எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 6 41

அசோக் உறுதியான குரலில் சொல்லிவிட்டு மீராவை பார்க்க, அவளும் இப்போது அமைதியாக இவனுடைய முகத்தையே பார்த்தாள். ஒருமாதிரி.. இமைகளை அசைக்காமல்.. மிக கூர்மையாக ஒரு பார்வை..!! ஒரு நான்கைந்து வினாடிகள்..!! அப்புறம் இதழில் ஒரு அழகுப் புன்னகையுடன்.. கொஞ்சும் குரலில் சொன்னாள்..!!

“ச்சோ.. ச்வீட்..!!”

மீரா அந்த மாதிரி கொஞ்சியது அசோக்கிற்கு குளுகுளுவென்று இருந்தது. அவனையும் அறியாமல் அவனுடைய முகம் வெட்கத்தில் சிவந்து போனது. அந்த வெட்கத்துடனே..

“ப்ச்.. போ மீரா.. நான் சீரியஸா சொல்லிட்டு இருக்குறேன்..!!”

என்றவாறு தலையை குனிந்து கொண்டான். இப்போது மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். அப்புறம் திடீரென ஒருவித உற்சாக குரலில் கேட்டாள்.

“ஹேய் அசோக்.. எனக்காக நீ என்ன வேணா பண்ணுவியா..??”

“என்ன மீரா இப்படி கேட்டுட்ட..?? என்ன பண்ணனும்.. சொல்லு..!!”

“அந்த டேபிள்ள ரெண்டு பேரு என்னையே மொறைச்சு பாத்துட்டு இருக்கானுக.. சும்மா சும்மா என்னை பாத்து கண்ணடிக்கிறாணுக..!! கொஞ்சம் அவனுகளை போய் என்னன்னு கேக்குறியா..??”

அவ்வளவுதான்..!! அசோக் விருட்டென நிமிர்ந்தான். அவன் உடம்பில் அப்படி ஒரு விறைப்பு.. நாடி நரம்பெல்லாம் அப்படி ஒரு புடைப்பு..!! ‘நான் அருகில் இருக்கும்போதே, என் காதலியை ஒருவன் ஹராஸ் செய்வதா..?? துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம்..!!’

“யார் அவனுக..??”

என்று பல்லை கடித்தவாறு, சரக்கென திரும்பினான். திரும்பி அந்த டேபிளில் அமர்ந்திருந்தவர்களை பார்த்ததுமே, அவனுடைய விறைப்பு புடைப்பு அடைப்பு எல்லாம் பொசுக்கென்று அடங்கிப் போனது.

அந்த இரண்டு பேர்.. மனிதர்களே அல்ல, மாமிச மலைகள் போல தோற்றமளித்தனர்..!! ஒருவன் ஜான் ஸீனா மாதிரி இருந்தான்.. அடுத்தவன் அண்டர் டேக்கர் கணக்காக காட்சியளித்தான்..!! இப்போதுதான் மல்யுத்தத்தை முடித்துவிட்டு.. மதிய உணவுக்காக ப்ரேக்கில் வந்திருப்பார்கள் போலிருக்கிறது..!! ஆட்டுத்தொடை போல ஆளுக்கொன்றை கையில் வைத்துக்கொண்டு.. கடித்து இழுத்துக் கொண்டிருந்தனர்..!! அவர்கள் சாப்பிடுவதே சண்டை போடுவது மாதிரி படுபயங்கரமாக இருந்தது..!!

அசோக் அவர்களையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தான்..!! ‘ஒரு.. ஓமக்குச்சி நரசிம்மன்.. ஒருவிரல் கிருஷ்ணராவ்.. இந்த மாதிரிலாம் யாராவது என் லவ்வரை சைட் அடிக்க கூடாதா..?? எனக்குன்னு எங்க இருந்துடா கெளம்பி வர்றீங்க..?? ச்சை..!!’

“என்ன அசோக்.. பாத்துட்டே இருக்க.. போ.. போய் அவனுகளை ரெண்டு விடு..!!”

‘ரெண்டு விடவா.. அவனுக ஒன்னு விட்டாலே நான் ஒருவாரத்துக்கு பெட் ரெஸ்ட் எடுக்கனுமே..??’ மனதுக்குள் நினைத்த அசோக், பயத்துடன் எச்சில் விழுங்கினான். ‘ஏதாவது செய்தாக வேண்டும்.. இல்லாவிட்டால் என்னைப் பற்றி கேவலமாக நினைத்து விடுவாள்..!!’. ஒரு முடிவுக்கு வந்த அசோக், இப்போது மீராவிடம் திரும்பி சொன்னான்.

“இ..இங்க பாரு மீரா.. பெரியவங்கள்லாம் என்ன சொல்லிருக்காங்க..??”

“என்ன சொல்லிருக்காங்க..??”

“சாம.. தான.. பேத.. தண்டம்..!!”

“தண்டமா..?? யாரு தண்டம்..??”

“ஐயோ.. யாரும் தண்டம் இல்ல..!! தண்டம்னா அடிதடின்னு அர்த்தம்.. அதை லாஸ்ட் வெப்பனாத்தான் யூஸ் பண்ணனும்னு பெரியவங்க அட்வைஸ் பண்ணிருக்காங்க..!!”

“சரி.. அதுக்கு..??”

“நான் மொதல்ல போய் அவங்கட்ட பேசி பாக்குறேன்.. செஞ்ச தப்பை அவங்களே ஒத்துக்கிட்டு.. உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாங்கன்னு வச்சுக்கோ.. அதுக்கப்புறம் எதுக்கு இந்த அடிதடிலாம்..?? அவங்கள அப்படியே மன்னிச்சு விட்ரலாம்.. பாவம்..!! சரியா..??”

“ம்ம்.. சரி..!!”

மீரா திருப்தியில்லாமல் தலையசைக்க.. அசோக் இப்போது சேரில் இருந்து மெல்ல எழுந்து கொண்டான்..!! பில்டிங் ஸ்ட்ராங்காக, பேஸ்மட்டம் வீக்காக ஒரு நடை நடந்து.. அந்த மாமிச மலைகளை நோக்கி சென்றான்..!! அவர்களுடைய தலை கவிழ்ந்து போயிருக்க.. இரு கைகளாலும் இறைச்சியை பிடித்து.. கவனமாக கடித்து குதறிக் கொண்டிருந்தனர்..!! அவர்களை நெருங்கிய அசோக் மெல்ல ஆரம்பித்தான்..

“ஹாய்.. மிஸ்டர் அண்டர் டேக்கர்..!!” அவன் அழைத்ததும், இருவரும் நிமிர்ந்தனர்.

“க்யா..????” என்று வாயை பிளந்தான் ஒருவன் மட்டும். வட நாட்டவர் போல..!!

“இ..இங்க பாருங்க.. நீங்க பண்ணினது தப்பு..!! நீ..நீங்க பாக்குறதுக்குலாம் பயங்கர டெரராத்தான் இருக்கீங்க.. அதெல்லாம் நான் இல்லைன்னே சொல்லல.. ஆனாலும் நீங்க பண்ணினது தப்பு..!! அழகா இருக்கான்றதுக்காக அடுத்தவன் கேர்ள் பிரண்டை பாத்து கண்ணடிக்கிறது.. இட்ஸ் டூ பேட் யு நோ.. ரொ..ரொம்ப ரொம்ப தப்பு…!! கமான்.. வாங்க.. வந்து என் ஆள்ட்ட ஒரு ஸாரி கேட்டுடுங்க.. கமான்..!!”

அசோக் ஒருமாதிரி தடுமாற்றமும், சமாளிப்புமாய் சொல்லி முடித்தான். இவனையே கேவலமாக ஒரு லுக் விட்டுக்கொண்டிருந்த மாமிச மலைகள் இருவரும், இப்போது அவர்களுக்குள் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு மீண்டும் அசோக் பக்கமாய் திரும்பினர். அண்டர் டேக்கர் இப்போது அசோக்கிடம் சொன்னான்.

1 Comment

  1. அழகான காதல் கதை போல் கெறிகிறது ! மீராவின் கேரக்டர் சிறப்பாக செதுக்கி இருக்கிறிர்கள் இதுவரை !

Comments are closed.