மாலை நெருங்கி, சூரியன் விளிம்பிற்கு வந்து, வெளிச்சம் குறைய குறைய மனம் சஞ்சலப்படத் துவங்கியது.
மணி ஆறைத் தொட, அதற்கு மேல் வைராக்கியமாய் இருக்க முடியாமல், போனை எடுத்து கணவரின் மொபைலுக்கு கால் பண்ண, ஸ்விட்ச் ஆஃப் என்று வர, மனதுக்குள் முதல் முறையாக மெலிதான பயம் கவ்வ துவங்கியது.
சற்று நேரம் எதுவும் செய்ய தோன்றாமல், அப்படியே உணர்வின்றி உட்கார்ந்திருந்தேன்.
கொஞ்சம் நிதானித்துக் கொண்ட பின், லாவண்யாவிடம் பேசினால் எதாவது யோசனை சொல்வாள், அல்லது ஆறுதலாவது சொல்வாள் என்று லாவண்யாவுக்கு கால் செய்ய முழுதாக ரிங்க் போய் தானாக கட் ஆனது.
என்ன ஆச்சு எல்லோருக்கும். ஒட்டு மொத்தமாக இந்த உலகமே என்னை ஒதுக்குகிறதா? இப்போது நான் என்ன செய்வது என்று புரியாமல் செயலற்று போய் உட்கார்ந்திருந்தேன். எந்த நேரமும் அழுகை வெடித்துக் கிளம்பும் என்ற நிலையில் யாருமற்ற தனிமையில் தன்னிரக்கம் கொல்ல உடலில் இருந்த சக்தியெல்லாம் ஒட்டு மொத்தமாய் வடிந்து விட்டது போல உட்கார்ந்திருந்தேன்.
போன் ரிங்கானது.
பாய்ந்து எடுத்தேன். கணவராக தான் இருக்கும். இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு அழைப்பில் யாரென்றே பார்க்காமல் ஆன் செய்து காதில் வைக்க…
மறுமுனையில்…
நான் குமார் பேசுறேன். லாவண்யா ஹஸ்பண்ட்.
பதில் சொல்லக் கூட தோன்றாமல் நான் அமைதியாய் இருக்க…
மேடம்…
ம்…
நான் இப்ப உங்க வீட்டு வாசல்லே தான் இருக்கேன். கொஞ்சம் கேட்டை ஓபன் பண்ணுங்க.
மனதை சுருக் என்று ஒரு பயம் கவ்வியது. என்ன புது ப்ரசனை இது? ஒன்றும் புரியாமல் நான் சில நொடிகள் அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் இருக்க…
ப்ளீஸ்… ஒரு எமர்ஜென்சி… முதல்லே வெளியே வாங்க. நான் சொல்றேன்.
ம்…
எனக்கு வேறு வழியின்றி சரி வருவது வரட்டும் என்று எழுந்து வாசலுக்கு சென்று கேட்டை திறந்தேன்.
அங்கே லாவண்யாவின் கார் நின்றுக் கொண்டிருந்தது. ட்ரைவிங் சீட்டில் குமார் உட்கார்ந்திருந்தான். காரை விட்டு இறங்கி வந்தவன், என்னை நெருங்க, நான் கேட் பூட்டலையே, எதுக்கு கால் பண்ணீங்க. நம்பர் எப்படி தெரியும் என்று சந்தேகமாக அவனை கண்களால் ஊடுருவ…
திடீர்ன்னு உள்ளே வர கொஞ்சம் தயக்கமா இருந்திச்சு. ஏற்கெனவே இருக்க ப்ரசனைகளே போதும்ன்னு நினைச்சேன். மேடம், கொஞ்சம் பதட்டப்படாம நான் சொல்றதை கேளுங்க. உங்க ஹஸ்பண்ட் லைட்டா ட்ரிங்க்ஸ் யூஸ் பண்ணிட்டு பைக் ஓட்டிட்டு வரும் போது தடுமாறி விழுந்திட்டாரு. யாரோ ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி அவரை ஹாஸ்பிடல்லே சேர்த்திருக்காங்க. உங்க நம்பர் ரீச் ஆகலைன்னு லாவண்யா நம்பருக்கு கால் பண்ணிருக்காங்க. நாங்க தான் ஹாஸ்பிடல் போய் பார்த்தோம். பயப்பட ஒண்ணும் இல்லை. ஃபுல்லி சேஃப். லாவண்யா தான் என்னை அனுப்பி வைச்சா.
நான் அந்த செய்தியால் பதட்டப்படவில்லை. முதலில் எனக்கு அவன் சொன்னது உண்மையா என்பதிலேயே சந்தேகம் இருந்தது.
லாவண்யா வந்திருக்கலாமே?
அவளும் கொஞ்சம் நெர்வஸா இருந்தா. ட்ரைவ் பண்ண வேண்டாம்ன்னு தான் நான் வந்தேன்.
….
வெய்ட்…
…
குமார் தன் போனை எடுத்து கால் செய்து லாவண்யா, மேடம் பக்கத்திலே இருக்காங்க. நீ கொஞ்சம் சொல்லு. அவங்களுக்கு எதோ குழப்பம் என்று பேசி விட்டு என்னிடம் போனை கொடுக்க, வாங்கி காதில் வைத்தேன்.
மறுமுனையில் லாவண்யா தான்.
அம்மு… டோண்ட் வொரி… நோ ப்ராப்ளம். டாக்டர் கிட்டே தான் பேசிட்டிருக்கேன். நீ குமார் கூட கிளம்பி வா. ஹி ஈஸ் ஹார்ம்லெஸ். பயப்பட வேண்டிய ஆளில்லை. பின் சீட்லே உட்கார்ந்துக்கோ. பக்கத்துலே தான் ஹாஸ்பிடல், விஎம்கே மெடிகல் செண்டர். ரூம் நம்பர் டூ நாட் எய்ட். நான் வெய்ட் பண்றேன்.
