அக்…அக்க்கா…க்க்கா…! 79

”இதெல்லாம் எதுக்குடா?” வாசு பையிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்குத் தேவையான பொருட்களாக எடுத்துவைக்க, கண்ணில் நீர் மல்கியபடி சகுந்தலா கேட்டுக்கொண்டிருந்தாள். “என் ஒருத்தியாலே நீங்க பட்ட கஷ்டமெல்லாம் போதாதா?”

”சும்மாயிருக்கா!” என்று அதட்டினான் வாசு. “இதெல்லாம் அம்மா உனக்கான சீர்வரிசைன்னு சொல்லச் சொன்னா!”

ஒரு மணி நேரத்தில் கிளம்பவே முடிவு செய்திருந்தான் வாசு. ஆனால், அக்காதான் தடுத்து விட்டாள்.

”வராதவன் வந்திருக்கே! ராத்தங்கிட்டு நாளைக்குக் காலையிலே கிளம்பேன். எனக்கும் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்டா!”

வாசு தயக்கத்துடன் ஒப்புக்கொண்டான். அக்காவின் வாழ்க்கையைப் பாழாக்கிய அவளது கணவனை அவன் பார்க்க விரும்பவில்லை. தம்பியின் மனவோட்டத்தைப் புரிந்துகொண்டவளாய் சகுந்தலா சொன்னாள். “அவர் இப்போ டெம்போ ஓட்டுறார்டா! இப்போ நெல்லூருக்கு அரிசிலோடு எடுக்கப் போயிருக்காரு! நாளைக்குத்தான் திரும்புவாரு!”

வேறுவழியின்றி ஒப்புக்கொண்ட வாசு, சிறிது நேரம் கழித்து அருகிலிருந்த கடைக்குச் சென்று காய்கறிகள், மளிகை சாமான் ஆகியவற்றை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தான்.

”எதுக்குடா இதெல்லாம்….?” என்று கேட்ட அக்காவைக் கையமர்த்தியவன், தனது பையிலிருந்து ஒரு பாக்கெட்டை எடுத்து நீட்டினான். “இப்படி வெறும் மஞ்சக்கயித்தோட இருக்காதேக்கா. பார்க்க சகிக்கலை! இதைப் போட்டுக்க. உனக்காவது பயன்படட்டும்!”

சகுந்தலா பிரித்துப் பார்த்தாள். தங்கச்சங்கிலி!

”வாசு, இது….?”

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *