எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 41

“நீ தேவை இல்லாம மனசை போட்டு கொழப்பிக்காம.. அவகூட பேசு..!! அவ மனசுல என்ன இருக்குன்னு தெளிவா கேட்டு புரிஞ்சுக்கோ..!!”

பாரதி இதமான குரலில் சொல்லிவிட்டு அமைதியானாள். அசோக்கின் மனதிலும் இப்போது குழப்பம் நீங்கி ஒருவித நிம்மதி பரவியது. அந்த நிம்மதியுடன் சேர்ந்து புதுவித ஆசையும் இப்போது அவனது மனதுக்குள் முளைத்தது. ‘மீராவுக்கு இப்போது ஃபோன் செய்து பேசினால் என்ன..??’ என்ற ஆசை. அந்த ஆசைவந்ததுமே அசோக்கின் இதயத்தில் ஒரு படபடப்பு ஏற ஆரம்பித்தது. உடனே அவளுடைய குரலை கேட்க வேண்டும் என்றொரு உந்துதல் உள்ளத்துக்குள் உருவாகியது. தலை கோதி விட்டுக்கொண்டிருக்கிற அம்மாவை, மெல்லிய குரலில் அழைத்தான்.

“மம்மி…!!”

“ம்ம்…??”

“உ..உனக்கு தூக்கம் வரலையா..??”

“இல்ல.. ஏன் கேக்குற..??”

“பதினோரு மணியாக போகுதே..??”

“பரவாலடா.. படுத்துக்கோ.. நீ தூங்குனப்புறம் மம்மி போறேன்..!!”

“இ..இல்ல மம்மி.. நான் தூங்கிக்கிறேன்.. நீ கெளம்பு.. டாடி வெயிட் பண்ணிட்டு இருக்க போறாரு..!!”

“ஹாஹா.. அவர்லாம் அப்போவே தூங்கிட்டாரு.. நீ படுத்துக்கோ..!!”

“ஐயோ.. நான்தான் தூங்கிக்கிறேன்னு சொல்றேன்ல.. நீ கெளம்பு.. உன் ரூமுக்கு போ..!!”

மகனுடைய குரலில் தொணித்த எரிச்சலை உணர்ந்த பாரதி, இப்போது அவனை வித்தியாசமாக பார்த்தாள். எப்போதும் ‘நான் தூங்கும்வரை இருந்துவிட்டு செல்’ என்று ஏக்கமாய் சொல்கிறவன், இன்று ‘போ.. போ..’ என்று விரட்டுகிறானே..?? குழப்பத்துடனே அசோக்கின் முகத்தை வியப்பாக பார்த்தாள். ஓரிரு விநாடிகள்தான். மகனுடைய கண்களில் தெரிந்த கள்ளத்தனத்தை கண்டுகொண்டதும், காரணம் புரிந்து போனது பாரதிக்கு. உடனே அவனுடைய காதை பிடித்து திருகியவள், ஒரு போலிக்கோபத்துடன் சொன்னாள்.

“திருட்டுப்பயலே.. ‘என் ஆளோட பேசப்போறேன், எந்திரிச்சு போ’ன்னா.. போயிட்டு போறேன்.. அதுக்கு ஏன்டா என்னன்னவோ சொல்ற..??”

“ஐயையோ.. அ..அதெல்லாம் ஒன்னுல்ல மம்மி.. நான் ஒன்னும் இப்போ அவகூட பேசப்போறது இல்ல.. நா..நாளைக்கு பேசிக்கிறேன்..!!”

“ம்ம்.. ம்ம்.. தெரியும் தெரியும்.. நடிக்காத..!! சரி.. நான் கெளம்புறேன்.. எவ்வளவு நேரம் வேணா நீ பேசிக்கோ..!!”

சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க, இப்போது அசோக் பதில் ஏதும் சொல்லாமல் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டான். பாரதி அவனுடைய அறையை விட்டு வெளியேறினாள். அசோக் அதன்பிறகும் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் படுக்கையிலேயே அமர்ந்திருந்தான். அப்புறம் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து பார்த்தான். எல்லோரும் அவரவர் அறைகளில் அடைந்து விட்டார்களா என்று, அப்படியும் இப்படியுமாய் பார்வையை வீசி உறுதி செய்து கொண்டான். திருப்தியானவன், மீண்டும் தன் அறைக்குள் வந்து தாழிட்டுக் கொண்டான். வேறொன்றும் இல்லை.. அவன் தனது காதலியுடன் பேசுவதை வேறு யாராவது ஒட்டுக் கேட்டு, அவனை கேலி செய்துவிட்டால்..??

மெத்தையில் விழுந்தவன், தனது செல்போனை எட்டி எடுத்தான். மீரா தந்த எண்ணுக்கு டயல் செய்தான். தொண்டையை ஒருமுறை செருமியவன், செல்போனை காதில் வைத்துக்கொண்டான். அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்படுவதற்காக, ஒருவித படபடப்புடன் காத்திருந்தான்.

“கிர்ர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்ர்…”

ரிங் சென்று கொண்டே இருந்தது. சிலவினாடிகள். பிறகு யாராலும் பிக்கப் செய்யப்படாமலே கட் ஆனது. அசோக்கிற்கு சற்றே ஏமாற்றமாக இருந்தது. மீண்டும் முயன்றான். மீண்டும் அதே ரிசல்ட்..!! மீண்டும்.. மீண்டும்.. மீண்டும்..!! ஒரு ஐந்தாறு முறை முயன்றவன், பிறகு அலுத்துப்போனான். ‘ச்சே…’ என்று எரிச்சலாக, செல்போனை மெத்தையின் ஓரமாக விட்டெறிந்தான். ‘ப்ச்.. என்னது இது.. மொத மொத பேசணும்னு நெனைக்கிறப்போ.. இப்படி ஆயிடுச்சு..’ என்று சலிப்பை உதிர்த்தான். அப்படியே படுக்கையில் சாய்ந்து புரண்டு படுத்துக் கொண்டான். கண்கள் மூடி சிறிது நேரம் அமைதியாக கிடந்தான்.

1 Comment

  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Comments are closed.