அசுரன் Part 9 43

மன்னர் காலம்..

மாய மலையில் அன்று வீர சாகச விளையாட்டுக்கள் நடைபெற்று கொண்டு இருந்தன..
இரண்டு களிறுகள்(ஆண் யானைகள்)ஒன்றையொன்று மோதி கொண்ட போட்டி நடைபெற்றது..புழுதி பறக்க நடந்த அந்த போட்டியில் தந்தங்களால் யானைகள் ஆக்ரோஷமாய் முட்டி கொண்டதில் ஒரு யானை இறந்து விழுந்தது.
அடுத்து காளை அடக்குதல் போட்டி நடைபெற்றது..
வாள் சண்டை,மல்யுத்த சண்டை ஒவ்வொன்றாக எல்லாம் நடந்து முடிந்தது..இவை அனைத்தையும் மதிவதனி அமர்ந்து ரசித்து கொண்டு இருந்தாள்.காத்தவராயன் தனியாக இன்னொரு மேடையில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தான்…

காத்தவராயன் அமர்ந்து இருந்த மேடை உயரத்தில் இருந்தது.ஆனால் மதிவதனி மற்றும் மற்ற அரசிகள் அமர்ந்து இருந்த மேடை சற்று உயரம் குறைவாக இருந்தது..

கடைசி போட்டியாக தகஷகன் என்ற மலைப்பாம்பும்,ஒரு பெரிய புலியும் சண்டை போட வெளியே திறந்து விடப்பட்டது..

தகஷகன் பாம்பின் நீளத்தையும்,பருமனையும் பார்த்த மதிவதனி மருண்டாள்.

“என்ன இது இவ்வளவு நீளமா,பருமனா இருக்கே,இதுவரை இந்த அளவு பெரிய பாம்பை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லையே”என வியந்தாள்..

மதிவதனி பக்கத்தில் இருந்த ஒரு ராணி”மதி இந்த அளவு பெரிய பாம்பு இந்த உலகத்திலேயே இல்லை என கூறுகிறார்கள்.இது ஒரே நேரத்தில் இரு மனிதர்களை விழுங்குமாம்…”என்று கூறினாள்.

ஆனால் மதிவதனிக்கு அதன் வாயை பார்க்கும் பொழுது மூன்று ஆட்களை கூட விழுங்கும் போல் என தோன்றியது…

ஆனால் புலியும் பார்ப்பதற்கு ஒன்றும் சாதாரணமாக தோன்றவில்லை..அதுவும் பார்ப்பதற்கு யானையின் பாதி அளவு இருந்தது.அது நகங்களை விரிக்க ஒவ்வொரு நகமும் 8 அங்குல அளவுக்கு இருந்தது.அது உறுமும் போது அங்கு இருந்த அனைவரும் குலை நடுங்கினர்..அந்த பற்கள் ஒவ்வொன்றும் 6 அங்குல அளவுக்கு இருந்தது.

நிச்சயமாக இந்த பாம்புக்கு இது சரியான போட்டி தான் என மதிவதனி நினைத்தாள்.

மீண்டும் மதிவதனி பக்கத்தில் இருந்த ராணி”இந்த புலி ஏற்கனவே ஒரு யானையை ஒரே அடியில் வீழ்த்தி உள்ளது.அதுவும் இந்த போட்டிக்காகவே இவை இரண்டையும் பட்டினி போட்டு வைத்து உள்ளார்கள். இன்று இரண்டில் ஒன்று இறக்கபோவது உறுதி” என கூறினாள்..

தகஷகன் பாம்பை வரிப்புலி நெருங்கி வந்தது.அது பாம்பை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியில் புழுதி பறந்தது.பாம்பு வெளியிடும் மூச்சில் தூசி பறந்தது.பாம்பு தன் உடலை சுருட்டி கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டி கொண்டு புலியை தாக்க தயாராக இருந்தது…
புலியும் அதன் வாயருகே செல்லாமல் அதன் வாலை நோக்கியே குறி வைத்து சுற்றி சுற்றி நகர்ந்து கொண்டு இருந்தது..ஒரு கட்டத்தில் பாம்பின் வாலை சென்று புலி கடிக்க பாம்பு அதை கடிக்க சீறி பாய்ந்தது..ஆனால் புலி லாவகமாக பாம்பின் கடியில் இருந்து தப்பித்தது.அதை பார்த்து மக்கள் ஆரவாரம் செய்தனர்.

மீண்டும் அதேபோல் புலி தன் யுக்திகளை கையாண்டு பாம்பை கடித்தாலும்,நகங்களால் பிராண்டினாலும் பாம்பின் தசைகளை லேசாக மட்டுமே காயப்படுத்த முடிந்தது.அந்த அளவுக்கு பாம்பின் தசை கடினமாக இருந்தது.ஆனால் புலி தன் சக்தியை இழந்து கொண்டே வந்தது.ஆனால் பாம்பு அசையமால் தன் சக்தியை வெளியிடாமல் பொறுமையாக சரியான சந்தர்ப்பத்திற்காக காத்து இருந்தது.