எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 6 12

“ஏ..ஏன்.. ஏன் அப்படி..??”

“அதெல்லாம் இருந்தா நாங்க கெட்டுப் போயிடுவோமாம்.. யார் மேலயாவது லவ் வந்துடுமாம்..!! எல்லாம் என் அப்பாவோட ரெஸ்ட்ரிக்ஷன்ஸ்..!!”

“அவருக்கு லவ் பிடிக்காதா..??”

“ம்ஹூம்..!! லவ்ன்ற வார்த்தையே ஆகாது.. காதல் மேல வெறுப்புனா வெறுப்பு.. அப்படி ஒரு வெறுப்பு அவருக்கு..!!” மீரா சொல்ல, அசோக்கின் மனதுக்குள் இப்போது ஒரு மெலிதான பயம் பரவியது.

“ஓ..!! எதுக்கு அப்படி ஒரு வெறுப்பு..?? உ..உன்.. உன் அப்பா பத்தி நான் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா..??”

“ம்ம்.. சொல்றேன்..!!”

சொன்ன மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். அசோக்கின் முகத்தை பாராமல் வேறெங்கோ பார்வையை செலுத்தினாள். சிறிது நேரம் அவ்வாறே வெறித்துக் கொண்டிருந்தவள், பிறகு மெல்ல ஆரம்பித்தாள்.

“என் அப்பா பேரு சந்தானம்..!!”

“ம்ம்.. கோடிக்கணக்குல சொத்துன்னு சொல்ற.. என்ன பண்றார்..?? பிஸினஸா..??”

“ஆமாம்.. பெயிண்ட் பிஸினஸ்..!! நேத்து என் சொந்த ஊர் சொன்னேன்ல..??”

“ம்ம்.. காரைக்குடி..!!”

“எஸ்..!! அங்க இருக்குறப்போ அவர் பிஸினஸ் பண்ண பெயின்ட்டுக்கு நெறைய கலர்.. சென்னை வந்தப்புறம் பிஸினஸ் பண்ற பெயின்ட்டுக்கு ஒரே ஒரு கலர்தான்..!! ரெட்..!!!!”

“பு..புரியல..!!”

“எங்க ஏரியால என் அப்பா ஒரு பெரிய புள்ளி அசோக்.. நெறைய பாலிடிஷியன்சோட லிங்க் இருக்கு அவருக்கு..!! அடிதடி.. ஆள் கடத்தல்.. கமிஷன்.. கட்டப் பஞ்சாயத்து.. ரியல் எஸ்டேட் ஃப்ராட்.. ப்யூர் ரவுடிசம்..!!!! என் அப்பா மாதிரி ஒரு இரக்கம் இல்லாத மொரட்டு ஆளை நீ பாத்திருக்கவே மாட்ட..!!”

“ஓ..!!!!!” சொல்லும்போதே அசோக்கின் அடிவயிற்றில் ஒரு கிலி கிளம்பியது.

“அவர் சின்னப்பையனா இருக்குறப்போ.. அவரோட அக்கா.. அதாவது என் அத்தை.. அவங்க கல்யாணத்துக்கு மொத நாள்.. காதலிச்ச பையனோட ஓடிப் போய்ட்டாங்க..!! அவமானம் தாங்க முடியாம தாத்தாவும் பாட்டியும் தூக்குல தொங்கிட்டாங்க.. அப்பா அநாதை ஆயிட்டாரு..!! அப்போ வந்தது அவருக்கு காதல் மேல வெறுப்பு.. இன்னைக்கு வரைக்கும் அந்த வெறுப்பு அவர் மனசுல கொழுந்துவிட்டு எரிஞ்சுட்டு இருக்கு.. காதலே பிடிக்காது அவருக்கு..!! எந்த அளவுக்கு பிடிக்காதுன்னா.. ஒருதடவை.. எங்க வீட்டு சமயல்காரியும், வாட்ச் மேனும் லவ் பண்றாங்கன்னு என் அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு.. அவ்வளவுதான்.. அப்பாவுக்கு அப்படி ஒரு ஆத்திரம்.. அவங்கள என்ன பண்ணார் தெரியுமா.. அவங்க ரெண்டு பேர் மேலயும் திருட்டுப் பட்டம் கட்டி.. போலீஸ்ல புடிச்சு குடுத்துட்டாரு..!!”

“ஐயையோ..!! அவ்வளவு வெறுப்பா..??”

“ஆமாம்.. சொன்னா நம்ப மாட்ட நீ..!! இதோ.. இங்க பாரேன்..!!”

மீரா சொல்லிக்கொண்டே, தனது இடது கையை அசோக்கின் முன்பாக நீட்டினாள். அவளுடைய உள்ளங்கைக்கு கீழே குறுக்கு வெட்டில் நீளமாக ஒரு தழும்பு..!! பார்த்ததுமே அசோக் பதறிப் போனான்..!!

“ஐயோ.. என்ன மீரா இது.. தழும்பு..??”

“நான் செகண்ட் இயர் படிக்கிறப்போ.. ஒருதடவை அப்பா என்னை பாக்குறதுக்காக எங்க காலேஜுக்கு வந்திருந்தாரு.. அந்த நேரம் பார்த்து நான் என் க்ளாஸ்மேட் பையன் ஒருத்தன்ட்ட சப்ஜக்ட் பத்தி சந்தேகம் கேட்டுட்டு இருந்தேன்.. நாங்க பேசிட்டு இருக்குறதை அப்பா பாத்துட்டாரு..!! அன்னைக்கு நைட்டு அப்பா என் கைல போட்ட சூடுதான் இது..!! ‘இனிமே எவன் கூடவாவது நீ பேசுறதை பாத்தேன்.. கழுத்த நெறிச்சு கொன்னு போட்டுடுவேன்’னு சொன்னாரு..!!” மீரா பரிதாபமாக சொல்ல, அசோக் அவளை பாவமாக பார்த்தான்.

“ச்சே.. உன் அப்பா இவ்வளவு மோசமானவரா..??”

“ம்ம்..!!”

“இப்படி ஒருத்தருக்கு மகளா பொறந்துட்டு.. நீ லவ் பண்ண ஆசைப்படுறதே எனக்கு பெரிய ஆச்சரியமா இருக்கு மீரா..!!”

“அதுக்கு காரணம் இருக்கு..!!”

“என்ன..??”

“சினிமா பாக்ககூடாதுன்னு அப்பா கண்டிஷன் போட்டிருந்தாலும்.. நான் அப்பப்போ என் ஃப்ரண்ட்சோட போய் திருட்டுத்தனமா ஏதாவது சினிமா பாத்துடுவேன்.. அப்படி ரீசண்டா பாத்ததுதான்.. காதல் உல்லாசம்..!!” சோகமாக சொல்லிக்கொண்டிருந்த மீரா, இப்போது திடீரென உற்சாகமாகி..

“ஹேய்.. நீ அந்த படம் பாத்திருக்கியா..??” என்று அசோக்கிடம் கேட்டாள்.

உடனே அசோக்குக்கு சுருக்கென்று இருந்தது. ‘காதல் உல்லாசமா..?? எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே..?? ஆங்.. அன்னைக்கு ஆபீஸ்ல ஃப்ரண்ட்ஸ்லாம் எமோஷனலா பாத்துட்டு இருந்தப்போ.. ‘என்ன எழவெடுத்த படம்டா இது’ன்னு கேட்டனே.. அந்தப்படம்தான..??’

“இ..இல்ல மீரா.. நான் பாத்தது இல்ல..!!”

“ஐயோ.. என்ன பையன் நீ..?? சச் எ க்ரேட் மூவி யு நோ..?? இன்னும் அந்தப்படம் பாக்காம என்ன பண்ணிட்டு இருக்குற..?? நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது.. எப்படியாவது இன்னைக்குள்ள அந்தப்படத்தை நீ பாத்துடனும்.. சரியா..??”

மீரா கட்டளையிடுவது மாதிரி சொல்ல, அசோக்கின் மனதுக்குள் ஒரு கற்பனைப்படம் ஓடியது. தலையை சாய்த்து, கண்களை மேலே சுழற்றி அந்த கற்பனைப்படத்தை கண்டான். ‘மச்சி.. காதல் உல்லாசம்னு ஏதோ மூவி இருக்காமே.. ரொம்ப நைஸ் மூவின்னு மீரா சொன்னா.. இன்னும் அந்தப்படம் பாக்கலையான்னு செல்லமா கோவிச்சுக்கிட்டா..?? உங்கட்ட அந்த மூவி சாஃப்ட் காப்பி இருக்காடா..??’ என்று அசோக் கேட்க, அவனுடைய நண்பர்கள் எல்லாம் அவனை சூழ்ந்து கொண்டு முறைத்தனர். பிறகு ‘த்தூ.. த்தூ.. த்தூ..’ என்று அவன் முகத்திலேயே காறித் துப்பினர்..!! அசோக் படக்கென தலையை சிலுப்பிக் கொண்டான். முகத்தில் இல்லாத எச்சிலை இருகைகளாலும் துடைத்துக் கொண்டான்.

“ஓகே மீரா.. நான் எப்படியாவது பாத்துடறேன்..!! ஆமாம்.. அந்த படத்துக்கும் நீ சொல்ல வந்ததுக்கும் என்ன சம்பந்தம்..??”

“ஆக்சுவலா அந்தப்படம் பாத்ததும்தான் எனக்கு லவ் பண்ற ஆசையே வந்தது.. ‘ச்ச.. காதல்ன்றது இவ்வளவு அற்புதமான விஷயமா.. இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டோமே’ன்னு தோணுச்சு..!! அந்தப்படத்துல ஒரு டயலாக் வரும்.. ‘நமக்கு புடிச்சவங்கள லவ் பண்றதை விட.. நம்மள புடிச்சவங்கள லவ் பண்றதுதான் ரியல் லவ்வு’னு..!! நைஸ் டயலாக்ல..??” மீரா கண்கள் பளபளக்க கேட்க,

“ஹிஹி.. எஸ்..!!” அசோக் வேண்டாவெறுப்பாக இளித்தான்.

“ம்ம்.. அதே மாதிரி நீ எனக்கு கெடைச்ச.. பட்டுன்னு லவ் பண்ணிட்டேன்.. ஐ’ம் ஸோ லக்கி யு நோ..?? ஹாஹா..!!” சொல்லிவிட்டு மீரா சிரித்தாள். பிறகு திடீரென ஞாபகம் வந்தவளாய்,

“ஹேய்.. என் அப்பா பத்தி சொல்லிட்டு இருந்தேன்ல.. டாபிக் மாறிடுச்சு..!!” என்றாள் இன்ஸ்டன்ட் சீரியஸ்னசுடன்.

“இ..இன்னும் அவரை பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு..??”

“இருக்கு..!! ஆக்சுவலா என் அப்பா பத்தி எதுக்கு உன்கிட்ட சொன்னேன் தெரியுமா..??”

“எதுக்கு..??”

“நீ என்னை லவ் பண்றதா இருந்தா.. எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்.. அதுக்குத்தான்..!!”

“எ..எல்லாத்துக்கும்னா..??” அசோக்கிடம் இப்போது நிஜமாகவே ஒரு மிரட்சி.

1 Comment

Add a Comment
  1. அழகான காதல் கதை போல் கெறிகிறது ! மீராவின் கேரக்டர் சிறப்பாக செதுக்கி இருக்கிறிர்கள் இதுவரை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *