எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 6 41

“ச்சே.. லீவ் நாள் ஆனாலே கையில நோட்டு எடுத்துட்டு கெளம்பி வந்துடுறானுக..!!” அசோக்கின் முதுகுக்கு பின்னால் முணுமுணுத்த முறுக்கு மீசை பெரியவர், அவனை பிச்சைக்காரன் போலத்தான் பாவித்தார்.

அசோக் அவ்வளவு அவமானங்களையும் தாங்கிக் கொண்டுதான் ஒவ்வொரு டிக்கெட்டாக விற்க வேண்டி இருந்தது. அடுத்தவர்களுடைய ஏளனப் பார்வை அவனுடைய தன்மானத்தை கிளறி விட்டாலும், மீரா மீதிருந்த காதலுக்காக பொறுத்துக் கொண்டான். ஆனால்.. அவனுடைய பொறுமையை ஒரு பேச்சிலர் பையன், மிக அதிகமாகவே சோதித்து விட்டான். ‘விடுதியில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்.. என்னென்ன வசதிகள் இருக்கின்றன.. எப்படி எல்லாம் நிதி திரட்டுகிறார்கள்..’ என்பது மாதிரி ஆயிரெத்தெட்டு கேள்விகள் கேட்டான். அசோக்கும் மீரா தந்த பிரவுசர் உதவியுடன் அவனுக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்களுக்கு மேல் அசோக்கை கேள்வியால் துளைத்து எடுத்தவன், பிறகு

“ஸாரி பாஸ்.. ஆக்சுவலா நீங்க சொன்ன டேட்ல எனக்கு ஒரு முக்கியமான அப்பாயின்ட்மன்ட் இருக்கு.. இல்லனா கண்டிப்பா இந்த டிக்கெட் வாங்கிருப்பேன்..!! நீங்க ஒன்னு பண்ணுங்க.. நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி ஏதாவது ப்ரோக்ராம் நீங்க நடத்தினா.. அப்போ வந்து என்னை மீட் பண்ணுங்க.. நான் கண்டிப்பா வாங்குறேன்.. ஓகேவா..??” என்று கூலாக சொல்லிவிட்டு பீர் டின் எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தான். அசோக்கோ வெறியாகிப் போனான்.

“ஏண்டா.. நீ குடிக்கிற எம்பது ரூவா பீரு, இன்னும் அரை மணி நேரத்துல பாத்ரூம்ல மூத்திரமா போயிரும்.. ஆதரவு இல்லாத அநாதை புள்ளைங்களுக்கு, அம்பது ரூவா செலவழிக்க மாட்டியா நீ..??”

என்று அவனுடைய உச்சந்தலையிலே ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது. தான் பிரதிநிதியாக வந்திருக்கிற அநாதை விடுதியின் பெயர் கெட்டுப் போகக் கூடாதே என்பதற்காக, பொறுமையாக எழுந்து வந்தான்.

ஆறுமணிக்கு அசோக்கும் மீராவும் மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். மீரா அனைத்து டிக்கெட்டுகளையும் விற்று முடித்திருந்தாள். அசோக்கின் கையில்தான் ஆயிரம் ரூபாய்க்கான டிக்கெட் மீதம் இருந்தது. ஆனால் மீரா அதற்காக அவனை திட்டவில்லை.

1 Comment

  1. அழகான காதல் கதை போல் கெறிகிறது ! மீராவின் கேரக்டர் சிறப்பாக செதுக்கி இருக்கிறிர்கள் இதுவரை !

Comments are closed.