எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 6 12

“உனக்கு எப்படி சொல்றது..?? ம்ம்ம்… ம்ம்ம்… ஆங்.. என் அக்கா சொன்னேன்ல..??”

“ஆமாம்..!!”

“கொஞ்ச நாள் முன்னாடி அவ ஒரு பையனை லவ் பண்ணிட்டு இருந்தா.. ரொம்ப சின்ஸியரா லவ் பண்ணினா.. அவனுக்காக என்னவேனா செய்வான்னா பாத்துக்கோயேன்.. அந்த அளவுக்கு அவன் மேல பைத்தியமா இருந்தா..!!”

“ஓ..!! இப்போ என்னாச்சு..??”

“என்னாச்சுன்னே தெரியல அசோக்..!! ஒருநாள் அந்தப்பையன் திடீர்னு காணாமப் போயிட்டான்.. எங்க தேடியும் அவன கண்டுபிடிக்க முடியல..!! அப்புறம்.. அவன் ஐடில இருந்து அக்காவுக்கு ஒரு மெயில் மட்டும் வந்தது..!!”

“என்னன்னு..??”

“நான் யூ.எஸ்ல இருக்கேன்.. இங்கயே செட்டில் ஆகப் போறேன்.. இத்தனை நாளா நான் உன்னை லவ் பண்றதா சொன்னதுலாம் பொய்.. சும்மா நடிச்சேன்.. சும்மா ஜாலிக்காத்தான் உன் கூட பழகினேன்.. நான் இங்க வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. நீயும் நடந்ததை மறந்துட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.. அப்டின்னு..!!”

“ஷிட்..!!”

“அக்கா அப்படியே உடைஞ்சு போயிட்டா.. சூசயிட் பண்ணிக்க ட்ரை பண்ணினா.. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அவளை காப்பாத்தினோம்..!!”

“ஓ..!! இப்போ எப்படி இருக்காங்க..??”

“இப்போ அக்கா நார்மல் ஆகிட்டா.. அந்தப் பையனை மறந்துட்டா.. ‘உன்னை ஏமாத்திட்டு போனவனுக்காக நீ ஏன் சூசயிட் பண்ணிக்கனும்’னு ஆளாளுக்கு சொல்லி சொல்லி.. எப்படியோ அவளை தேத்தினோம்.. இப்போ கொஞ்ச நாளாத்தான் அவ சகஜமா இருக்கா.. எப்போவும் போல சிரிக்க ஆரம்பிச்சிருக்கா..!!”

“குட்..!!”

“அந்தப்பையன் காணாம போனதுல.. அக்காவுக்கு எந்த சந்தேகமும் இல்ல.. ஆனா எனக்கு மனசுக்குள்ள ஒரு சந்தேகம்..!!”

“என்ன..??”

“அந்தப் பையனை அப்பாதான் ஏதாவது பண்ணிருப்பாரோன்னு..!!” மீரா கிசுகிசுப்பாக சொன்னவிதத்திலேயே அசோக்கிற்கு கிலி கிளம்பியது.

“ஓ..!!!! ஏ..ஏன்.. அப்படி சந்தேகப்படுற..??”

“தெரியல.. என் மனசுக்கு அப்படி தோணுது..!! அவங்க லவ் மேட்டர் தெரிஞ்சிருந்தா.. அப்பா அந்தப் பையனை சும்மா விட்ருக்க மாட்டாரு..!! அவனை அடிச்சு உதைச்சு மிரட்டி.. அந்த மாதிரி மெயில் அனுப்ப வச்சு.. அப்புறம் அவனை எங்கயாவது கொன்னு பொதைச்சிருந்தா..??” விழிகளை விரித்து வைத்தவாறு மீரா அப்படி கேட்க,

“ஹேய்… எ..என்ன நீ.. இ..இப்படிலாம் டெரரா யோசிக்கிற..??” அசோக் நடுக்கத்துடன் சொன்னான்.

“இல்ல அசோக்.. என் அப்பா அந்த மாதிரி செய்யக்கூடிய ஆள்தான்.. அதனாலதான் இதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்..!!”

“எ..எதனால..??”

“இப்போ நாளைக்கே நீ என்னை லவ் பண்றேன்னு என் அப்பாவுக்கு தெரிஞ்சதுன்னு வச்சுக்கோ.. அவர் உன்னை என்ன வேணா செய்யலாம்..!! உன்னை கடத்தி கொண்டு போய் கட்டிப்போட்டு சித்திரவதை பண்ணலாம்.. கண்ணுல ஊசி ஏத்தலாம்.. நகத்தை பிச்சி பிச்சி எடுக்கலாம்..!! இந்த ஹாக்ஸா ப்ளேட் இருக்குல.. அதை வச்சு உன் கால் நரம்பை அப்படியே கறகறன்னு..”

மீரா சொல்லிக்கொண்டே போக.. அசோக் குலைநடுங்கிப் போனான்..!! பயத்தில் மூழ்கியிருந்த அவனுடைய இதயம்.. ‘பக்.. பக்.. பக்..’ என அடித்துக் கொண்டது..!! அவள் சொன்ன விஷயங்களை எல்லாம் கற்பனை செய்து பார்க்க.. தான் எழுதி வைத்திருந்த ஹாரர் ஸ்க்ரிப்டை விட படு பயங்கரமாக இருந்தது..!! அசோக் தலையை உலுக்கி, அந்த பயத்தை உதற முயன்றான்..!!

தன்னுடைய குடும்பத்துக்கும் மீராவின் குடும்பத்துக்கும் இருக்கிற, இமாலய முரண்பாடு அவன் மனதை இப்போது சுருக்கென்று தைத்தது. ‘பேசி சம்மதிக்க வைத்துவிடலாம்..’ என்று தனது குடும்பத்தினர் தந்திருந்த தைரியம், இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது. இவளை கைபிடிப்பது எளிதாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாக புரிந்தது.

மீராவின் அப்பாவிடம் சிக்கிக்கொண்டு சித்திரவதை அனுபவிப்பதை நினைத்து பார்க்கையில்.. அசோக்கிற்கு உடல் சில்லிட்டு போயிருந்தாலும்.. அதையும் மீறி அவனுடைய மனதில் ஒரு துணிச்சல் துளிர் விடத்தான் செய்தது..!! மீராவின் மீது அவனுக்கிருந்த காதல் தந்த துணிச்சல் அது..!! ‘கஷ்டத்தை எண்ணிக்கொண்டு காதலை தவிர்த்தல் கோழைத்தனம் அல்லவா..?? காதலையே வாழ்க்கையாக கொண்ட குடும்பத்தில் பிறந்துவிட்டு, இதற்கெல்லாமா கவலைப்படுவது..??’ என்று தோன்றியது. அந்த மாதிரி ஒரு எண்ணம் வந்ததுமே, பேசிக்கொண்டிருந்த மீராவை இடைமறித்து அசோக் சொன்னான்.

“இங்க பாரு மீரா.. இதெல்லாம் நீ எனக்கு சொல்லனும்னு அவசியம் இல்ல..!! எனக்கு ஒன்னும் உன் அப்பாவ நெனச்சு பயம் இல்ல.. என்ன ஆனாலும் சரி.. எவ்வளவு கஷ்டம் அனுபவிக்க வேண்டி இருந்தாலும் சரி.. என் கடைசி மூச்சு இருக்குறவரை இந்த காதல்ல நான் ஸ்ட்ராங்கா இருப்பேன்.. உன்னை லவ் பண்ணதுக்கு தண்டனை சாவுதான்னா.. அது எனக்கு சந்தோஷம்தான்..!!”

1 Comment

Add a Comment
  1. அழகான காதல் கதை போல் கெறிகிறது ! மீராவின் கேரக்டர் சிறப்பாக செதுக்கி இருக்கிறிர்கள் இதுவரை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *