எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 7 10

குறுக்கும் மறுக்குமாய் வாகனங்கள் வர.. அதற்குள் லாவகமாக புகுந்து ஓடியது பைக்.. அந்த பைக்கை விடாமல் துரத்தியது டாடா சுமோ..!! அவனுடைய இடுப்பை அவள் இறுக்கி பிடித்துக்கொள்ள.. சர்ரென சீறிப்பறந்த பைக் சென்றதுமே.. படக்கென விழுந்தது சிவப்பு சிக்னல்..!! ‘ச்சே..’ என்று வெறுப்பாக தொடையை தட்டிக் கொண்டார் அரசியல்வாதி அப்பா..!!

இருபுறமும் பச்சை பசேலென அடர்த்தியான மரங்களுடன்.. நேர்வகிட்டு கூந்தல் போல நீளமாய் கிடந்த.. அந்த அழகான ஆளரவமற்ற தார்ச்சாலையில்.. அவன் பைக்கை கவனமாக செலுத்திக் கொண்டிருக்க.. இவள் கைகள் இரண்டையும் அகலமாய் விரித்து.. அப்படியே ஆனந்தத்தில் திளைத்தாள்..!!

‘என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!’

குண்டும் குழியுமான கிராமத்து சாலையில் சென்றது பைக்..!! தலையில் தண்ணீர் குடம் சுமந்து.. சாலையோரமாக சென்று கொண்டிருந்தாள் கர்ப்பிணி பெண் ஒருத்தி.. அவளை கடக்கையில் பைக்கின் பின் சீட்டில் இருந்தவள் ‘ஹேய்..’ என்று கை நீட்டி கத்தினாள்..!! அந்த கர்ப்பிணி பெண்.. குடத்தை சாய்த்து தண்ணீரை சரிக்க.. இவர்கள் இருவரும் கைகளை ஒன்று சேர்த்து.. தண்ணீரை தாங்கி சேகரித்து குடித்தனர்..!! கையில் ஒட்டியிருந்த நீர்த்திவலைகளை அவன் அவளுடைய முகத்தில் உதற.. அவள் போலிக் கோபத்துடன் அவனை அழகாக முறைத்தாள்.. முஷ்டியை மடக்கி அவனுடைய முகத்தில் குத்தினாள்..!! அவன் விலகிக்கொள்ள.. அவளுடைய கை பைக் கண்ணாடியை குத்தியது.. அவள் வலியில் முகத்தை சுருக்க.. இவன் பதறிப் போனான்..!! அவளுடைய கையை மென்மையாக பற்றி.. முகத்தை அவளுடைய கைக்கருகே எடுத்து சென்று.. உதடுகள் குவித்து இதமாக காற்று ஊதினான்.. மெலிதாக முத்தமிட்டான்.. அவனுடைய கனிவை கண்டு.. அவள் காதலும் பெருமிதமும் பொங்குகிற மாதிரி.. அவனே அறியாத வகையில்.. அவனை ஒரு பார்வை பார்த்தாள்..!! கர்ப்பிணி பெண் டாட்டா காட்ட.. மீண்டும் சர்ரென சீறியது பைக்..!!

மஞ்சள் நிற வானுடன் மாலை நேரம்..!! மிதமான வேகத்தில் பைக் சென்றுகொண்டிருக்க.. அவனுடைய ஹெல்மட்டை தனது தலையில் கவிழ்த்திருந்த அவள்.. இமைகளை மூடி.. அவனுடைய இடுப்பை இறுக்கமாக கட்டிக்கொண்டு.. அவனுடைய முதுகில் முகம் சாய்த்து.. குழந்தையொன்று நிம்மதியாக உறங்குவது போல படுத்திருந்தாள்..!! அவன் தலையை மெல்ல சாய்த்து.. தனது இடுப்பை வளைத்திருந்த அவளுடைய கைகளை.. பெருமை பொங்கிட பார்த்தான்.. புன்னகைத்தான்..!!

‘என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!’

டாட்டா சுமோவின் கதவுகள் திறக்கப்பட்டு சாலையோரமாய் நின்றிருக்க.. தன் மகளுடைய புகைப்படத்தை காட்டி.. அந்த கர்ப்பிணி பெண்ணிடம் ஏதோ கேள்வி கேட்டார் அரசியல்வாதி அப்பா..!! அவள் ‘எனக்கு தெரியாது.. நான் பாக்கலை..’ என்பது போல தலையை அசைத்தாள்.. எரிச்சலான அப்பா கடுப்புடன் காரில் கிளம்ப.. கர்ப்பிணி பெண் இப்போது கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள்..!!

‘ச்ச்சோ’வென்று மழை கொட்டுகிற அந்தி சாயும் நேரம்..!! சாலையோர டீக்கடையின் தகரம் வேயப்பட்ட கூரைக்கு கீழே.. அவனுடைய ஜெர்கினுக்குள் அவளும் அவனும்.. நெருக்கமாக..!! ஆளுக்கொரு கையில் டீ க்ளாஸ் தாங்கி.. கூதலுக்கு நடுங்கியவாறே.. உதடுகள் படபடக்க தேனீர் உறிஞ்சினர்..!! பிறகு அவர்கள் இருவரும் அவுட் ஆஃப் போகஸில் தெரிய.. பளிச்சென்று பார்வைக்கு வந்தது.. மழையில் நனைந்து கொண்டிருந்த அந்த சிவப்பு நிற பைக்..!!

மழை நீர் நனைத்த மண் சேறாகி போயிருக்க.. அந்த சேறுக்குள் சிக்கி, மீள முடியாமல்.. சக்கரம் சுழற்ற திணறியது டாடா சுமோ..!! ‘தள்ளுங்கடா.. தள்ளுங்கடா..’ என்பது போல.. தனது அடியாட்களின் முதுகில்.. ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருந்தார் அந்த அரசியல்வாதி அப்பா..!!

‘என்னோடு வந்திடு எனதுயிரே.. என் வாழ்வை நிரப்பிடு எனதுறவே..!!’

சடசடவென மழை பெய்து கொண்டிருந்த அந்த சாலையில்.. விர்ரென பறந்தது அந்த சிவப்பு பைக்..!! பின் சீட்டில் அமர்ந்திருந்த அவள்.. தனது துப்பட்டாவை விரித்து பிடித்திருக்க.. அது காற்றில் தடதடத்தபடி.. பைக்குடன் சேர்ந்து பறந்தது..!! பைக் தூரமாய் செல்ல செல்ல.. மெல்ல மெல்ல பார்வைக்கு மங்கியது..!! திரையில் எழுத்துக்கள் பளிச்சிட்டன..!!

“காதலின் முடிவிலா பயணம்.. கவாஸாகியுடன்..!!!!”

பட்டென திரை இருண்டது. உடனே மோகன்ராஜ் தனது மணிக்கட்டை திருப்பி, நேரம் பார்த்தார். மெலிதாக புருவம் சுருக்கியவர், பிறகு தலையை நிமிர்த்தி சொன்னார்.

“Exactly thirty two seconds..!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *