எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 5 43

“நவ்.. பே த பில்..!!!!”

சொல்லிவிட்டு ஒருநொடி கூட அவள் தாமதிக்கவில்லை. படக்கென சேரில் இருந்து எழுந்தாள். விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அசோக் சிலவினாடிகள் செயலிழந்து போய் அமர்ந்திருந்தான். பிறகு சட்டென சுதாரித்துக்கொண்டு எழுந்தான். தூரத்தில் சென்ற அவளுடைய முதுகைப் பார்த்து கத்தினான்.

“ஹேய்..!!!!!”

அதற்குள்ளாகவே அவனுடைய நண்பர்கள் அவர்களுடைய இடத்தை விட்டு எழுந்து வந்திருந்தனர். அவசரமாய் வந்து இவனை சூழ்ந்து கொண்டனர். ஆர்வம் மிகுந்த குரலில், ஆளாளுக்கு இவனைப்போட்டு பிய்த்து எடுத்தனர்.

“டேய்.. மச்சி.. என்னாச்சுடா..?? பேசுனியா.. என்ன சொன்னா அவ..?? ஹேய்.. சொல்லுடா..!!”

அசோக் சில வினாடிகள் மீரா செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் மனதில் பலப்பல கேள்விகளுடனே, மெல்ல நண்பர்களிடம் திரும்பினான்.

“ஏய்.. சொல்லு மச்சி.. கேட்டுட்டு இருக்கோம்ல..?? என்ன சொல்லிட்டு போறா அவ..??” சாலமன்தான் மிகவும் ஆர்வமாக இருந்தான்.

“ஐ லவ் யூ’ன்னு சொல்லிட்டு போறடா.. அவ ஃபோன் நம்பர் குடுத்துட்டு போயிருக்கா..!!”
அசோக் கேஷுவலாக சொன்னவாறே தனது உள்ளங்கையை விரித்து காட்டினான்.

அவ்வளவுதான்..!! அவர்கள் மூவரும் வாழ்நாளில் மிகவும் மோசமான ஒரு அதிர்ச்சியை மொத்தமாக உள்வாங்கினர்..!! பின்னந்தலையில் யாரோ இரும்புத்தடியால் அடித்துவிட்டது போல.. சித்தம் கலங்கிப்போய்.. சீயான் பார்வை ஒன்றை வீசியவாறு நின்றிருந்தான் வேணு..!! ‘பேசுனதுமே ஐ லவ் யூ சொல்லிருக்கா.. பேசாம நாம போட்டியில கலந்திருக்கலாமோ..??’ என்று.. கேத்தரினாவை கூட மறந்து போய்.. கேவலமாய் ஒரு எண்ணத்தில் திளைத்திருந்தான் சாலமன்..!! கிஷோரின் நிலைதான் மிகவும் பரிதாபகரம்.. அவனுடைய மூளைக்குள்.. தங்லீஷில் யாரோ தாறுமாறாய் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள்..!!

‘தி ஸோர்ஸ் ஆஃப் கீ இஸ்.. கேப்பை..!!’

‘டிரைவர் ஆஃப் திஸ் ஏரோப்ளான் இஸ்.. எருமை..!!’

‘பேர்ட் தேட் கேன் ஃப்ளை பேக்வேர்ட்ஸ் இஸ்.. காக்கை.!!’

மூன்று பேருமே மூன்றாம் பிறை கமலஹாசன் மாதிரி.. அசோக்கையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருக்க.. சாலமன்தான் முதலில் அந்த நிலையை விட்டு சுதாரித்துக் கொண்டான்..!! தன் தலையில் ‘நச்ச்ச்’சென்று அடித்தவாறே வெறுப்புடன் சொன்னான்..!!

“என்ன க்க்கொடுமை ஸார் இது..???”

அன்று மாலை அசோக்கின் வீட்டில்.. அவனுக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது..!! மலர் மாலை அணிவித்து.. மங்கள ஆரத்தி எடுக்காத குறைதான்..!! பந்தயம், பரிட்டோ, செருப்பு, முறைப்பு என.. சில சிக்கலான விஷயங்களை மட்டும் தவிர்த்துவிட்டு, மீதி விஷயங்களை எல்லாம்.. ஒன்றுவிடாமல் அசோக்கின் குடும்பத்துக்கு ஒலிபரப்பு செய்திருந்தது.. தி கிரேட் கிஷோர் FM..!! ‘அசோக் ஒருபெண்ணை பலநாட்களாக பார்வையாலேயே காதலித்தான்.. இன்று பத்தே நிமிடம் அவளிடம் பேசி.. பதிலுக்கு அவளையும் ஐ லவ் யூ சொல்ல வைத்துவிட்டான்..’ என்ற அளவில்தான் செய்தி ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்தது..!!

விஷயம் கேள்விப்பட்டதில் இருந்தே.. வீட்டில் அனைவருக்குமே அப்படி ஒரு சந்தோஷம்.. குதுகலம்.. மகிழ்ச்சி..!! அனைவரது முகத்திலுமே அப்படி ஒரு பூரிப்பு.. சிரிப்பு.. மலர்ச்சி..!! பொசுபொசுவென, வெள்ளை வெளேரென இருக்கும் பொமெரேனியன்கள் இரண்டும் கூட.. வாசலில் போடப்பட்டிருந்த ரங்கோலியில் புரண்டு எழுந்து.. அன்று கலர்ஃபுல்லாய் காட்சியளித்தன..!! அசோக் வீட்டிற்குள் நுழைந்ததுமே ஓடிச்சென்று.. அவனுடைய காலை சுற்றி சுற்றி வந்து.. முகர்ந்து முகர்ந்து பார்த்தன..!! அனைவருமே அவசரமாய் சென்று அசோக்கை சூழ்ந்து கொண்டனர்.. அன்புடன் கட்டிக்கொண்டனர்.. கைகுலுக்கினர்.. ‘கலக்கிட்டடா’ என்று கன்னம் கிள்ளினர்..!!

1 Comment

  1. Very interesting love storie,

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Comments are closed.