எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 7 38

“ஹாய்.. நீங்கதான் கிஷோரா..?? அசோக் உங்களை பத்தி நெறைய சொல்லிருக்கான்..!! உங்களுக்கு ஃபோடாக்ராஃபில ரொம்ப இன்ரஸ்டாமே..??”

“ஹ்ம்ம்.. யெஸ்..!! அதெல்லாம் சொல்லிருக்கானா இவன்..??” கிஷோர் இளித்தான்.

“ம்ம்..!! காலேஜ் படிக்கிறப்போ.. லேடீஸ் ரெஸ்ட் ரூம் எப்படி இருக்கும்னு, போட்டோ எடுத்துட்டு வர்றதா ஃப்ரண்ட்ஸ்ட்ட பெட் கட்டி.. உள்ள ஏறி குதிச்சு.. அங்க எதிர்பாராத விதமா உங்க பிரின்ஸிபால் மேடத்தை மீட் பண்ணி.. கைல கேமராவோட கையும் களவுமா மாட்டிக்கிட்டு.. காலேஜ் மொத்தமும் உங்க மூஞ்சில காறி துப்புச்சாமே..??”

மீரா சிரிப்புடனே சொல்ல, கிஷோரின் முகம் பட்டென இருண்டது. பக்கவாட்டில் திரும்பி அசோக்கை முறைத்தான். அவனோ பாக்யராஜ் மாதிரி ஒரு அசட்டு பாவனையை வெளிப்படுத்தினான்.

“எவ்வளவு கேவலப்பட்டாலும் பரவாலன்னு.. இன்னும் அந்த கேமராவை விடாம, கெட்டியா பிடிச்சிருக்கீங்க பாத்திங்களா..?? ரியல்லி யு ஆர் க்ரேட்..!!” என்ற மீரா, வேணுவிடம் திரும்பி,

“நீங்க..??” என்றாள்.

“ஐ’ம் வேணு..!!” கிஷோருக்கு நேர்ந்ததை பார்த்து வேணுவிடம் அல்ரெடி ஒரு உதறல்.

“ஓ.. நீங்கதானா அது..?? வாவ்.. என்ன ஒரு மனவலிமை ஸார் உங்களுக்கு..?? அப்படி ஒரு சூழ்நிலைல கூட… ச்ச.. சான்ஸே இல்ல..!!”

“நீ..நீங்க எதை பத்தி சொல்றீங்க..?? எ..எனக்கு புரியல..!!”

“அதான் ஸார்.. நீங்க கோவா டூர் போயிருந்தப்போ.. லேடீஸ் மசாஜ் பார்லர்னு நாக்கை தொங்கப் போட்டுட்டு போய்.. கடைசில அவங்க எல்லாத்தையும் உருவிட்டு, உங்களை ஜட்டியோட விட்டுட்டு போயிட்டாங்களே.. அந்த இன்ட்ரஸ்டிங் இன்சிடண்ட் பத்தி சொல்லிட்டு இருக்குறேன்..!!”

இப்போது வேணு திரும்பி அசோக்கை முறைத்தான். அவன் வேணுவிடம் பார்வையாலே ‘ப்ளீஸ் மச்சி.. கொஞ்சம் பொறுத்துக்கோ..’ என்பது மாதிரி கெஞ்சினான்.

“கோவால.. கொட்டுற பனில.. இடுப்புல வெறும் ஜட்டியோட.. அஞ்சு கிலோமீட்டர் நடந்தே, ஹோட்டல்க்கு திரும்ப வந்து சேர்ந்திங்களாமே..?? வரே வா.. என்ன ஒரு அஞ்சா நெஞ்சு ஸார் உங்களுக்கு.. அப்படியே புல்லரிக்குது எனக்கு..!!”

அடுத்து என்ன நேரப் போகிறது என்று, சாலமனுக்கு இப்போது புரிந்து போனது. நைசாக அங்கிருந்து நழுவ முயன்றான். அதை கவனித்துவிட்ட மீரா, அவசரமாய் அவனை அழைத்தாள்.

“ஹலோ.. மிஸ்டர் சாலமன்.. எங்க ஓடுறீங்க.. வாங்க இங்க ..!!”

“அ..அது எப்படி..?? எல்லார்ட்டயும் ‘நீங்கதானா அது.. நீங்கதானா அது..’ன்னு கேட்டிங்க.. என்னை மட்டும் நான்தான் சாலமன்னு கரெக்டா கண்டுபுடிச்சுட்டிங்க..??”

“ஹலோ.. மிச்சம் இருக்குறது நீங்க மட்டுந்தான..?? நீங்க இவ்வளவு பெரிய அதிபுத்திசாலியா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல..!!”

“ஆ..ஆமால்ல.. ஸாரி..!!”

“ஆனா.. நீங்க ஒரு பயங்கர தைரியசாலின்னு எனக்கு நல்லா தெரியும்.. அசோக் சொல்லிருக்கான்..!!”

“ஓ..!! இஸ் இட்..?? அப்டிலாம் அவன் சொல்லிருக்க சான்ஸ் இல்லையே..??” சாலமன் இளித்தான்.

“சொன்னானே..?? நல்லா தண்ணியடிச்சுட்டு.. ஃபுல் மப்புல.. போலீஸ் ஜீப்பை நிறுத்தி லிஃப்ட் கேட்டு.. கான்ஸ்டபில் மடியிலயே படுத்து தூங்கி, போலீஸ் ஸ்டேஷன் வரை போய்.. நைட் ஃபுல்லா தங்கி இருந்து நல்லா வாங்கிட்டு வந்தீங்களாமே..??”

சாலமன் இப்போது திரும்பி முறைப்பான் என்று அசோக் அல்ரெடி உணர்ந்திருந்தான். நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவன் போல, எங்கேயோ பார்வையை திருப்பிக் கொண்டான்.

“அதுலயும்.. போலீஸ் ஜீப்ல கான்ஸ்டபில் மடியிலயே படுத்து தூங்கிட்டு போனீங்க பாத்திங்களா.. அந்த பார்ட்தான் வெயிட்டு.. ச்ச.. என்னா கெத்து ஸார்..??”

அசோக் மீராவிடம் நண்பர்களை பற்றி நல்லவிதமாக சொன்னதற்காக, நண்பர்களும் அன்று ஆபீஸ் திரும்பியபிறகு அவனை நல்லவிதமாய் கவனித்தனர்.

“அண்ணா.. கதவை தெறங்கண்ணா.. எங்களுக்கு பயமா இருக்குண்ணா.. ப்ளீஸ்ண்ணா..!!!”

என அசிஸ்டன்ட் பையன்கள் இருவரும், கதவை ‘படார் படார்’ என்று தட்டி அலறிக்கொண்டிருக்க, உள்ளே அசோக்கிற்கு அந்த மதிய நேரத்தில் மண்டல பூஜை நடந்து கொண்டிருந்தது.

அசோக் புரிந்து கொண்டது: இங்கே இருப்பதை அங்கே சொல்வது, இஞ்சூரியஸ் டூ ஹெல்த்.

நாள் – 21

அசோக்கும் மீராவும் ட்ரெயினில் சென்று கொண்டிருந்தார்கள். இருவரும் அடுத்தடுத்த சீட்டில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார்கள். மீராவுடைய தோளுடன் தனது தோள் அவ்வப்போது உரசுவதையும், அதில் எழுகிற புதுவித சுகத்தினையும், ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தான் அசோக். அப்போதுதான் அவனுடைய கன்னத்தில் சப்பென்று அறை விழுந்தது. அறைந்தது வேறு யாருமல்ல.. மீராதான்..!!

“என்ன மீரா..??” கன்னத்தை தடவிக் கொண்டே அசோக் கேட்டான்.

“பெரியவங்க நிக்கிறாங்கள்ல..?? எந்திரிச்சு எடம் குடு..!!” மீரா சீற்றமாக சொன்னாள்.

அப்புறம் கிண்டி வரும் வரைக்கும், அந்த தாத்தா மீராவினருகில் அமர்ந்து கடலை போட்டுக்கொண்டே வர, இவன் கம்பியை பற்றியவாறே கடுப்புடன் அந்த காட்சியை பார்த்துக் கொண்டு வந்தான்.

நாள் – 23

போத்தீஸில் ஷாப்பிங்கையும்.. சரவணபவனில் சாப்பாட்டையும் முடித்துகொண்டு.. அசோக்கும் மீராவும் சௌத் உஸ்மான் சாலையில் நடை போட்டுக் கொண்டிருந்தனர்..!! அவர்களுக்கு சற்று முன்பாக.. தலையில் ஒரு பெரிய கூடையுடன் நடந்து சென்று கொண்டிருந்தாள்.. கர்ப்பிணி பெண் ஒருத்தி..!! மீராவின் கண்களில் அந்தப் பெண் பட்டதுதான் தாமதம்.. அவசரமாக அவளிடம் ஓடிச் சென்றாள்..!!