கண்ணாமூச்சி 6 72

கதிர் அவ்வாறு சொன்னதுமே சிபியின் முகம் சட்டென சுருங்கிப் போனது.. அதே நேரத்தில்.. வெளியே கிளம்ப தயாராகி, படியிறங்கி வந்த ஆதிராவை காண நேர்ந்ததும்.. அவனுடைய எரிச்சல் அதிகமாகவே செய்தது.. மனைவியின் முகத்தை ஏறிட்டு முறைத்தான்..!!

“சொன்னா கேக்க மாட்டேல..??”

என்று சன்னமான குரலில் முணுமுணுத்தான்.. ஆதிரா அவனுக்கு பதில் சொல்லவில்லை.. ‘ப்ளீஸ்த்தான்’ என்று பார்வையாலேயே கெஞ்சினாள்..!!

“ஹ்ம்.. என்னவோ பண்ணிட்டு போ..!!”

என்று சலிப்பாக சொல்லிவிட்டு சிபி செய்தித்தாளுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான்..!! ஆதிராவுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.. கதிரை ஏறிட்டு ‘வாங்க.. போலாம் போலாம்..’ என்று சைகையால் சொன்னவாறே வாசலை நோக்கி நடந்தாள்..!!

“அ..அப்போ நான் வர்றேன்..!!” என்று கதிர் சொன்னதற்கு சிபியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

தான் செய்கிற காரியங்களில் தனது கணவனுக்கு உடன்பாடு இல்லை என்பது ஆதிராவுக்கு தெளிவாக புரிந்தது.. நேற்று இரவு விஷயத்தை சொன்னபோதே ‘ஏன் இந்த தேவையில்லாத வேலைலாம்..??’ என்று எரிச்சல் பட்டுக்கொண்டான்..!! ஆனால்.. அதையும் மீறி.. தங்கை மீது அவளுக்கிருந்த அன்பும், அவளுக்கு என்னவானது என்று உறுதிப் படுத்திக்கொள்கிற ஆர்வமும்.. அவளை அந்த காரியங்களை செய்ய சொல்லி உந்தித்தள்ளின..!! அதுவுமில்லாமல்.. சும்மாவே அவள் இன்று செல்லவிருக்கிற இடத்துக்கு வர சிபி பிரியப்படமாட்டான் என்பது அவளுக்கு முன்கூட்டியே தெரியும்.. அதனால்தான் கார் ஓட்ட கதிரை துணைக்கு அழைத்திருந்தாள்..!!

மலைப்பாதையில் பயணம் புரிவதற்கு ஏற்றது என.. பல வருடங்களுக்கு முன்பு தணிகைநம்பி வாங்கிய ஜீப் அது..!! ஆதிராவின் குடும்பம் அகழியில் இருந்து சென்றபிறகு.. அதிகமாக உபயோகிக்கப்படாமல் கொட்டாரத்திலேயே நின்றிருக்கும்..!! அதில்தான் இப்போது ஆதிராவும் கதிரும் கிளம்பினார்கள்.. ஆரம்பத்தில் சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாகவே இருந்தனர்..!!

ஆதிரா குறிப்பிட்ட அந்த தடுப்பூசி மருந்து தொழிற்சாலை.. அகழியின் இன்னொரு மூலையில் இருக்கிறது.. அந்த தொழிற்சாலையை அடைய அகழியின் முக்கிய வீதிகளை கடந்துதான் செல்லவேண்டும்..!! அந்த பாதையிலேயே.. ஊருக்குள் நுழைவதற்கு முன்பாகவே.. ஒரு மலைச்சரிவின் உச்சியில் தனியாக நின்றிருந்த, அந்த சிதலமடைந்த வீட்டின் வழியே ஜீப் சென்றது.. நூறு வருடங்களுக்கு முன்பாக குறிஞ்சி வாழ்ந்த வீடு.. இப்போதெல்லாம் அருகில் செல்வதற்கே பலரும் அஞ்சி நடுங்குகிற வீடு..!!

அந்த வீடு பார்வைக்கு வந்ததுமே.. ஆதிராவுக்கு பழைய ஞாபகங்களும் மனதுக்குள் வந்து, பளிச் பளிச்சென்று மின்னலாய் வெட்டின..!! ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் நினைவுகள்..!!

“Game or Shame..??” – கைவிரல்களுக்கு நடுவே கண்சிமிட்டி கேட்டாள் தாமிரா. எந்தப் பொருளுக்காக அந்தப் போட்டி என்பது கூட ஆதிராவுக்கு இப்போது ஞாபகம் இல்லை.

“குறிஞ்சி வீட்டுக்குள்ள நொழைஞ்சு.. சுவத்துல பேர் எழுதி வச்சுட்டு வரணும்.. நீ உன் பேரை.. நான் என் பேரை..!! “Game or Shame..??” – தாமிரா கூலாக சொல்ல, ஆதிராவோ பதறினாள்.

இருட்ட ஆரம்பிக்கிற சமயத்தில் குறிஞ்சி வீட்டுக்கு முன்பாக வந்து நின்றனர்.. இளங்குமரிகள் இருவரும்..!! ஆளுக்கொரு கையில் நீளமான, தடியான ஆணி ஒன்றை பற்றியிருந்தனர்.. ஆதிராவின் கையிலிருந்த ஆணி மட்டும் நடுக்கத்தில் கிடுகிடுவென ஆடியது..!!

“வேணாண்டி.. போயிறலாம் வா..!!” – விதிர்விதிர்த்துப்போய் ஆதிரா சொல்லிக் கொண்டிருக்கையிலேயே.. வில்லிலிருந்து கிளம்பிய அம்பாக புறப்பட்டாள் தாமிரா.. வீட்டை நோக்கி விடுவிடுவென ஓடினாள்..!!

“ஏய்.. நில்லுடி..!!”

“ஒன்னும் ஆகாது வாடி..!!!” – தங்கையின் குரலில் சற்று தைரியம் பெற்று ஆதிராவும் அவள் பின்னால் மூச்சிரைக்க ஓடினாள்.

வீட்டை முற்றிலும் மூடுமாறு சுற்றிலும் அடித்து வைக்கப்பட்ட மரத்தகடுகளில் ஒன்றை பெயர்த்தெடுத்தாள் தாமிரா.. உருவான சிறு இடைவெளியில் உடலை திணித்து உள்ளே விழுந்தனர் உடன்பிறப்புகள் இருவரும்..!! மரத்தகடு திறப்பின் வழியாக உள்ளே சிந்திய சிறு ஒளிக்கற்றை தவிர.. வீடு மொத்தத்தையும் அடர் இருள் கவ்வியிருந்தது..!! உள்ளே விழுந்த வேகத்தில் இருவரும் எழுந்து இருட்டுக்குள் ஓடினர்..!! மூன்றடி உயரத்திற்கு குட்டையாக இருந்த, மங்கலான வெளிச்சம் படர்ந்த மண்சுவற்றில்.. ஆதிராவும், தாமிராவும் அவரவர் பெயர்களை ஆணி கொண்டு எழுத முனைந்தனர்..!! தாமிராவின் ஆணி மட்டும் ‘தா’ எழுதுவதற்குள் கையிலிருந்து நழுவி இருட்டுக்குள் விழுந்தது.. அவளது விருப்பப்படியே.. அவளுடைய திட்டப்படியே..!! தங்கை இருட்டுக்குள் ஆணியை தேடி முடிப்பதற்குள்.. தனது பெயரை சுவற்றில் பொறித்து முடித்தாள் ஆதிரா.. அந்த போட்டியில் வென்றாள்..!!

சிறிது நேரத்தில் குறிஞ்சி வீட்டை விட்டு வெளியே வந்தபிறகு..

“என்னடி இது..??” குழப்பமாக கேட்ட ஆதிராவிற்கு,

“கீழ ஆணி தேடினேன்ல.. அப்போ இது கைல மாட்டுச்சு.. மண்ணுல புதைச்சு வச்சிருந்தாங்க.. என்னன்னு பாக்கலாம்னு எடுத்துட்டு வந்துட்டேன்..!!” கைகள் விரித்து காட்டினாள் தாமிரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *