எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 12

ஒரு ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அவனுடைய செல்போன் அலறியது. உடனே அசோக் பரபரப்பாக எழுந்தான். ‘மீராவாகத்தான் இருக்கவேண்டும்..’ என்று எண்ணியவன், சந்தோஷமும் பதற்றமுமாய் செல்போனை எட்டி எடுத்தான். டிஸ்ப்ளே பார்த்ததும் ஏமாற்றமும், குழப்பமுமாய் நெற்றி சுருக்கினான். வேறு ஏதோ புதிய எண்ணிலிருந்து கால்..!! ‘யாராக இருக்கும்.. இந்த நேரத்தில்..??’ என்று ஒருகணம் யோசித்தவன், பிறகு கால் பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டான்.

“ஹலோ..!!” என்றான்.

“ஹலோ.. யாருங்க நீங்க..??” – அடுத்த முனையில் ஒரு தடித்த ஆண்குரல்.

“என்னங்க இது.. எனக்கு கால் பண்ணிட்டு என்னையே யார்னு கேக்குறீங்க..?? மொதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க..!!”

“என் பேரு வாசு..!! உங்க நம்பர்ல இருந்து 98414 16***-ன்ற நம்பருக்கு.. ஒரு ஆறு மிஸ்ட் கால் வந்திருக்கு.. அதான் நீங்க யார்னு..”

அந்த ஆள் கேட்க, அசோக்கின் உடம்பில் உடனடியாய் ஒரு உதறல்..!! ‘ஒருவேளை மீராவின் அப்பாவாக இருக்குமோ..?? ஐயையோ.. இப்போது எப்படி பேசி சமாளிப்பது..??’

“ஓ.. அ..அதுவா.. அ..அது.. மீ..மீ..மீராவோட நம்பர்ல…” அசோக் தடுமாறினான்.

“ஆமாம்..!!!! நான் அவளோட புருஷன்தான் பேசுறேன்.. என் பொண்டாட்டிக்கு இந்த நேரத்துல எதுக்கு நீ கால் பண்ணுனன்னு தெரிஞ்சுக்கலாமா..??” அசோக் இப்போது பக்கென அதிர்ந்து போனான்.

“எ..என்னது..??? பொண்டாட்டியா…???” காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் கத்தினான்.

“ப்ச்.. ஆமாண்டா…!!! யார்டா நீ..??? உனக்கு எப்படி இந்த நம்பர் கெடைச்சது..??” அசோக்கின் தடுமாற்றத்தை உணர்ந்து அந்த ஆள் மரியாதையை வெகுவாக குறைத்துக் கொண்டான்.

“அ..அது.. அ..அவங்கதான் குடுத்தாங்க..”

“ஓஹோ..?? அவளே குடுத்தாளா..?? ம்ம்.. எத்தனை நாளா உங்களுக்குள்ள பழக்கம்..??”

“இ..இப்போதான்.. கொ..கொஞ்ச நாளா..”

“ம்ம்.. நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு..!! எங்கல்லாம் ஊர் சுத்திருக்கீங்க ரெண்டு பேரும் .. எனக்கு தெரியாம என்னல்லாம் செஞ்சிருக்கீங்க..?? ம்ம்..?? கேக்குறேன்ல.. சொல்லுடா..!!!!” வாசு ஆத்திரமாய் கத்த, அசோக் மிரண்டு போனான்.

“ஐயோ ஸார்.. எ..எனக்குலாம் எதுவும் தெரியாது.. அவங்களுக்கு கல்யாணம் ஆனது கூட எனக்கு தெரியாது.. அ..அவங்கதான் என்னை ரொம்ப நாளா சைட் அடிச்சேன்.. காதலிக்கிறேன்லாம் சொன்னாங்க..”

“ஓ.. காதலிக்கிறேன்னு சொன்னாளா அந்த கருவா சிறுக்கி..?? வச்சுக்குறேன் அவளை..!! சரி.. உன் பேர் அட்ரஸ் சொல்லு.. உன்னை நான் நேர்ல பாக்கணும்..!!”

“இ..இங்க பாருங்க ஸார்.. நீங்க நெனைக்கிற மாதிரி தப்பா எதுவும் நடக்கல..!!”

“தப்பா சரியான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்டா.. நீ உன் அட்ரஸ் குடு..!!” வாசுவின் குரலில் உக்கிரம் ஏறியிருக்க, அதற்கு மேலும் பேச்சை தொடர அசோக்கிற்கு விருப்பம் இல்லை.

“ஸார்.. நான்தான் என்மேல தப்பு எதுவும் இல்லன்னு சொல்றேன்ல.. எதுவா இருந்தாலும் உங்க வொய்ஃப்ட்டயே கேட்டுக்கங்க.. என்னை ஆளை விடுங்க..!!”

அவசரமாய் சொல்லிவிட்டு அசோக் காலை கட் செய்தான். உடனே வாசுவின் எண்ணிலிருந்து இவனுக்கு மீண்டும் கால் வர, அதை பிக்கப் செய்யாமல் தவிர்த்தான். செல்ஃபோன் ஒரு அரை நிமிடம் அலறிவிட்டு அமைதியானது. அது அமைதியாகி நெடுநேரம் ஆகியும் அசோக்குடைய இதயத்தில் ஏறியிருந்த படபடப்பு மட்டும் அடங்கவில்லை. கொஞ்ச நேரத்திற்கு எதுவுமே புரியவில்லை அவனுக்கு..!!

‘மீராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதா..?? அப்புறம் ஏன் அதை என்னிடம் மறைத்தாள்..?? ச்சே.. எப்படி எல்லாம் பேசி என்னை ஏமாற்றிவிட்டாள்..?? நானும் தேவையற்ற கற்பனைகளை எல்லாம் மனதில் வளர்த்துக் கொண்டேனே..??’ என்று ஆரம்பத்தில் நினைத்தவனுக்கு திடீரென ஒருவிஷயம் புத்தியில் பளிச்சிட்டது. ‘வெயிட்.. வெயிட்.. அந்த ஆள் கருவா சிறுக்கி என்றானே.. மீராவின் கலருக்கும் அந்த கமென்ட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லையே..?? ஒருவேளை இப்படி இருக்குமோ.. நான் கால் செய்தது மீராவின் நம்பரே இல்லையோ..?? ராங் காலா அது..?? இல்லையே.. நான் மீரா என்றதுமே ‘நான் அவளோட புருஷன்’ என்றானே அந்த வாசு..?? ஒருவேளை இது வேறொரு மீராவாக இருக்குமோ..?? ஒன்றும் புரியவில்லையே..??’

அசோக்கின் மனதில் பலப்பல குழப்பமான கேள்விகள்..!! மீரா தனக்கானவள் என்று முடிவே செய்துவிட்ட அவன் மனது, அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை நம்ப மறுத்தது. ‘இது.. வேறு ஏதோ மீராவாக இருக்க வேண்டும்.. வேறு ஏதோ மீராவாக இருக்க வேண்டும்..’ என்று திரும்ப திரும்ப சொல்லி தன் மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். படுக்கையில் வீழ்ந்தவன் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்.

அவனுடைய வேண்டுதல் கடவுள் காதில் விழுந்தது போல, நள்ளிரவில் அவனுடைய நம்பருக்கு அந்த கால் வந்தது. மீரா என்று அவன் சேகரித்து வைத்திருந்த நம்பரில் இருந்து..!! ஒருவித குழப்பத்துடனே கால் பிக்கப் செய்து பேசினான்.

“ஹலோ..!!” என்றான் மெலிதான பதற்றத்துடனே.

அவ்வளவுதான்..!! அடுத்த முனையில் ஒரு கர்ண கொடூரமான பெண்குரல் படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தது. அந்தக் குரலை கேட்ட அடுத்த நொடியே, அது தன்னுடைய மீரா இல்லை என்று அசோக்கிற்கு புரிந்து போனது. ஆனால் அதற்காக சந்தோஷப் பட முடியாமல், அந்தப்பெண் வண்டை வண்டையாக அசோக்கை வறுத்தெடுத்தாள்.

1 Comment

Add a Comment
  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *