கண்ணாமூச்சி 165

“உன்னை எப்படியாவது கல்யாணம் செய்துக்கணும்னு எனக்கு ஆசை குறிஞ்சி..!! அப்பாவை சமாதானம் செய்து சம்மதிக்க வைக்க முடியும்னு நெனைச்சேன்.. கடைசில சண்டை போட வேண்டியாதா போயிடுச்சு..!! அப்பா இந்த மாதிரி செய்வார்னு..”

தீர்த்தபதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குறிஞ்சி சரக்கென முகத்தை திருப்பி அவனை பார்த்தாள்.. அவனுடைய கண்களை தனது கண்களால் கூர்மையாக சந்தித்தவாறே இறுக்கமான குரலில் சொன்னாள்..!!

“வேற என்ன செய்வார்னு எதிர்பார்த்திங்க..?? உங்க அப்பாவை பத்தி உங்களை விட எனக்கு நல்லா தெரியும்..!!” என்றவள் சற்றே நிறுத்தி,

“புரியுதா..??” என்று அழுத்தமாக கேட்டாள்.

வார்த்தைகளில் வெளிப்படாத ஒருவகை அர்த்தம்.. குறிஞ்சியின் அந்த கூர்மையான பார்வையில் வெளிப்பட்டது..!! தீர்த்தபதியாலும் அந்த அர்த்தத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.. அவனையும் அறியாமல் அவனது தலை கவிழ்ந்துகொண்டது.. இப்போது சற்றே கம்மலான குரலில் சொன்னான்..!!

22

“மன்னிச்சுடு குறிஞ்சி.. இப்படி ஆகும்னு நான் எதிர்பாக்கல..!!”

“ப்ச்.. தப்பு பண்ணிட்டிங்க.. பெரிய தப்பு பண்ணிட்டிங்க..!!”

சலிப்பாக சொன்ன குறிஞ்சி, அந்த தகரப்பெட்டியில் தொடர்ந்து எதையோ தேடினாள்.. பிறகு மரத்தாலான அந்த சிறிய பெட்டியை உள்ளிருந்து வெளியே எடுத்தாள்.. சிறுக சிறுக சேர்த்த சில நகைகள் அடங்கிய பெட்டி..!! பச்சை நிறத்தாலான ஒரு துணியை கட்டிலில் விரித்து, அதன் மையமாக அந்த பெட்டியை வைத்தாள்.. கூரையில் தொங்கிய பானைக்குள் கைவிட்டு பணமுடிப்பை வெளியே எடுத்தாள்.. கொடியில் தொங்கிய சில உடைகளை அள்ளிக்கொண்டாள்..!! அவ்வளவையும் அந்த பச்சைத்துணியால் சுற்றி சிறு மூட்டையாக்கினாள்.. முதுகுக்கு குறுக்காக அந்த மூட்டையை அணிந்துகொண்டாள்..!!

“இந்தா.. இதையும் வச்சுக்கோ..!!”

அணிந்திருந்த பொன் நகைகளை கழற்றியிருந்த தீர்த்தபதி.. அவற்றை உள்ளங்கையில் வைத்து குறிஞ்சியிடம் நீட்டினான்..!! அவனை கூர்மையாக ஏறிட்ட குறிஞ்சி.. தலையை மெலிதாக அசைத்து ‘வேண்டாம்’ என்று மறுத்தாள்..!! அவன் மீதிருந்த பார்வையை விலக்காமலே.. அலமாரியில் இருந்து அந்த குறுவாளை எடுத்து தன் இடுப்பில் செருகிக் கொண்டாள்..!! ‘உன்னால் எனக்கு எத்தனை இடர்பாடுகள் பார்..’ என்பது மாதிரி இருந்தது அவள் தீர்த்தபதியை பார்த்த பார்வை..!!

“நேரம் ஆயிட்டு இருக்கு குறிஞ்சி.. எந்த நேரமும் அவங்க இங்க வரலாம்.. நீ சீக்கிரம் புறப்படு..!!”

தீர்த்தபதி சொல்ல, குறிஞ்சி நீளமாக ஒரு பெருமூச்சினை வெளிப்படுத்தினாள்.. சாளரத்தின் வெளியே சடசடத்த மழையை ஒருமுறை திரும்பி பார்த்தாள்.. கட்டிலில் கிடந்த அந்த சிவப்பு நிற அங்கியை கையில் எடுத்தாள்.. தனது உடலை முழுதும் போர்த்தும்படியாக தலையை சுற்றி அணிந்து கொண்டாள்.. கழுத்துப் பகுதியில் இருபுறமும் தொங்கிய நாடாக்களை சரக்கென இழுத்து முடிச்சிட்டாள்.. அவசரமாய் வாசலை நோக்கி நடந்தாள்..!!

தீர்த்தபதி பின்தொடர வீட்டிலிருந்து வெளிப்பட்டாள்..!! கும்மிருட்டு.. ஜிவ்வென்று கொட்டுகிற மழை.. மின்னல் வெளிச்சத்துடன் இடிமுழக்கம்.. ஏதோ ஒரு காட்டு விலங்கின் தூரத்து ஓலம்..!! மழையில் நனைந்து நடந்த குறிஞ்சி.. தலைகுனிந்து தயாராய் நின்றிருந்த அந்த குதிரையை நெருங்கினாள்.. அதன் முதுகில் கைபதித்து லாவகமாக மேலேறினாள்..!!

“பார்த்து கவனமா போ குறிஞ்சி..!!”

கனிவுடன் சொன்ன தீர்த்தபதியை ஒருகணம் சலனமில்லாமல் பார்த்தாள்..!! பிறகு.. குதிரையின் கடிவாளத்தை பிடித்து சரக்கென இழுத்தவள்.. ‘ஓவ்’ என்று சப்தமெழுப்பியவாறு கால்களை விரித்து குதிரையின் விலாப்பகுதியை உதைக்க.. அது உடனடி வேகமெடுத்து ‘விர்ர்ர்ர்ர்’ என்று கிளம்பியது..!! மழை நீரின் அடர்த்தியையும் மீறி, எதிர்க்காற்றின் அசுர வேகத்தில்.. அவள் அணிந்திருந்த சிவப்பு அங்கி உயரெழும்பி பறந்தது..!! ‘தடக்.. தடக்..’ என குளம்படி ஓசையுடன் பறந்து செல்கிற குதிரையை.. பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் தீர்த்தபதி..!!

குறிஞ்சியின் குதிரை அந்த இடத்தை விட்டு கிளம்பிய சில நொடிகளிலேயே.. வேறு திசையில் இருந்து அதே ‘தடக்.. தடக்..’ ஓசையுடன் நான்கு குதிரைகள் வந்தன.. கடிவாளம் இழுக்கப்பட்டு குறிஞ்சியின் வீட்டின் முன்பாக வந்து நின்றன..!! குறிஞ்சியை இழுத்து செல்ல இத்தனை சீக்கிரம் வருவார்கள் என்று தீர்த்தபதி சற்றும் எதிர்பார்த்திரவில்லை.. குழம்பிப் போனான்..!! கையிலிருந்த நகைகளை உடனே பின்புறமாக மறைத்தவன்..

“அ..அவளை இழுத்து செல்லத்தான் நானும் வந்தேன்.. அதற்குள்ள விஷயம் தெரிஞ்சு அவ தப்பிச்சுட்டா..!!”

என்று தடுமாற்றமாக சொன்னான்..!! தொடர்ந்து.. அவள் சென்ற திசையென தவறான திசையை காட்ட எண்ணி அவன் கையை உயர்த்துகையிலேயே..

“அதோ.. அங்க போறா பாரு..!!”

குதிரையில் வந்தவர்களில் ஒருவன்.. குறிஞ்சி சென்ற திசையை சரியாக கண்டறிந்து கொண்டான்..!! சற்றும் தாமதியாமல்.. நால்வரும் அதே திசையில் தங்கள் குதிரைகளை முடுக்கி விரைந்தனர்..!! ‘குறிஞ்சி இந்த ஊரை விட்டு சென்றால் போதும்’ என்று எண்ணியிருந்த தீர்த்தபதியின் நெஞ்சில் இப்போது ஒருவித கலக்கம்.. குற்ற உணர்வு ஒன்று அவனுடைய மனதில் மெலிதாக பரவ ஆரம்பித்தது..!!

23

கடும் மழை பொழிகிற மலைப்பிரதேசம்.. கரி பூசிவிட்ட மாதிரியாக அடர்இருள்.. நெருக்கமாய் வளர்ந்திருக்கிற காட்டுமரங்கள்.. அதற்குள்ளே வளைந்து நெளிந்து செல்கிற குறுகலான சாலை..!! அந்த சாலையில்.. சிவப்பு நிற அங்கி காற்றில் படபடக்க.. வெள்ளை நிற குதிரையில் குறிஞ்சி பறந்து கொண்டிருந்தாள்..!! சிறிது தூர இடைவெளியில்.. இன்னும் நான்கு குதிரைகளில்.. புவனகிரியின் ஆட்கள் அவளை விரட்டிக் கொண்டிருந்தனர்..!!

குறிஞ்சி குதிரையேற்றம் அறிந்தவள் என்றாலும், கைதேர்ந்தவள் என்று சொல்ல முடியாது..!! பின்தொடர்ந்து சென்றவர்களுக்கோ அது அன்றாட பணியும் பயிற்சியுமாக இருந்தது..!! குறிஞ்சிக்கும் அவர்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்துகொண்டே வந்தது..!!

குதிரையை விரட்டிக்கொண்டே.. குறிஞ்சி தலையை மெல்ல திருப்பி பின்னால் பார்த்தாள்..!! துரத்துபவர்கள் இப்போது தனக்கு இன்னும் நெருக்கமாக வந்திருப்பதை அறிந்ததும்.. அவளுக்குள் ஒரு நடுக்கம் பரவியது..!! மாட்டிக்கொள்வோமோ என்பது மாதிரியான ஒரு பயம்.. அவளுடைய மனதினை வந்து கவ்விக்கொண்டது..!! குதிரையின் வயிற்றை உதைத்து.. அதனை வேகம்கொள்ள தூண்டினாள்..!!

இடைவெளி நிறைய குறைந்து போனதும், நால்வரில் ஒருவன் திடீர் முடிவெடுத்தான்.. கையிலிருந்த வேல்க்கம்பை சுழற்றி, காற்றில் சரக்கென வீசினான்..!! மழைநீரை கூர்மையாக கிழித்து பறந்த அந்த வேல்க்கம்பு.. சரியாக சென்று குறிஞ்சியின் தோள்ப்பட்டையில் சதக்கென்று பாய்ந்தது..!!
“ஆஆஆஆஆஆ…!!!!”

குருதி பீய்ச்சியடிக்க அலறிக்கொண்டே குறிஞ்சி ஒருபக்கமாக சரிந்தாள்.. சமநிலை கிடைக்காத குதிரையும் அவளுடன் சேர்ந்து சரிந்தது..!! குதிரை சென்ற வேகத்துக்கு.. குறிஞ்சி தரையில் தூக்கி விசிறப்பட்டாள்..!! கல்லிலும் முள்ளிலும் காட்டுச்செடியிலும் கடகடவென உருண்டவள்.. கரும்பாறை ஒன்றில் சென்று நச்சென்று மோதவும்.. கண்கள் செருக சுய நினைவை இழந்தாள்..!! விரட்டி வந்தவர்கள் குதிரையின் வேகத்தை குறைத்து தரையில் குதித்தனர்..!!

அதே நேரத்தில்.. தீர்த்தபதி தனது நண்பன் முத்தழகனின் வீட்டில் இருந்தான்..!! குறிஞ்சியை விரட்டிக்கொண்டு அந்த நால்வரும் சென்றபிறகு.. தனது குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பியவன்.. நேராக நண்பன் வீட்டில்தான் வந்து நின்றான்..!!

வீட்டுக்குள்ளே.. கடும்குளிருக்கு கம்பளி போர்த்தியவாறும்.. காய்ந்துபோன தொண்டையுடன் ‘லொக் லொக்’ என்று இருமியவாறும்.. கட்டிலில் படுத்திருந்தாள் அந்த பெண்மணி.. முத்தழகனின் தாய்..!! தன்னை பெற்றெடுத்த தாயை சிறுவயதிலேயே இழந்திருந்த தீர்த்தபதி.. தனக்கு கடவுள் அளித்த இன்னொரு தாயாக கருதுபவள்..!!

“அம்மாவுக்கு இப்போ எப்படி இருக்கு..??” தீர்த்தபதி கேட்க,

“அப்படியேதான் இருக்கு..!!” கவலையாக பதில் சொன்னான் முத்தழகன்.

தீர்த்தபதி இப்போது நடந்து சென்று அந்த அம்மாவை நெருங்கினான்.. கட்டிலுக்கு குனிந்து அவளுடைய கையை வாஞ்சையாக பற்றிக்கொண்டான்..!! இமைகளை மெல்ல பிரித்து அவள் இவனை பார்க்க.. இவன் அவளை பாசமிகு பார்வை ஒன்று பார்த்தான்..!!

முத்தழகனின் தந்தை ஒரு சுகபோகி.. குறிஞ்சியின் அழகில் அவருக்கு ஒரு மயக்கம்..!! குடித்தது சூதாடியது போக தனது வருமானத்தின் ஒரு பெருமானத்தை.. குறிஞ்சியின் அழகை சுகிப்பதற்கென்று செலவழிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தார்.. குறிஞ்சியின் குடிலிலேயே பெரும்பொழுதை கழித்தார்.. கட்டிய மனைவியை உதாசீனப்படுத்தியே வந்தார்..!!

நண்பனின் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியிலான உதவிகளை மட்டுமே தீர்த்தபதியால் செய்ய முடிந்தது.. கணவனின் போக்கை கண்டு நண்பனின் அம்மாவுக்கு ஏற்பட்ட மனநோயை தீர்க்க, தீர்த்தபதிக்கு வழியேதும் தெரியவில்லை..!! ‘இது மனதில் உண்டான காயம்.. மருந்துக்கு குணப்படாது..’ என்று மருத்துவர் சொன்னது இன்னமும் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது..!! அம்மாவின் மனநோய் நீங்கவேண்டும் எனில்.. குறிஞ்சி இந்த ஊரில் இருக்கக்கூடாது என்பதை சிலநாட்கள் முன்புதான் நன்கு புரிந்து கொண்டிருந்தான்..!!