எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 11

தன் குடும்பத்தினரிடம் இருந்து, அத்தகைய வரவேற்பை அசோக் எதிர்பார்த்திருக்கவில்லை.. திணறிப் போனான்..!! ஏற்கனவே அந்த மீரா தனது காதலை சொல்லிச் சென்றவிதத்தில், அவனுடைய மனம் ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.. இதில் இவர்கள் வேறு ஆளாளுக்கு கலாட்டா செய்ய.. செய்வதறியாது திருதிருவென விழித்தான்..!! அவனுடன் எப்போதும் சண்டை போடுகிற சங்கீதா கூட.. அன்று அண்ணனின் காதல் கணிந்துவிட்டதென மிக சந்தோஷத்தில் இருந்தாள்..!! அசோக்கை பார்த்து கண்சிமிட்டியவாறே, தனது இனிய குரலால் பாடினாள்..!!

“பெண்கள் பின்னால் சுற்றாமல்.. பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ ஓ ஓ ஓ.. அவனே காதல் மன்னன்… காதல் மன்னன்.. காதல் மன்னன்..!!”

ஆட்காட்டி விரலை அண்ணனை நோக்கி நீட்டி.. அதை அப்படியும் இப்படியுமாய் சுழற்றி சுழற்றி, அவள் அவ்வாறு பாட.. அசோக் அவனுடைய மனக்குழப்பத்தையும் மறந்து, மெலிதாக புன்னகைத்தான்..!!

“ப்ச்.. சும்மா இரு சங்கு..!!” என்று அழகாக வெட்கப்பட்டான். உடனே சங்கீதா

“அழுக்கு சட்டை போட்டாலும்..” என்று அடுத்த லைனை கிண்டலான குரலில் ஆரம்பிக்கவும், வெடுக்கென தங்கையை முறைத்தான்.

“போதும்..!!!! நிறுத்து..!!!!” என்று கடுப்பாக சொன்னான்.

“ஹாஹாஹாஹா…!!! ம்ம்ம்ம்…. எப்படிடா இப்படிலாம்.. ஃபஸ்ர்ட் பால்’லயே சிக்ஸரு.. ம்ம்..?? ஃபஸ்ர்ட் நாள் பேசுனதுமே ஒரு பொண்ணை ஐ லவ் யூ சொல்ல வச்சுட்ட.. அதுவும் பத்தே நிமிஷம் பேசுனதுல..?? உன்னை இதயம் முரளின்ல நான் இவ்வளவு நாளா நெனச்சுட்டு இருந்தேன்.. இப்படி கில்ல்ல்லி மாதிரி சொல்லி அடிச்சுட்டியடா அண்ணா..?? ச்ச.. சான்ஸே இல்லடா..!!” அசோக்கை கலாய்க்கிற குரலிலேயே பாராட்டினாள் சங்கீதா.

“ம்ம்ம்.. அம்மா உனக்காகவே ஆசையா.. ஸ்பெஷலா செஞ்சது அசோக்..!! ஆ…. வாயை தெற..” கையில் இனிப்பு கிண்ணத்துடன் வந்திருந்தாள் பாரதி.

“எ..என்ன மம்மி இ..” அசோக் கேட்டு முடிப்பதற்கு முன்பே,

“ஷாஹி துக்ரான்னு ஒரு மொகலாய் ஸ்வீட்டுடா.. நல்லாருக்கும், சாப்பிட்டு பாரு..!!” சுண்டக் காய்ச்சிய பாலில் ஊறிப்போன அந்த இனிப்புத்துண்டை அவன் வாயில் திணித்தாள்.

“அசோக்-மீரா..!! பேர்ப்பொருத்தம் பிரம்மாதமா இருக்குன்னு.. வல்லக்கோட்டை ஜோஸியரே சொல்லிட்டாரு..!!” – பாட்டி தன் பங்குக்கு சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.

வெறும் சந்தோஷம் என்ற ஒரு வார்த்தையில் சாதாரணமாக அந்த உணர்வை விளக்கி விட முடியாது..!! குடும்பத்தில் எஞ்சியிருந்த இருந்த ஒருவனும்.. இன்று காதல் இனத்தில் கலந்துவிட்டான்.. இப்போதுதான் இவன் நம் வீட்டுப்பிள்ளை.. என்பது மாதிரியான ஒருவித பெருமிதமும் நிம்மதியும் கலந்த பெருமகிழ்ச்சி எல்லோருக்கும்..!!

“இப்போத்தான் இதுக்குப்பேரு ஸ்மார்ட் ஃபோன்.. இதுக்கு முன்னாடி வேஸ்ட் ஃபோன்..!!” – மகனுடைய செல்ஃபோனில் புதிதாக சேர்ந்திருந்த மீரா என்ற பெண்ணுக்கான எண்ணை, கட்டை விரலால் தடவியபடியே பெருமையாக பார்த்தார் மணிபாரதி.

“ஹ்ம்ம்.. இந்தக்காலத்து புள்ளைகள்லாம் ரொம்ப கொடுத்து வச்சதுங்க..!! அந்தக்காலத்துல உன் பாட்டி கூட நான் பேசணும்னா.. அவ ஊர்ல அய்யனாருக்கு பொங்கல் வைக்கணும்.. இல்லனா அரண்மனைக்காரருக்கு போர் அடிக்கணும்.. அப்போத்தான் அரசுகொடிப்பாளையம் எல்லைக்குள்ளயே என்னால நொழைய முடியும்..!! அப்புறம் ஆர்மோனியக்காரரு எப்போடா மங்களம் பாடுவாருன்னு.. ராமுழுக்க பல்லை கடிச்சுட்டு காத்திருக்கணும்..!! அதுவும் அதிகாலைல.. அந்த இருட்டுக்குள்ள நின்னுக்கிட்டு.. அஞ்சு நிமிஷம் உன் பாட்டி கூட பேச முடிஞ்சதுன்னா பெரிய விஷயம் அசோக்கு..!! ஹ்ம்ம்.. இப்போலாம் அப்படியா இருக்கு… இந்தப்பக்கம் நம்பரை அடிச்சமுனா, அந்தப்பக்கம் நம்மாளு கொரலு கேக்குது..!!” எண்கள் கிறுக்கப்பட்டிருந்த பேரனின் உள்ளங்கையை தடவியவாறே, தாத்தா சொன்னவிதத்தில் பெருமிதத்துடன் சின்ன பொறாமையும் கலந்திருந்தது.

“வடபழனி போய் முருகனை பாத்துட்டு வந்தேன்டா கண்ணா.. உங்க காதல், எந்த சிக்கலும் இல்லாம கல்யாணத்துல முடியனும்னு.. உங்க ரெண்டு பேர் பேர்லயும் அர்ச்சனை செஞ்சேன்..!!” காகித மடிப்பு திறந்து, கட்டை விரலால் விபூதி தொட்டு, அசோக்கின் நெற்றியில் கோடிட்டாள் பாரதி.

இப்படி ஆளாளுக்கு ஆனந்தத்தில் திளைத்தது, அசோக்கின் மனதில் இருந்த அழுத்தத்தை அதிகரிக்கவே செய்தது. அந்தப்பெண் என்னடாவென்றால், ‘ஐ லவ் யூ’ சொல்லிவிட்டு, அடுத்த நொடியே ‘பில் பே பண்ணு’ என்கிறாள். இவர்களோ குடும்பத்திற்கு இருந்த பெரிய சாபக்கேடு நீங்கிப்போன மாதிரி, குதுகலத்தில் திளைக்கிறார்கள். அவர்களுடைய சந்தோஷம் சற்று அதிகப்படியானதாகவே தோன்றியது அசோக்கிற்கு..!!

1 Comment

Add a Comment
  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *