத்தம் சுண்டினாத்தான் எவனுக்கும் புத்தியே வரும். சிவதாணு மட்டும் இதுக்கு விதிவிலக்கா?

சிவ சிவா …

“அப்பா! என் கூட வந்து இருங்க”ன்னு, என் ஓடிப்போன புள்ளை திடீர்ன்னு திரும்பி வந்து, அப்பனையும், ஆத்தாளையும் தன் கூட கல்கத்தா, டெல்லின்னு இழுத்துக்கிட்டு போனான். பரதேசத்துல, என் மருமவளோட தம்பியை பாத்தேன். என்னோட மனசுல இருக்கறதைச் சொல்லி அவன்கிட்ட மன்னிப்பும் கேட்டேன். நீங்க பெரியவங்க இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு என் கையை பிடிச்சிக்கிட்டான். மரியாதை தெரிஞ்சவன். என் மருமகளையும் பேத்தியையும் பாக்கணும். நீதான்டா தம்பி அவங்களை என் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வரணும்ன்னு சொன்னேன். முயற்சி பண்றேன்னு சொன்னான்.

என் புடிவாதத்துல பாதியாவது என் மருமவளுக்கு இருக்காதா? கட்டினவனே என்னை விட்டுட்டு போயிட்டான். அவன் போனதுக்கு அப்புறம் நான் யார் வீட்டுக்குப்போய், யார்கிட்ட எந்த உரிமையில சொந்தம் கொண்டாடறதுன்னு கேட்டாளாம். அவ என் புள்ளையோட, என் வீட்டுக்கு வந்தப்ப உள்ளே வராதேன்னேன். அவ சொல்றதுலயும் ஞாயம் இருக்கே? அவ தம்பிதான் என்னப் பண்ணுவான்? இவ்வளவும் ஆனதுக்கு அப்புறம், நான் என்னா அவ கால்லேயே போய் விழமுடியும். அவ வைராக்கியம் அவளுக்கு பெரிசுன்னா, எனக்கு என் சுயகவுரவம்ன்னு ஒண்ணு இல்லையா?

சிவதாணு, என்னடா உன் சுயகவுரவம்? உன் சுயகவுரவம் அந்த பொண்ணோட வைராக்கியத்துக்கு முன்னாடி நிக்க முடியுமா? பதினைஞ்சு வருஷமா தனியா இருந்தாளே! சிவதாணு, உன் மருமவளை நான் அங்கனப் பாத்தேன்; உன் மருமவ அவன் கூட நின்னு சிரிச்சுக்கிட்டு இருந்தான்னு, நாக்கு மேல பல்லைப் போட்டு எவனவாது என் மருமவளை எப்பவாவது, தப்பா பேசி இருப்பானா? சிவ சிவா; நெருப்பு மாதிரிதானே வாழ்ந்துகிட்டு இருக்கா என் மருமவ!

“பாஷை தெரியாத ஊருல, பொழுது போவலை ரெண்டு பேருக்கும்; புள்ளையை தனியா விட்டுட்டு வர கிழவிக்கு இஷ்டமில்லே; எல்லாத்துக்கும் மேல குளிர் ஒத்துக்கலை அவளுக்கு. ஆறு மாசம் இங்கேயும், ஆறு மாசம் அங்கேயுமா அல்லாடறோம்.

என் பொண்டாட்டி, கிழவி கனகா, ஒரு பொங்கலுக்கு, நல்ல நாளும் அதுவுமா, எத்தனை வருஷம்தான் இப்படி தனியா நான் பொங்கிப் படையல் போடுவேன்? யாருக்குப் புண்ணியம் இந்த படையல்? நான் போய் மருமவளை கூப்பிடறேன்னா. அப்பவும் நான்தான் என் அகங்காரம் தலையில ஏறி இருக்க, அவளுக்கு சரியா பதில் சொல்லாம இருந்தேன். என் பேச்சை மீறி அவ என்னைக்கு என்ன காரியம்பண்ணி இருக்கா? சிவ சிவா; அன்னைக்கு அவளை போக விட்டிருக்கலாம்.

கனகா இப்ப சொல்றா; செப்பு சிலை மாதிரி, குத்து விளக்காட்டம், வீட்டுக்கு வந்த என் மருமவளையும், என் புள்ளையையும் வீட்டுக்குள்ள வரவிட்டீங்களா? பெரிசா ஜாதி கவுரவம் பாத்தீங்க; இந்த காரியத்துக்கு ஏழே ஏழு ஜென்மத்துக்கு, பேயாட்டாம் தனியாவே இருந்து நீ அனுபவிப்பேன்னு, எனக்கு சாபம் குடுக்கிறா?

அன்னைக்கு ஏண்டி உன் வாயைப் பொத்திக்கிட்டு இருந்தேன்னு கேட்டா, என்னைக்கு என்னை நீ பேசவிட்டேன்னு இப்ப இந்த வயசுல எங்கிட்ட குதிக்கிறா? உடம்பு வத்திப் போன இந்த வயசுல, இவ கூட என்னால சரிக்கு சமானமா குதிக்க முடியுமா?

வெரண்டாவுல, காத்தால எழுந்ததுலேருந்து கம்பியை புடிச்சுக்கிட்டு நிக்கறேன். கால் வலிச்சா, ஈஸிசேர்லே உக்காந்துக்கறேன். போகாத நேரத்தை எப்படியோ போக்கிக்கிட்டு, தனியா பேய் மாதிரி, தெருவை நோட்டம் விட்டுக்கிட்டு இருக்கேன். சிவ, சிவா … இன்னைக்கு என்ன காலங்காத்தாலயே அந்த குழந்தைங்க நினைப்பு என் மனசுக்குள்ள வந்து இப்படி பேய் ஆட்டம் ஆடுது?

தெரு வாசலில், காலை பூஜைக்காக, வெரண்டாவை ஒட்டிய மண் தரையில் பூ செடிகள்… முருங்கை மரத்தை சுற்றி படர்ந்திருந்த சங்கு புஷ்பம், கொடியில் நீலமும் வெள்ளையுமாக, மெல்லிய பனியாடையை போர்த்திக்கொண்டு மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தன.